அன்வார் பிரதமராவதால், மலேசியாவுக்கு என்ன இலாபம்?

கருத்து l அன்வர் இப்ராஹிம் இன்னும் பிரதமராக முயற்சிக்கிறார், அவரின் நீண்ட கால கனவு அது.

நான்கு மாதங்களுக்கு முன்பு, அன்வர் நஜிப் ரசாக்கின் உதவியுடன் பிரதமராக முடியும் என்று கூறியிருந்தேன். சமீபத்தில் இது யதார்த்தமாக நடந்திருக்கும், நாட்டில் அரசியல் சிக்கல் மட்டும் ஏற்படாமல் இருந்திருந்தால்.

உண்மையில், அன்வர் பிரதமராக வருவதற்கு முக்கியத் தடை, அரசியல் குழுவிலிருந்து வந்ததல்ல, மாறாக பல பிரிவுகளைக் கொண்ட ஓர் குழுவினால் வந்தது.

முதலாவது, ஓய்வுபெற்ற மலாய் தொழில்நுட்ப வல்லுநர்களின் பிரத்தியேகக் குழு. இரண்டாவது, மிதவாத-தாராளவாத இஸ்லாமிய அன்வரை நிராகரிக்கும் தீவிர மலாய்-முஸ்லிம் குழுக்கள்.

மூன்றாவது, டாக்டர் மகாதிர் முகமதுவின் அடிப்படைவாதக் குழுக்கள் மற்றும் கடைசியாக, டிஏபி-யுடன் சேர்ந்து சதி செய்தார் எனக் கூறி அன்வரை நிராகரிக்கும் உள்ளூர் குழுக்கள்.

இந்த நான்கு குழுக்கள் பற்றியும், அமெரிக்காவில் உள்ள ராண்ட் (RAND) கார்ப்பரேஷன் சிந்தனைக் குழு விவாதித்துள்ளது.

இருப்பினும், ‘அன்வர் பிரதமரானால் மலேசியர்களுக்கு என்ன இலாபம்?’ என்பதுதான் இங்கு மிகப்பெரிய கேள்வி.

 

நான் வெளிநாட்டில் இருந்தபோது, அந்த நாட்டில் பெரும்பான்மையான மக்கள் மற்ற தலைவர்களை விட, அன்வரின் பெயரைக் குறிப்பிடுவது எளிதாகவும் தன்னிச்சையாகவும் இருந்தது கண்டு ​​நான் ஆச்சரியப்பட்டேன். நான் அமெரிக்காவில் ஒரு டாக்ஸியில் ஏறியபோது அல்லது வசந்த காலத்தில் ஒரு காப்பி கடையில் பேசிக்கொண்டிருக்கும்போது, அவர்கள் இந்தப் பெயரை மிக எளிதாக உச்சரித்தனர்.

உதாரணத்திற்கு, “நீ மலேசியாவில் இருந்து வருகிறாயா?, “அன்வார் எப்படி இருக்கிறார்?” , “உனக்குத் தெரியுமா, அன்வார் ஓர் அரசியல் பலியாள்”, என்றெல்லாம் என்னிடம் பேசியுள்ளனர்.

சோமாலியா, சவுதி அரேபியா, எகிப்து, மொராக்கோ, லிபியா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளைச் சேர்ந்த எனது புதிய அண்டை அயலாரும், நம் நாட்டின் மிகப் பழமையான பிரதமரின் பெயரைவிட, அன்வாரின் பெயரைக் குறிப்பிடுவதையே நான் அதிகம் கண்டேன். ஆக, இந்தக் கேள்விகள் என் மனதைக் குழப்பமடையச் செய்தன.

உயர்மட்டத்தில், அன்வருக்குச் செல்வாக்கு மிக்க அறிமுகங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

உதாரணமாக, வெளியுறவுத்துறையிலும் பெண்டகனிலும் ஒரு காலத்தில், அவருக்கு நெருங்கிய அறிமுகமானவர்கள் முன்னாள் பாதுகாப்பு துணைச் செயலாளர் பால் வொல்போவிட்ஸ் மற்றும் முன்னாள் துணைத் தலைவர் அல்-கோர் போன்றவர்கள். அதுமட்டுமின்றி, வெள்ளை மாளிகைக்கு மிக நெருக்கமானவர்கள் பலரும் அன்வரின் நட்பு வட்டத்தில் உள்ளனர்.

