அம்னோவிலிருந்து திபிஎம் வேட்பாளர், ஆனால் ஜாஹித்தை ஏற்க முடியாது

அம்னோவைச் சார்ந்த ஒருவரைத் துணைப் பிரதமராக (திபிஎம்) நியமிக்க, அக்கட்சியின் வேட்பாளர் பரிந்துரைக்காக முஹைதீன் காத்திருப்பதாகவும், ஆனால் கட்சியின் தலைவர் ஜாஹித் ஹமிடியை அவர் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்றும் கூறப்படுகிறது.

அந்தப் பதவிக்கு ஓர் அம்னோ பிரதிநிதியை நியமிக்க பெர்சத்து தலைவர் தயாராக இருப்பதாகவும், ஒரு வேட்பாளரைப் பரிந்துரைக்க வேண்டியது கட்சிதான் என்றும் பெயரிடப்படாத ஓர் ஆதாரம் கூறியதாக சின் ச்சியூ டெய்லி கூறியுள்ளது.

இருப்பினும், பாகான் டத்தோக் எம்.பி.யுமான அஹ்மத் ஜாஹித் ஹமீடி இன்னும் நீதிமன்ற விசாரணையில் இருப்பதால், தனது துணைவராக அவரை ஏற்றுக்கொள்ள முடியாது என்று முஹைதீன் கருதுவதாக அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.

“முஹைதீன், அம்னோ துணைத் தலைவர் மொஹமட் ஹசானை ஏற்க முடியும்; அம்னோ உதவித் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாகோப் அல்லது தற்போது கட்சியில் எந்தப் பதவியும் இல்லாத ஹிஷாமுதீன் ஹுசைன்.

“இப்போது (முஹைதீன்) அம்னோவின் முன்மொழிவுக்காகக் காத்திருக்கிறார், ஆனால், அவர்கள் ஜாஹித் மட்டும்தான் என்று வற்புறுத்தினால், அது சாத்தியப்படாது,” என்று அவர் கூறினார்.

மார்ச் மாதம் பிரதமராக நியமிக்கப்பட்ட போது, முஹைதீன் முந்தைய தலைவர்களைப் போல, தனக்கொரு துணைப் பிரதமரை நியமிக்கவில்லை

அதற்குப் பதிலாக, நான்கு மூத்த அமைச்சர்களை நியமித்தார். அந்த எண்ணிக்கையில், இருவர் பெர்சத்து, ஒருவர் அம்னோ, இன்னொருவர் சரவாக் கூட்டணி கட்சியைச் (ஜி.பி.எஸ்.) சேர்ந்தவர்கள்.

அந்த அறிக்கையின்படி, துணைப் பிரதமர் நியமனம் மற்றும் பிற பதவிகள் உட்பட பெர்சத்துவுடனான அவர்களின் ஒத்துழைப்பின் புதிய விதிமுறைகளைப் பற்றி விவாதிக்க, ஒரு பேச்சுவார்த்தைக் குழுவை அமைக்குமாறு கட்சி கேட்டுக் கொள்ளப்பட்டதாக அம்னோவின் ஒரு வட்டாரம் கூறியது.

முஹைதீன் அம்னோவைத் திருப்திப்படுத்தத் தவறினால், கோவிட் -19 அச்சுறுத்தல் குறைந்தவுடன் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரலாம்.

அம்னோ உச்சமன்றக் கூட்டத்தில் பொதுத் தேர்தலை விரைவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது என்றார்.

“ஆனால் அது முஹைதீனின் அடுத்த நடவடிக்கைகளைப் பொறுத்தது,” என்று நேற்றையக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஒரு வட்டாரம் தெரிவித்தது.

அறிக்கையின் நம்பகத்தன்மையை மலேசியாகினியால் இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லை.