மாமன்னர் : அவசரநிலை அறிவிப்பு தேவையில்லை

இந்த நேரத்தில் மலேசியாவில் அவசரகால நிலையை அறிவிக்க வேண்டிய அவசியமில்லை என்று மாட்சிமை தங்கியப் பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா சுல்தான் ஹாஜி அகமது ஷா கூறினார்.

தற்போதைய அரசாங்கம், கோவிட் -19 தொற்றைக் கட்டுப்படுத்த, அமலாக்கக் கொள்கைகளையும் நடவடிக்கைகளையும் தொடர்ந்து செயல்படுத்தும் என மாமன்னர் நம்பிக்கை தெரிவித்ததாக, அரண்மனை பேச்சாளர், அஹ்மத் ஃபதில் ஷம்சுதீன் கூறினார்.

அவசரகால விண்ணப்பம் குறித்து, மலாய் ஆட்சியாளர்களுடன் கலந்துரையாடி, நாடு எதிர்கொள்ளும் நிலைமையைப் பார்த்தபின், தற்போதைய அரசாங்கம் இந்த தொற்றுநோயைத் திறம்பட சமாளித்து வருவதை தாம் உணர்வதாக அல்-சுல்தான் அப்துல்லா கூறியதாக அவர் சொன்னார்.

“கோவிட் -19 தொற்றுநோய் மேலும் பரவாமல் தடுப்பதற்கான அமலாக்க நடவடிக்கைகளை, பிரதமரின் தலைமையில், அரசாங்கத்தால் தொடர்ந்து செயல்படுத்த முடியுமென மாமன்னர் உறுதியாக நம்புகிறார்.

அவசரகால நிலை அறிவிக்கப்படவில்லை என்றாலும், நாட்டின் அரசாங்க நிலைத்தன்மைக்கு இடையூறு விளைவிக்கும் அனைத்து அரசியல் நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்துமாறு, மன்னர் அரசியல்வாதிகளுக்கு நினைவூட்டியுள்ளார்.

“தற்போதுள்ள அரசாங்கத்தின் நிலைத்தன்மைக்கு இடையூறு விளைவிக்கும் பொறுப்பற்ற நடவடிக்கைகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர வேண்டிய அவசியமில்லை என்பதும் அல்-சுல்தான் அப்துல்லாவின் கருத்து” என்றும் அவர் கூறினார்.

அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படவுள்ள 2021 வரவுசெலவுத் திட்டம், கோவிட் -19 தொற்றுநோயை நிவர்த்தி செய்து, நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க, மக்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்று என்றும் மன்னர் வலியுறுத்தினார் என்று அஹ்மத் ஃபதில் தெரிவித்தார்.