கோவிட் -19 பெருந்தொற்றைச் சமாளிக்க, “அவசரக்கால அறிவிப்பை” அமல்படுத்த அமைச்சரவை ஒப்புக்கொண்டது.
புத்ராஜெயாவில், பிரதமர் முஹைதீன் யாசின் தலைமையில் இன்று நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் இந்த விவகாரம் முடிவு செய்யப்பட்டது.
“அறிவிப்புக்காக காத்திருங்கள்,” என்று மலேசியாகினி தொடர்பு கொண்டபோது பெயர் குறிப்பிட மறுத்த ஓர் அமைச்சர் கூறினார்.
நாட்டில் நிலவிவரும் நிச்சயமற்றத் தன்மையையும், வெளியிலிருந்தும் உள்ளிருந்தும் முஹைதீன் எதிர்கொள்ளும் அழுத்தங்களைத் தொடர்ந்தும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிகிறது.
அதற்கான ஒப்புதலைப் பெற, முஹைதீன் மாமன்னரைச் சந்திப்பார் என்று மலேசியாகினி -க்குத் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், இந்த விஷயத்தை இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லை.
“இது ஊரடங்கு உத்தரவு அல்ல என்பதால் பொதுமக்கள் கவலைப்பட வேண்டியதில்லை. அவர்கள் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட செந்தர இயங்கு நிலைக்கு (SOP) இணங்க, வழக்கம்போல தினசரி தேவைகளைப் பூர்த்தி செய்ய வீட்டை விட்டு வெளியேறலாம்,” என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையே, தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் மற்றும் சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா இருவரும், இன்று மாலை திட்டமிடப்பட்ட தினசரி பத்திரிகையாளர் சந்திப்புகளை இரத்து செய்துள்ளனர்.
அதற்கான காரணத்தை எந்தவொரு தரப்பினரும் தெரிவிக்கவில்லை.