அன்வர் : ஊழலை நிராகரிக்கும் அரசியல்வாதிகளை ஏற்றுக்கொள்ள பி.கே.ஆர் தயார்

ஊழல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகத்திலிருந்து விடுபட்ட அரசாங்கத்தை விரும்பும் எந்தவொரு அரசியல்வாதியுடனும் பணியாற்ற கட்சி தயாராக உள்ளது என்று பி.கே.ஆர் கூறியுள்ளது.

அண்மையில் மலாய் ஆட்சியாளர்கள் விடுத்த எச்சரிக்கைகளைக் கருத்தில் கொள்ள வேண்டும்; அவற்றைக் குறைத்து மதிப்பிடக்கூடாது என்று அக்கட்சியின் தலைவர், அன்வர் இப்ராஹிம் கூறினார்.

ஊழலை நிராகரிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு அனைத்து தரப்பினரிடமும் இருக்க வேண்டும்.

எனவே, அனைத்து மலேசியர்களுக்கும் நீதி மற்றும் நல்வாழ்வு கிடைக்க, சீர்திருத்தக் கொள்கை அடிப்படையில் பி.கே.ஆர். தொடர்ந்து போராடும் என்று அன்வர் கூறினார்.

அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படவுள்ள 2021 வரவுசெலவு திட்டம், அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சிகளின் கூட்டு முயற்சியுடன் அமலுக்கு வரவேண்டும்; கோவிட் -19 பெருந்தொற்றின் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள வேலையின்மை மற்றும் வறுமை பிரச்சனைகளைக் கையாளக்கூடிய வகையில் அது அமைய வேண்டியது அவசியம் என்றும் அவர் சொன்னார்.

ஒரு புதியப் பிரதமரை நியமிப்பதற்கு ஏதுவாக, பக்காத்தான் ஹராப்பன் (பி.எச்.) தலைவருடன் அம்னோ இணைந்து செயல்படும் என அம்னோ முன்னாள் தலைவர் நஜிப் ரசாக்கின் பரிந்துரைக்கு பின், அன்வரின் அறிக்கை வெளியிடப்பட்டது.

இருப்பினும், நஜிப்பின் திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை என்று தெரிகிறது.

நேற்றையக் கூட்டத்தில் முன்வைத்த பரிந்துரைகளில், அன்வரைத் தேசிய முன்னணி ஆதரிக்க வேண்டும் என்ற கருத்தும் ஒன்றாகும் என்ற நஜிப், டிஏபி உடன் ஒத்துழைக்கப் போவதில்லை என்பதனையும் வலியுறுத்தியதாக இன்று தெரிவித்தார்.