ஐடிஇ கண்ணோட்டம்: பெரும்பான்மையினர் அவசரகாலப் பிரகடனத்தை எதிர்கின்றனர்

பெரும்பான்மையினர் அவசரகால அறிவிப்பை நிராகரிப்பதாக, சிலாங்கூர் மாநில அரசின் ஆராய்ச்சி அமைப்பான இன்ஸ்டிட்யூட் டாருல் ஏசான் (ஐடிஇ) மேற்கொண்ட ஆய்வு காட்டியது.

ரக்யாட் மலேசியா பெர்சுவாரா’ (மலேசியர்கள் பேசுங்கள்) என்று பெயரிட்டு, புலனம், டுவிட்டர், முகநூல், மின்னஞ்சல், வலைத்தளம் மற்றும் தெலிகிராம் போன்ற மின்னணு முறையில் இணைக்கப்பட்டு, அந்த ஆய்வு செய்யப்பட்டது.

“2020, அக்டோபர் 24 சனிக்கிழமை மாலை 4:00 மணி முதல் நள்ளிரவு 12:00 மணி வரை (8 மணி நேரம்), பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த மலேசியர்கள் இந்த ஆய்வில் பங்கெடுத்தனர்.

“நள்ளிரவு 12:00 மணி நிலவரப்படி, 51,147 பேர் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்றுள்ளனர்,” என்று ஐடிஇ தெரிவித்துள்ளது.

“அவசரகால அறிவிப்புக்கு நீங்கள் உடன்படுகிறீர்களா?” என்ற கேள்விக்கு, 11,560 பேர் (32.49%) மட்டுமே “ஆம்” என்று பதிலளித்தனர், மொத்தம் 39,587 பேர் (77.71%) “இல்லை” என்று பதிலளித்தனர்.

“இரவு 8:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை மிக அதிகமானோர் இந்த ஆய்வில் பங்கெடுத்துள்ளனர்.

இருப்பினும், ஐடிஇ அதன் கணக்கெடுப்பு முறையை விவரிக்கவில்லை.

பங்கேற்பாளர்களில் 16,617 பேர் (32.49%), பிரதமராக இருப்பதற்கு முஹைதீன் சிறந்த தேர்வு என்றும், 25,469 பேர் (49.80%) அன்வர் இப்ராஹிமை பிரதமராக நியமிப்பதே சரியான நடவடிக்கை என்றும் கூறியுள்ள வேளை, 9,061 பேர் (17.71%)  நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, 15-வது பொதுத் தேர்தல் நடைபெற வேண்டும் என்று வாக்களித்துள்ளனர்.

“ஆய்வின் அடிப்படையில் பார்க்கும் போது, அவசரகாலப் பிரகடனத்தை ஆதரிக்கும் பெரும்பான்மையினர் முஹைதீன் யாசின் பிரதமராக இருக்க ஆதரவளிப்பவர்கள்; அவசரநிலையை நிராகரிப்பவர்கள், அன்வர் இப்ராஹிமைப் பிரதமராகத் தேர்வு செய்ய விருப்பம் கொண்டவர்கள்,” என்று ஐடிஇ கண்டறிந்துள்ளது.