இன்று 10 இறப்புகள், மிக உயர்ந்த மரண எண்ணிக்கை பதிவு

கோவிட் -19 : இன்று நாட்டில் மொத்தம் 710 புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இன்று, இத்தொற்றுநோய்க்குப் பலியானவர் எண்ணிக்கை 10. இந்நோய் நாட்டைத் தாக்கியதில் இருந்து, மிக அதிகமான மரண எண்ணிக்கை இன்று பதிவாகியுள்ளது.

சபா ஆக அதிகமாக, 528 பாதிப்புகளைப் பதிவு செய்து, தொடர்ந்து அதிகப் பாதிப்புக்குள்ளான மாநிலமாகத் திகழ்கிறது. இன்றைய மரணச் சம்பவங்களில் 8 சபாவில் நேர்ந்தவை.

மேலும் இரண்டு மரணங்கள், லாபுவான் மற்றும் கெடாவில் பதிவாகியுள்ளன. ஆக, இதுவரை நாட்டில் கோவிட் -19-க்குப் பலியானவர் எண்ணிக்கை 214.

62 புதியப் பாதிப்புகளுடன் சிலாங்கூர் இரண்டாம் நிலையிலும், 39 புதியத் தொற்றுகளுடன் பினாங்கு அடுத்த நிலையிலும் உள்ளன.

மீதமுள்ள புதியத் தொற்றுகள், முறையே, நெகிரி செம்பிலானில் 37, லாபுவானில் 19, கோலாலம்பூரில் 10, பேராக் மற்றும் ஜொகூரில் 4, திரெங்கானு மற்றும் சரவாக்கில் 2, கெடா மற்றும் பஹாங் 1 எனப் பதிவாகியுள்ளன.

90 நோயாளிகள் தீவிரச் சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 28 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.