முகநூலில் `தூண்டுதல்` இடுகை : போலிஸ் ஜாமினில் ரோனி லியு விடுவிக்கப்பட்டார்

மாமன்னருக்கு எதிராகத் தேசத்துரோக கூறுகள் இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் ஒரு முகநூல் இடுகை தொடர்பாக, விசாரணைக்கு அழைக்கப்பட்ட சுங்கை பெலேக் சட்டமன்ற உறுப்பினர் ரோனி லியு போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இத்தகவலை, டிஏபி துணைத் தலைவர் கோபிந்த் சிங் தியோ இன்று பிற்பகல் அறிவித்தார்.

முன்னதாக, தாய்லாந்து மன்னர் மகா வஜிரலோங்கொர்னுக்கு எதிரான போராட்டம் தொடர்பான லியுவின் முகநூல் இடுகை, நமது மன்னருக்கு எதிரான தேசத்துரோகக் கருத்தாகக் கருதப்பட்டதால் லியுவைப் போலீசார் கைது செய்தனர்.

தேசத்துரோகச் சட்டம் மற்றும் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் 1998 ஆகியவற்றின் கீழ், விசாரணைக்கு உதவ அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது எனப் போலிசார் தெரிவித்தனர்.

லியு மீதான விசாரணையை புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறை இயக்குநர் ஹுசிர் முகமது நேற்று உறுதிபடுத்தினார்.

அகோங்கிற்கு எதிராக இதேபோன்ற அறிக்கைகளை வெளியிட்டதற்காக மேலும் மூன்று சமூக ஊடக பயனர்களையும் போலீசார் விசாரிக்கின்றனர் என்றும் ஹுசிர் கூறினார்.

அந்த இடுகையில் எந்தவொரு தவறும் இல்லை என லியுவின் வழகுரைஞர் ஜவடிஸ் சந்தரா தெரிவித்தார்.

முன்னதாக, லியுவைத் தடுத்து வைக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறிய கோவிந்த், அவரை உடனடியாக விடுவிக்க அழைப்பு விடுத்தார்.

“அவர் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்பது எங்கள் கருத்து.

“விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது, ​​அவர் சாட்சியமளிக்க காவல் நிலையத்திற்குச் செல்ல தயாராக இருந்தார். விசாரணையில் காவல்துறையினருக்கு ஒத்துழைக்கவும் உதவவும் அவர் தயாராக இருந்தார்,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.