இயங்கலை நாடாளுமன்றக் கூட்டத்தொடரை நிராகரித்தார், அஸார் மீது விமர்சனம்

நாடாளுமன்றக் கூட்டத்தொடரை இயங்கலையில் (online) நடத்த முடியாது என்று வலியுறுத்தியதால், சபாநாயகர் அஸார் அஸீஸான் ஹருண் இன்று சமூக ஊடகங்களில் பலரின் விமர்சனங்களுக்கு ஆளானார்.

மலேசியாவிற்கு ஆஸ்திரேலியாவைப் பின்பற்றுவதற்கான ஒரு திட்டம் இருந்தபோதிலும் – அவர்களின் எம்.பி.க்கள் சிலர் இயங்கலை வீடியோ வழி கூட்டம் நடத்த அனுமதித்தல் – அதை நம் நாட்டில் செயல்படுத்த முடியாது என்று அஸார் விளக்கினார்.

ஆஸ்திரேலியாவில், கலந்துகொள்ளாத எம்.பி.க்கள் கோரத்தின் ஒரு பகுதியாக கணக்கிடப்படுவதில்லை, அதில் தலையிட முடியாது, 15 நிமிடங்களுக்கு முன்னதாக அறிவிப்பு தேவை, அவர்கள் வாக்களிக்க முடியாது என்று அசார் விளக்கினார்.

“அதனால்தான் தற்போதைய சட்டத் திட்டத்திற்கு ஏற்ப (மக்களவைக் கூட்டத்தொடர்) நேருக்கு நேர் நடத்தப்பட வேண்டும் என்று நான் கூறுகிறேன்,” என்று அவர் நேற்று நியூ ஸ்ட்ரெய்ட் டைம்ஸிடம் (என்எஸ்டி) தெரிவித்தார்.

நாட்டில் இயங்கலைக் கூட்டங்கள் நடத்துவதற்கு ஏதுவாக, கூட்டத்தின் விதிகள் திருத்தப்பட வேண்டும் என்பதை லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் பாஹ்மி ஃபட்ஸில் ஒப்புக் கொண்டார்.

அஸாரின் விளக்கம் கடந்த வாரம் முதல் தி ஸ்டார், பெரித்தா ஹரியான் மற்றும் என்எஸ்டி போன்ற ஊடகங்களில் வெளியிடப்பட்டது மற்றும் விரிவான தகவல்கள் ஏதும் இல்லாமல், நேற்று பிஎஃப்எம் வானொலி நிலையத்தால் அது தடுக்கப்பட்டது.

அஸாரின் இக்கூற்றினால் விரக்தியடைந்த பலர் சமூக ஊடகங்களில் அவரை விமர்சித்தனர்.

பள்ளியில் உள்ள அவரது குழந்தைகள் இயங்கலையில் கற்றலைப் பின்பற்ற முடியும் என்றால், எம்.பி.க்களும் அவ்வாறு செய்ய முடியும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

குறைந்தபட்சம் முயற்சி செய்யுமாறு பரிந்துரைத்ததோடு; பெரிய குழுக்களுக்கிடையே வெற்றிகரமாக செயல்படுத்த முடியும் என்பதனை சில வீடியோ மாநாடுகள் நிரூபித்துள்ளது என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

டிஜிட்டல் நாடாளுமன்ற அமர்வை வெற்றிகரமாக நடத்தியுள்ள தரப்பினருடன்  பேச்சுவார்த்தை நடத்துமாறும் அவர்கள் பரிந்துரைத்தனர்.

நவம்பர் 6-ம் தேதி, 2021 வரவுசெலவுத் திட்டத்தை முன்வைப்பதற்கு முன்னர் நவம்பர் 2-ஆம் தேதி, மக்களவை அமர்வு மீண்டும் தொடங்கப்பட வேண்டும். வரவுசெலவுத் திட்டத்தை அங்கீகரிக்க, போதுமான ஆதரவைப் பெறுவதற்கு முஹைதீன் யாசின் அரசாங்கம் ஒரு பெரிய சவாலை எதிர்கொண்டுள்ளது என்று பார்வையாளர்கள் நம்புகின்றனர்.

நவம்பர் 17-ம்ம் தேதி, அது ஏற்றுக்கொள்ளப்படுமா அல்லது நிராகரிக்கப்படுமா என்பது குறித்து வாக்களிக்கப்படுவதற்கு முன்னர், எம்.பி.க்களால் விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இருப்பினும், புத்ராஜெயா அவசரக்கால உத்தரவை அமல்படுத்தினால் மக்களவை அமர்வு நடைபெறாது.