டாக்டர் எம் : அவசரநிலை அறிவிப்பு, முஹைதீனுக்கு மட்டுமே கூடுதல் இலாபம்

அவசரகால அறிவிப்பால் கோவிட் -19 தொற்றுநோயைத் தடுக்க முடியாது, மாறாக, அதனால் பிரதமருக்குக் கூடுதல் அதிகாரம் மட்டுமே வழங்க முடியுமென டாக்டர் மகாதீர் முகமது கூறினார்.

அமைச்சரவையில் பல எம்.பி.க்களை வைத்திருந்த போதிலும், நாட்டில் அரசியல், பொருளாதார, சமூகப் பிரச்சனைகளைக் கையாள்வதில் அந்தப் பெர்சத்து தலைவர் தோல்வியே கண்டுள்ளார் என்று மகாதீர் தெரிவித்தார்.

“அவரிடம் ஒரு பெரிய அமைச்சரவை உள்ளது, ஆனால், மக்கள் மற்றும் நாட்டின் நல்வாழ்வுக்கு அவர்களால் எதையும் பங்களிக்க முடியவில்லை,” என்று மகாதீர் தனது வலைப்பதிவில் தெரிவித்துள்ளார்.

“தொற்றுநோயைத் தடுக்க, இப்போது நாம் செய்வதை விடவா அவசரநிலை செய்துவிட முடியும்? எதுவும் இல்லை,” என்று அவர் மேலும் கூறினார்.

நேற்று, நாட்டில் அவசரநிலையை அறிவிக்க அமைச்சரவை ஒப்புக்கொண்ட பின்னர், முஹைதின் மாமன்னரைச் சந்தித்தார்.

ஒருசில அமைச்சர்கள், கோவிட் -19 பெருந்தொற்றைக் கையாள இம்முடிவு எடுக்கப்பட்டது என ஆதரித்தனர். அதே வேளையில், முஹைதின் மற்றும் பெர்சத்து ஆட்சி அதிகாரத்தில் தொடர்ந்து நீடிக்க மேற்கொள்ளப்பட்ட சதி இதுவென எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர்.

இதற்கிடையில், அல் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷாவும் மலாய் ஆட்சியாளர்களுடன் முஹைதீன் சமர்ப்பித்த திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக இன்று அறிவித்தார்.

மக்களின் தேர்வு அல்ல

மகாதீரின் கூற்றுப்படி, இதற்கு முன்பு, கோவிட் -19 நோய்த்தொற்று நாடாளுமன்றக் கூட்டத்தொடரை ஒத்திவைக்கவும், அமர்வைச் சுருக்கவும், விவாதத்தைத் தவிர்க்கவும் அரசாங்கத்தால் பயன்படுத்தப்பட்டது.

“இப்போது, அது அவசரநிலையை அறிவிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், தற்போது அரசாங்கம், அத்தொற்றுநோயைச் சமாளிக்கக்கூடிய வலுவைப் பெற்றுள்ளது.

“அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் நடப்பதைப் போல, மக்கள் எதிர்ப்பை (நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை – பி.கே.பி.) நாம் எதிர்கொள்ளவில்லை.

“நம் மக்கள் பி.கே.பி. போன்ற அனைத்து தடை உத்தரவுகளுக்கும் எப்போதும் இணங்குகிறார்கள்,” என்று அவர் கூறினார்.

மகாதீரின் கூற்றுப்படி, தற்போதைய அரசாங்கம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை, ஜனநாயகத்தின் பாதையில் செல்லாமல் அதிகாரத்தில் உள்ளது.

அப்படியிருந்தும், இப்போது அவர்களுக்கு முக்கியமானதாக இருப்பது அதிகாரத்தில் நீடிப்பது மட்டுமே என்று அவர் கூறினார்.

“வீழ்த்தப்படும் சாத்தியம் உள்ளதால், பிரதமர் அவசரகால உத்தரவின் கீழ் தொடர்ந்து ஆட்சியில் இருக்க விரும்புகிறார்.

“இந்த அவசரநிலை உத்தரவினால் பிரதமருக்கு மட்டுமே இலாபம். ஏனென்றால், நாடாளுமன்றம் முடங்கிவிடும், தான் பிரதமராக இருப்பது அரண்மனையின் விருப்பம் என்று அவர் கூறுவார்,” என்று அவர் கூறினார்.