தனது மகள் பிரசன்னா திக்ஸா மீதான பாதுகாப்பு உரிமையை மீண்டும் பெறப் போராடி வரும் எம் இந்திரா காந்தி, காவல்துறைத் தலைவர் அப்துல் ஹமீத் படோருக்கு எதிராக RM100 மில்லியன் சிவில் வழக்கை இவ்வாரம் தாக்கல் செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கோலாலம்பூரில் உள்ள உயர் நீதிமன்றத்தில், ராஜ் & சச் சட்ட நிறுவனத்தின் வழி, புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக, ‘இந்திரா காந்தி செயற்குழு’வின் (இங்காட்) தலைவர் அருண் துரைசாமி மலேசியாகினியிடம் இன்று தெரிவித்தார்.
“பிரசன்னாவைத் திரும்பப் பெற நாங்கள் ஐ.ஜி.பி.க்குப் போதுமான கால அவகாசம் கொடுத்துவிட்டோம். எங்களுக்குத் தெரிந்த எல்லா வழிகளும் முடிந்துவிட்டது, எனவே நாங்கள் வழக்குத் தொடுக்க முடிவெடுத்துள்ளோம்,” என்று அருண் கூறினார்.
பிரதமர் முஹைதீன் யாசினுக்கு ஒரு கடிதத்தை வழங்குவதற்காக, இந்திரா புத்ராஜெயாவுக்கு 12 நாள், 350 கி.மீ. ‘நீதி கேட்டு நடைப்பயணம்’ மேற்கொள்ள உள்ளார் என்பதனையும் அவர் உறுதிப்படுத்தினார்.
அதுமட்டுமின்றி, புத்ராஜெயா செல்லும் வழியில், இந்திரா மாட்சிமை தங்கியப் பேரரசருக்கு ஒரு குறிப்பாணையும் வழங்குவார் என்றும் அருண் கூறினார்.
“தற்போது, நவம்பர் 21-ஆம் தேதி, காலை 10 மணிக்கு, சுங்கை பட்டாணியில் நடைப்பயணத்தைத் தொடங்கலாம் எனத் திட்டமிட்டுள்ளோம். இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, எனினும், நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு (சி.எம்.சி.ஓ) ஆணை நவம்பர் 9 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், நாங்கள் அதுபற்றி ஆலோசித்து வருகிறோம்.
“சி.எம்.சி.ஓ. தொடர்ந்து நீட்டிக்கப்பட்டால், நடைப்பயணத்தின் தேதியில் மாற்றம் செய்வோம்,” என அவர் மேலும் சொன்னார்.
இது சாதாரணக் காரியமல்ல, ஆனால் இந்தப் பிரச்சனையை மக்களிடம் கொண்டுசென்று, அனைவரின் உதவியையும் நாட, இதைத் தவிர வேறு சிறந்த வழியில்லை என்று அருண் கூறினார்.
கடந்த செப்டம்பர் மாதம், இந்திராவைச் சந்திக்க அப்துல் ஹமீத் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, திட்டமிடப்பட்ட உண்ணாவிரதத்தை நிறுத்தியதாக இங்காட் கூறியது. இருப்பினும், புக்கிட் அமானில் நடந்த அக்கூட்டத்தில், அவர் கலந்துகொள்ளாமல், ஒரு பிரதிநிதியை அனுப்பினார்.
மேலும், அவர்கள் முன்னெடுத்த எந்தவொரு முயற்சிக்கும் காவல்துறை பதிலளிக்கவில்லை என்றும், பலமுறை சந்திக்க கேட்டும் ஐ.ஜி.பி.யிடமிருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை என்றும் அருண் கூறினார்.
“ஐ.ஜி.பி. எங்களைச் சந்திப்பதில் ஆர்வம் காட்டவில்லை என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம், இந்த விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சர் (ஹம்சா ஜைனுடின்) மற்றும் பிரதமருடன் ஒரு சந்திப்பை நாங்கள் கோரவுள்ளோம். ஐ.ஜி.பி.யுடனான சந்திப்பை நாங்கள் இனி எதிர்பார்க்கவில்லை,” என்று அவர் கூறினார்.
“இன்று வரை, இந்திராவின் மகளைக் கண்டுபிடித்து அவருடன் மீண்டும் ஒன்றிணைக்க, காவல்துறை ஆர்வம் காட்டியதாகத் தெரியவில்லை. எங்களுக்கு இதுவரை எந்தத் தொலைபேசி அழைப்பும் வந்ததில்லை, எங்கள் மின்னஞ்சல்களுக்குப் பதில் கிடைத்ததில்லை,” என்று அருண் மேலும் கூறினார்.
முன்னதாக, ஜனவரி மாதத்தில், இந்திராவின் முன்னாள் கணவர் முகமது ரிட்டுவான் அப்துல்லா இருக்கும் இடம் தனக்குத் தெரியும் என்று கூறிய ஐ.ஜி.பி., அவரைச் சரணடையும்படி வலியுறுத்தினார்.
தனது மகள் பிரசன்னாவைத் தன்னுடன் அழைத்துச் சென்ற ரிடுவானுக்கு எதிராக ஃபெடரல் நீதிமன்றத்தில் கைது ஆணை இருந்தபோதிலும் ஐ.ஜி.பி. அவரைச் சரணடையும்படி கேட்டுக்கொண்டார்.
கே பத்மநாதன் என்றப் பெயர் கொண்ட ரிட்டுவான், 2009-ல் இஸ்லாமிற்கு மாறிய பின்னர், அப்போது குழந்தையாக இருந்த பிரசன்னாவைத் தன்னோடு அழைத்துச் சென்றார்.
2014-ஆம் ஆண்டு, ஈப்போ உயர் நீதிமன்றம், பிரசன்னாவை அவரது தந்தையிடமிருந்து மீட்டெடுக்கப் போலீசாருக்கு உத்தரவிட்டது. 2016-ல் ஃபெடரல் நீதிமன்றம் ரிட்டுவானைக் கைது செய்ய ஐ.ஜி.பி.க்கு உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து, 2018-ஆம் ஆண்டு, குழந்தைகளை மதம் மாற்ற இரு பெற்றோரிடமிருந்தும் அனுமதி தேவை என்றும்; ஒருதலைப்பட்சமாக மதம் மாற்றுவது சட்டவிரோதமானது என்றும் ஃபெடரல் நீதிமன்றம் ஒருமனதாகத் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.
அதோடுமட்டுமின்றி, ரிட்டுவானுக்கு ஒரு பிடியாணையும் அது வழங்கியது.