அவசரகாலம் அறிவிக்கப்பட்டாலும், மக்களவை எப்போதும்போல கூடவும், செயல்படவும் முடியும் என்று முன்னாள் அட்டர்னி ஜெனரல் தோமி தோமஸ் கூறினார்.
நாடாளுமன்றத்தை இடைநிறுத்தி, 2021 வரவு செலவுத் திட்டத்தை, நிர்வாக முடிவோடு அரசாங்கம் செயல்படுத்தினால், அந்நடவடிக்கை அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று தோமி தோமஸ் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசியலமைப்பின் பிரிவு 150 (3), பிரிவு 150 (5) மற்றும் பிரிவு 150 (9) ஆகியவற்றை மேற்கோளிட்ட தாமஸ், அவ்வாறு கலைக்கப்படாவிட்டால், நாடாளுமன்றம் சாதாரணமாக செயல்பட முடியும் என்று தெரிவித்துள்ளார்.
“தற்போது, அவசரகால அறிவிப்பு எதிர்பார்த்த முடிவுகளைத் தராது என்பது தெளிவாகத் தெரிகிறது. நாடாளுமன்றம் தனது கடமைகளை நிறைவேற்றியே ஆகவேண்டும்.
“எனவே, 2021 வரவு செலவு திட்டத்தை விவாதிக்க, நாடாளுமன்றக் கூட்டத்தொடரைத் திட்டமிட்டபடி, நவம்பர் தொடக்கத்தில் நடத்த வேண்டும்,” என்று அவர் கூறினார்.
கோவிட் -19 தொற்றுநோயை எதிர்த்துப் போராட, அவசரகால நிலையை அறிவிக்கும் திட்டத்திற்கு, அமைச்சரவை ஒப்புக்கொண்டதாக நேற்று கூறப்பட்டது.
நேற்று, இதுகுறித்து பேச, பிரதமர் பேரரசரைச் சந்தித்ததாகக் கூறப்பட்டது, ஆனால், கூட்டத்தின் விவரங்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
நாடாளுமன்றத்தை இடைநிறுத்தம் செய்யும் வகையில், அவசரநிலை அறிவிக்கப்படும் என்ற ஊகங்களை அரசாங்கம் இதுவரை உறுதிப்படுத்தவில்லை, அதேசமயம் மறுக்கவும் இல்லை.
இந்நிலையில், 2021 வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பு நவம்பர் 17-ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, 2021 வரவுசெலவுத் திட்டத்தை அங்கீகரிக்கச் செய்ய, தனது எதிரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு முஹைதீன் யாசினைத் தாமஸ் வலியுறுத்தினார்.
“இந்தப் பிரச்சினை 222 எம்.பி.க்களால் உருவாக்கப்பட்டது. எனவே, தீர்வு அவர்களின் கைகளில்தான் உள்ளது.
“இதன்பொருள், பிரதமரும் அவரது அரசியல் எதிரிகளும், ஓர் ஒற்றுமை அரசாங்கத்திற்காகப் பேரம் பேசுவதற்கும், பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் அடுத்த ஒரு வாரத்தை ஒதுக்க வேண்டும், அவர்கள் அதை ஒருமித்த மற்றும் சமரச மனப்பான்மையுடன் செயல்படுத்த வேண்டும்.
“நீங்கள் பிரதிநிதித்துள்ள மலேசியர்கள், தற்போதைய சூழ்நிலையில் உண்மையில் வெறுப்படைந்துள்ளனர். அரசியல்வாதிகளின் இலட்சியம் மற்றும் பேராசை காரணமாக மட்டுமே அவசரகால அறிப்பு என்பது, நாம் விரும்பும் கடைசி விஷயம்,” என்று அவர் கூறினார்.
தோமஸின் முழுக் கட்டுரையை இங்கு படிக்கலாம் .