பிரதமர் முஹைதீன் யாசின், சிலாங்கூர் மந்திரி பெசார் (எம்.பி.) அமிருதீன் ஷாரியை நாளையக் கூட்டத்திற்கு அழைத்திருப்பதை எம்.பி.யின் உதவியாளர் உறுதிப்படுத்தினார்.
அவசரகாலத்தை அறிவிக்க வேண்டிய அவசியமில்லை என்று மாமன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷா முடிவு செய்துள்ளதாக, அரண்மனை இன்று பிற்பகல் தெரிவித்ததை அடுத்து, இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாளை, காலை 9.30 மணியளவில், புத்ராஜெயாவில் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
கோவிட் -19 தொடர்பான தேசியப் பாதுகாப்பு மாநாட்டு (என்.எஸ்.சி) கூட்டத்திற்கு அமிருதீன், நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் அமினுதீன் ஹருன் மற்றும் பினாங்கு முதலமைச்சர் ச்சோவ் கோன் யோவ் அழைக்கப்படாதது குறித்து, டிஏபி மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங் கண்டனம் தெரிவித்த சில வாரங்களிலேயே, அனைத்து மந்திரி பெசார்கள் மற்றும் மாநில முதல்வர்களுக்கும் முஹைதீனின் அழைப்பு வந்துள்ளது.