அவசரகாலப் பிரகடனம் : மற்ற மலாய் ஆட்சியாளர்களுடன் மாமன்னர் கலந்துரையாடுவார்

நேற்று, பிரதமர் முஹைதீன் யாசின் தெரிவித்த அவசரகாலத் திட்டம் குறித்து, மாட்சிமை தங்கியப் பேரரசர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷா, மற்ற மலாய் ஆட்சியாளர்களுடன் கலந்துரையாடுவார் என அரண்மனை பேச்சாளர், அஹ்மத் ஃபாடில் சம்சுதீன் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கோவிட் -19 தொற்றுநோயை எதிர்கொள்வதில் அரசு நிர்வாகத்தின் அவசியத்தையும், நாட்டின் தற்போதைய சூழல் காரணமாக மக்களின் கவலையையும் சுல்தான் அப்துல்லா முழுமையாகப் புரிந்துகொண்டுள்ளார் என்று அஹ்மத் ஃபாடில் கூறினார்.

“எனவே, பிரதமருடனான நேற்றைய சந்திப்பிற்குப் பின், இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த, மலாய் ஆட்சியாளர்களை மன்னர் அரண்மனையில் சந்திக்கவுள்ளார்.

“இந்தச் சூழ்நிலையை எதிர்கொள்ள, பீதி அடையாமல், அமைதி காக்கும்படி அனைத்து மக்களையும் அல்-சுல்தான் அப்துல்லா அறிவுறுத்தினார்,” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் மற்றும் நாட்டின் அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் எந்தவொரு ஊகத்தையும் உருவாக்க வேண்டாம் என்றும் மக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது என்றார் அவர்.

நேற்று, முஹைதீன் சுல்தான் அப்துல்லாவைப் பஹாங், குவாந்தானில் உள்ள இஸ்தானா அப்துல் அசிஸில் சந்தித்தார், அச்சந்திப்பு “அவசரநிலை” அறிவிப்பு தொடர்பானது என்று நம்பப்படுகிறது.