அரசியல் உறுதியற்ற தன்மை, அவசரகாலப் பிரகடனம் – மக்கள் இரண்டையும் விரும்பவில்லை

கருத்து | அடுத்த 3 மாதங்களுக்குள் பொதுத் தேர்தல் நடத்தப்படுவதைப் பெரும்பாலான மலேசியர்கள் விரும்பவில்லை.

சபா மாநிலத் தேர்தலினால், கோவிட் -19 நோய்த்தொற்று எண்ணிக்கையில் வியத்தகு அதிகரிப்பு ஏற்பட்டது, அதனால் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.பி.) பிரப்பிக்கப்பட்டு, சில பகுதிகளில் பயணக் கட்டுப்பாடுகள் உருவாகி, மில்லியன் கணக்கான குடும்பங்களில் பொருளாதார நெருக்கடிகளுக்கு அது வழிவகுத்தது. கோவிட்-19 தொற்றுநோய் கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் போவதை மலேசியர்கள் ஒட்டுமொத்தமாக விரும்பவில்லை.

முஹைதீன் யாசினுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்க, அன்வர் இப்ராஹிமுக்குப் போதுமான நாடாளுமன்ற ஆதரவு இருந்தால் அவர் புதிய அரசாங்கத்தை அமைக்கலாம். ஆனால், அன்வர் உருவாக்கும் அரசாங்கம் நிலையானதாக இருக்காது எனப் பலர் கருதுகின்றனர்.

ஏனெனில், அவரது கூட்டணியில் இணைந்த பக்காத்தான் ஹராப்பான் அல்லாத உறுப்பினர்கள், ஏற்கனவே முஹைதீனுக்கு ஆதரவு வழங்கிய அதே எம்.பி.க்கள் தான். பொதுத் தேர்தலை நடத்த சரியான நேரம் என்று அவர்கள் உணரும்போது, அன்வருக்கான ஆதரவை அவர்கள் திரும்பப் பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

நாடாளுமன்றத்தில் அன்வர் மற்றும் அவரது ஆதரவாளர்களின் அரசியல் தந்திரங்கள், அதிகரித்துவரும் கோவிட் -19 பாதிப்புகளை முறையாகக் கட்டுபடுத்துவதற்கு முன், பொதுத் தேர்தலுக்கு வழிவகுத்துவிடும் என்ற கவலையின் அடிப்படையில், மக்களில் சிலர் 6 மாதகால அவசரநிலை பிரகடனத்தை ஏற்றுக்கொள்வது நல்லது எனக் கருதுகின்றனர்.

இந்த நேரத்தில், “நாடு தளுவிய அளவில், அவசரநிலையை அறிவிப்பு, நாட்டில் பாதுகாப்பு, அல்லது பொருளாதார வாழ்க்கை அல்லது கூட்டமைப்பிற்குள் பொது ஒழுங்கை ஏற்படுத்தும்” [கூட்டாட்சி அரசியலமைப்பின் பிரிவு 150 (1)] என அவர்கள் நம்பலாம்.

இருப்பினும், நாடாளுமன்றத்தை 6 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்ய விரும்பாத பல மலேசியர்களும் உள்ளனர்.

கோவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான போராட்டம் சிக்கலானது, ஆக, கேள்விகள் கேட்பதற்கும், மாற்றுத் திட்டங்களைக் கொண்டு வருவதற்கும் மட்டுமின்றி, பொதுவாக நம் நாட்டின் கொள்கை வகுப்பாளர்களுக்குத் தேவையான ஆய்வுகள் மற்றும் சமநிலைகளை வழங்க நாடாளுமன்றத்தில் நமக்கு எதிர்க்கட்சியினர் தேவை என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அவசரகாலப் பிரகடனம் நாடாளுமன்றத்தின் குரலை மௌனமாக்கிவிடும், விவாதத்திற்குரிய அரசாங்க கொள்கைகள் மற்றும் திட்டங்கள் அனைத்தும் அவசர காலத்தில் இல்லாமல் மறைந்துவிடும், இது நம் அனைவருக்கும் நட்டமாகும்.

அதுமட்டுமின்றி, அவசரகாலப் பிரகடனம், நிர்வாகக் குழுவின் கைகளில் அதிகாரத்தைக் குவிக்கும். இது அரசாங்கத்தில், மேலும் சர்வாதிகார மற்றும் அடக்குமுறை போக்குகளுக்கு வழிவகுக்கும். அவசரநிலை என்பது மலேசியர்களின் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படுவதைக் குறிக்கும்.

இந்தச் சிக்கலுக்கு ஒரு தீர்வு இருக்கிறது, ஆனால் அதற்கான வாய்ப்பு சற்று குறுகியது.

அடுத்த 6 மாதங்களுக்குத் தேசியக் கூட்டணி அரசாங்கத்தைக் கவிழ்க்க முயற்சிக்க மாட்டோம் என்று மாமன்னருக்கும் நாட்டு மக்களுக்கும் பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் வாக்குறுதி அளிக்க வேண்டும் – அதாவது, அவர்கள் எந்த நம்பிக்கையற்றத் தீர்மானத்தையும் முன்மொழிய மாட்டார்கள், அல்லது 2021 வரவு செலவு திட்டத்தை முறியடிக்க முயற்சிக்க மாட்டார்கள் என்று.

அதேசமயம், 6 மாதகாலம் நிறைவடைந்த பின்னர், நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டால் அதனைத் தனது அரசாங்கம் தடுக்காது என்பதை முஹைதீன் யாசின் ஒப்புக்கொள்ள வேண்டும்.

மேலே குறிப்பிட்டுள்ள ஒப்பந்தம், பல நோக்கங்களுக்கு உதவும் – இது பொதுத் தேர்தல் அண்மையில் நடைபெறும் அபாயத்தைத் தவிர்க்கும், அதே நேரத்தில், கோவிட் -19 பெருந்தொற்றைச் சமாளிக்க நாடாளுமன்றத்தில் திட்டங்கள் வகுக்கவும் அனுமதிக்கும்.

இந்தக் கால கட்டத்தில் இது சிறந்த ஆலோசனையாக இருக்கலாம். ஆனால், இந்த ஒருமித்தக் கருத்தை ஏற்றுக்கொள்வதற்குத் தலைமை பதவிகளில், போதுமான அரசியல்வாதிகள் நம்மிடம் இருக்கிறார்களா என்பதுதான் இப்போதையக் கேள்வி.


டாக்டர் ஜெயக்குமார் தேவராஜ், தேசியத் தலைவர், மலேசிய சோசலிசக் கட்சி