நேற்று, அவசரகாலத்தைப் பிரகடனம் செய்யவுள்ளதாக பிரதமர் முஹைதீன் யாசின் செய்த அறிவிப்பு தங்களுக்குக் கவலையளித்துள்ளதாக ‘சிஎஸ்ஓ சீர்திருத்தத்திற்கான தளம்’ (CSO Platform for Reform) எனும் கூட்டமைப்பு இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அந்த அறிவிப்பைச் செய்வதற்கு, உகந்த நேரம் இதுவல்ல, அதுமட்டுமின்றி, அரசியல் சூழலும் அதற்கு ஏற்றதாக இல்லை என்று அவ்வமைப்பு கூறியுள்ளது.
“நாட்டில், இந்த வாரத்தில், ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான கோவிட் -19 நோய்த்தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன, அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர், அதிக எண்ணிக்கையிலான இறப்புகளும் இவ்வாரம் பதிவாகியுள்ளன.
“அதேசமயம், வேலை மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்கான நிச்சயமற்ற அல்லது தொடர்ந்து மாறிவரும் தேவைகளுடன், சபா மற்றும் சிலாங்கூர் மக்கள் தொற்றுநோயின் தொடர்ச்சியான அச்சுறுத்தலுடன் போராடி வருகிறார்கள்.
“இந்நிலையில், கோவிட்-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு, அவசரக்கால நிலை தேவை என்ற ஆலோசனையால் மலேசியர்கள் ஏமாறப்போவதில்லை,” என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (எம்.சி.ஓ) அமலில் இருந்தபோது, பல சிரமங்கள் மற்றும் சவால்களை எதிர்கொண்டபோதும், கடைப்பிடிக்கப்பட்ட சட்ட மற்றும் அமலாக்க வழிமுறைகளுடன், கோவிட் -19 தொற்றை எதிர்த்து மலேசியாவால் போராட முடியும் என்பதை நாம் உலகுக்கு நிரூபித்துள்ளோம் என்று அந்தக் கூட்டமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.
“கோவிட் -19 பெருந்தொற்றுக்கு எதிரான மலேசியப் போராட்டத்தின் ஒரே தோல்வி, அத்தொற்று பரவுவதைத் தடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை அரசியல்வாதிகள் மீறும் போது, அவர்கள் அனுபவிக்கும் சட்டப்பூர்வச் சலுகைகளே.
“கோவிட் -19 தொற்றை எதிர்த்துப் போராட அவசரகால நிலை தேவையில்லை என்பதற்கான தெளிவான ஆதாரங்களுடன், பெரும்பாலான மலேசியர்களின் மனதில் ஒரு பகுத்தறிவு விளக்கமும் உள்ளது.
“நாட்டைத் தனது ஆட்சித்திறனால் நிர்வகிக்க இயலாத தேசியக் கூட்டணி அரசாங்கம், தொடர்ந்து ஆட்சியில் நிலைத்திருக்க செய்யும் ஓர் அரசியல் சூழ்ச்சியாகவே மலேசியர்களால் இது கருதப்படுகிறது,” என்று அது குற்றஞ்சாட்டியுள்ளது.
அவசரகால நிலை, இப்போது நாடாளுமன்றத்தில், பிரதமருக்கும் அவரது நிர்வாகத்திற்கும் எதிரான சவால்களைத் தடுக்கவும், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள 2021 வரவு செலவுத் திட்டம் குறித்த நாடாளுமன்றத்தின் ஆய்வு மற்றும் விவாதத்தைத் தவிர்க்கவும் மட்டுமே ஒரு வாய்ப்பாக அமையுமென அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டபப்ட்டுள்ளது.
மக்களவை சபாநாயகரை மாற்றுவதற்கான வாக்கெடுப்பில், 111 – 109 எனப் பிரதமர் தப்பிப்பிழைத்தபோது, அது குறைந்தபட்சம் நிர்வாகத்திற்கு ஒரு நியாயத்தன்மையை அளித்தது. ஆனால், மக்களவையில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பைத் தவிர்ப்பதற்காக, நிர்வாகம் அவசரகால நிலையை அறிவிக்கும் என்றால், தேசியக் கூட்டணி அரசாங்கம் ஒரு சட்டவிரோத அரசு என்ற கருத்து அனைத்து தரப்பினருக்கும் ஏற்படுவதோடு, அரசியல் சமரசத்திற்கான அனைத்து முயற்சிகளையும் அது தடுத்து நிறுத்தும் என்று அவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
மேலும், எம்.பி.க்களின் ஆய்வு மற்றும் கருத்துகள் இல்லாமல், தற்போதைய நிர்வாகத்தால் வரவு செலவு திட்டம் நிறைவேற்றபட்டால், நாட்டின் பொருளாதாரத் தேவைகளைப் பொதுமக்கள் சிறப்பாக நிறைவுசெய்ய முடியாத ஒன்றாக அது மாறிவிடும்.
மக்களவையில், தேசத்தின் நலனை அடிப்படையாகக் கொண்ட, விரிவான மற்றும் வலுவான விவாதங்களாலேயே, நாட்டின் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும், உலகளாவியத் தொற்றுநோயிலிருந்து மலேசியாவை விடுவிக்க முடியும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
அவசரகால அறிவிப்பு என்பது முஹைதீன் யாசின் மற்றும் அவரது அரசியல் கூட்டாளிகள் மலேசியர்களுக்கு இழைக்கும் மற்றுமொரு துரோகச்செயலாகும். இம்முறை, 14-வது பொதுத் தேர்தலில், மக்கள் வைத்திருந்த நம்பிக்கையைக் குழிதோண்டி புதைத்தது மட்டுமல்லாமல், தேசத்தின் நலன் மற்றும் நல்வாழ்வைப் பாதுகாப்பதற்காகத் தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் போராடிய முனைமுகப் பணியாளர்களின் தியாகத்திற்கும் இழைத்த துரோகமாகவே இது கருதப்படும்.
“மலேசியாவை இன்று இருக்கும் இடத்திற்கு கொண்டுச்செல்ல அனைத்து தரப்பு மலேசியர்களும் தியாகம் செய்துள்ளனர். கோவிட்-19 நெருங்காமல் இருக்க முனைமுகப் பணியாளர்கள் பல தியாகங்களைச் செய்துள்ளனர். நமது தியாகங்கள் அனைத்தையும் பாழாக்க, தேசியக் கூட்டணியை நாம் அனுமதிக்க முடியாது. சட்டமுறைப்படி ஆட்சி செய்யும் ஒரு ஜனநாயக மலேசியாவுக்காகதான் நாம் போராடினோம், அரசியல் கருத்து வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல், அந்த நோக்கத்தில் நாம் உறுதியாக இருப்போம்,” என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
‘சிஎஸ்ஓ சீர்திருத்தத்திற்கான தளம்’ கூட்டமைப்பு வெளியிட்டுள்ள இந்த அறிக்கைக்குச் ‘சுவாராம்’ மற்றும் ‘கோமாஸ்’ போன்ற சமூக அமைப்புகளும் ஒப்புதல் அளித்துள்ளன.