‘அவசரகாலத் திட்டத்தைப் பேரரசர் நிராகரித்தது முஹைதீனுக்கு விழுந்த அடி’

அவசரகால நிலையை அறிவிக்க வேண்டும் என்ற பிரதமர் முஹைதீன் யாசின் கோரிக்கையை, மாட்சிமை தங்கியப் பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா சுல்தான் ஹாஜி அஹ்மத் ஷா நிராகரித்ததைப் பல எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆதரித்தனர்.

பேரரசரின் இந்த முடிவு, முஹைதீன் அரசாங்கக் கட்சியின் சில உறுப்பினர்களிடமிருந்தும் பாராட்டுகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

‘பிரதமரின் ஆலோசனைபடி பேரரசர் செயல்பட வேண்டும்’ என்று மத்திய அரசியலமைப்பு கூறுகிறது, என்று பி.கே.ஆரைச் சேர்ந்த பாசிர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசான் அப்துல் கரீம் கூறினார்.

“ஆனால், இந்த அவசரகாலப் பிரகடனப் பிரச்சினையில், பிரதமரின் ஆலோசனையைப் பேரரசர் தைரியமாக நிராகரித்தார், ஏனெனில் மத்திய அரசியலமைப்பின் 150-வது பிரிவை ஆழமாக ஆராய்ந்தால், விவேகமாக முடிவெடுக்கும் அதிகாரம் மாட்சிமைத் தங்கிய மாமன்னரின் கைகளில் உள்ளது என்பதை அவர் புரிந்துகொண்டுள்ளார்.

“ஒரு கடுமையான அவசரகால நிலைமை நாட்டில் இல்லை என்பதை, மலாய் ஆட்சியாளர்களுடன் கலந்தாலோசித்த பின்னர் அவர் அறிந்துகொண்டார். வேறு வகையில் சொல்வதானால், அவருக்கு அதில் திருப்தியில்லை.

“நாடாளுமன்ற ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு முடியாட்சியின் பாரம்பரியம் மற்றும் நடைமுறையில், மாமன்னரின் இந்த நிராகரிப்பு, தேசியக் கூட்டணி அரசாங்கத்தின் (பி.என்) பிரதமருக்கும் அமைச்சரவைக்கும் விழுந்த ஓர் அடி என்று நான் நினைக்கிறேன்.

“முஹைதீன் எடுக்க வேண்டியக் கண்ணியமான நடவடிக்கை என்னவென்றால், உடனடியாக பிரதமர் பதவியை அவர் இராஜினாமா செய்ய வேண்டும்,” என்று ஹசான் அப்துல் கரீம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், மலாய் ஆட்சியாளர்களுடன் கலந்தாலோசித்த பின்னர், மன்னர் எடுத்த முடிவை அம்னோ துணைத் தலைவர் மொஹமட் கலீத் நோர்டினும் ஆதரித்தார்.

“மாமன்னரும் மலாய் ஆட்சியாளர்களும் அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட அவசரகாலப் பிரகடனத்தை நிராகரித்தது மிகவும் புத்திசாலித்தனமான காரியம்.

“மன்னரின் முடிவு மக்களின் உண்மையான நலன்களைக் கணக்கில் எடுத்துள்ளது,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மன்னரின் இந்த முடிவு மத்திய அரசியலமைப்பை விருப்பப்படி பயன்படுத்த முடியாது என்பதையும் நிரூபித்துள்ளது என்றும் கலீத் கூறினார்.

மறுபுறம், இஸ்கண்டார் புத்ரி நாடாளுமன்ற உறுப்பினர் லிம் கிட் சியாங், மாமன்னரின் முடிவுக்குத் தனது நன்றியைத் தெரிவித்தார்.

 

“நமது அரசியலமைப்பு முடியாட்சி முறை, மலேசிய நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பைப் பாதுகாப்பதற்கான ஒரு முக்கிய அரண் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.

நாட்டைத் தாக்கி வரும் கோவிட் -19 தொற்றுநோயின் மூன்றாவது அலைக்கு எதிராகப் போராட, எம்.பி.க்கள் உட்பட அனைத்து மலேசியர்களும் ஒன்றுபட வேண்டும் என்றும் லிம் கூறினார்.

“இந்தத் தொற்றுநோய்க்கான முக்கிய மையமாக விளங்கும் சபா மாநிலத்தின் மீது சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும்.

“கோவிட் -19 தொற்றுநோயின் அச்சுறுத்தலுக்கு முக்கியத்துவம் கொடுத்து, உயிர்களைக் காப்பாற்றும் முயற்சிகளில் அனைத்து எம்.பி.க்களும் கவனம் செலுத்த வேண்டும்,” என்று அவர் கூறினார்.

கோத்த ராஜா எம்.பி.யும் அமானா தலைவருமான மொஹமட் சாபுவும் மன்னரின் முடிவைப் பாராட்டினார்.

“ஒட்டுமொத்த மலேசியர்களின் நலன்களையும், நாட்டின் செழிப்பையும் கருத்தில் கொண்டு, இந்த முடிவு புத்திசாலித்தனமாக எடுக்கப்பட்டுள்ளது என்று அமானா கட்சி நம்புகிறது,” என்று அவர் கூறினார்.

கோவிட் -19 தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கான அனைத்து முயற்சிகளையும் ஆதரிக்க தனது கட்சி தயாராக இருப்பதாகவும், முழுமையான ஒத்துழைப்பை வழங்க உறுதியளிப்பதாகவும் மொஹமட் சாபு கூறினார்.