ஒரு காலத்தில் அடிப்படைவாத இஸ்லாமியராக இருந்த அன்வர், தாராளவாத சீர்திருத்தவாதியாக மாறியது அல்லது மேற்குலகம் சொல்வது போல மிதவாத முஸ்லீம் என்று அழைக்கப்பட்டதால், பல மலேசியர்கள் அன்வாரை ஆதரிப்பதில் இருந்து விலகிச் சென்றனர்.

ஜான் எஸ்பெரிட்டோ, தனது ‘அன்வர் இப்ராஹிம்: ஒரு முஸ்லீம் ஜனநாயகவாதியின் பரிணாமம்’ (Anwar Ibrahim: Evolution of a Muslim Democrat) என்ற புத்தகத்தில், இந்த மாற்றம் மலேசியாவின் அரசியல் நீரோட்ட மாற்றத்திற்கு ஏற்ப நிகழ்ந்தது என்று விளக்கியுள்ளார்.

நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகளைப் பார்ப்போம், குறிப்பாக அமெரிக்காவில் செம்பனை புறக்கணிப்பு பிரச்சாரம், அமெரிக்கா, துருக்கி மற்றும் ஐரோப்பிய நாடுகளுடனான அன்வரின் சர்வதேச உறவுகளின் பலத்தை மலேசியா பயன்படுத்திக் கொண்டால், செம்பனை எண்ணெய் பிரச்சினை இன்னும் எளிதாக தீர்க்கப்படலாம் என்று நான் நினைக்கிறேன்.

இந்தப் புறக்கணிப்பு பிரச்சாரம் அமெரிக்க அரசாங்கத்தால் செய்யப்பட்டது அல்ல, அங்குள்ள சோயாபீன் மற்றும் சோளத் தொழில் பரப்புரையாளர்களால் அது மேற்கொள்ளப்பட்டது. அவர்களுக்கு வெள்ளை மாளிகையின் பரப்புரைகளை கட்டுப்படுத்தும் வெள்ளை மேலாதிக்க குழுவினர் உதவினார்கள்.

உதாரணமாக, அமெரிக்கப் பேரங்காடிகளில் செம்பனை எண்ணெய் இல்லை என்றால், அமெரிக்காவில் உள்ள ஆசியப் பேரங்காடிகளில் அது ஏன் விற்கப்படுகிறது?

அதேப் பேரங்காடியில், சிங்கப்பூரில் தயாரிக்கப்பட்ட மில்லோ’வை விற்கும்போது, மலேசியாவில் தயாரிக்கப்பட்ட மில்லோ’வை ஏன் விற்கக்கூடாது? அல்லது, அமெரிக்க பேரங்காடிகளில் வாழை இலைகள் விற்கப்படாவிட்டால், வியட்நாம் வாழை இலைகளை அமெரிக்காவில் உள்ள ஆசியப் பேரங்காடிகளில் எப்படி விற்க முடிகிறது?

ஆக, இது அரசாங்கத்தின் கொள்கை மட்டுமல்ல, சந்தைப்படுத்துதல் மட்டத்திலும் பலவீனங்கள் ஏற்படுகின்றன என்பதையே இந்தச் சிக்கல்கள் காட்டுகின்றன. மலேசியா தயாரித்த 501 லெவி ஜீன்ஸ் அமெரிக்க சந்தையில் நுழைய முடியவில்லை, ஆனால் வங்காளதேசத்தில் தயாரிக்கப்பட்ட 501 ஜீன்ஸ் அமெரிக்காவில் பரவலாக விற்கப்படுகிறது?

வேகமாக நகரும் உலகத் தேவை மற்றும் விநியோக வர்த்தக அமைப்பில் நாம் போட்டியிடத் தவறிவிட்டோம்.

நாட்டைக் கட்டியெழுப்பும் அம்சத்தில், ஒற்றுமையைக் கடைபிடிப்பதில் நாம் இன்னும் குழப்பமாகவே இருக்கிறோம்.

பொருளாதார அடிப்படையில், 2015-ம் ஆண்டு முதல் டாலருக்கு எதிரான ரிங்கிட்டின் மதிப்பு RM1.00 = US $ 4.30 எனக் குறைவாகவே உள்ளது. இதற்குக் காரணம், 2015 முதல் உலக எண்ணெய் விலை, நீண்ட காலமாக, இன்று வரை நிலையானதாக இல்லை. உலக எண்ணெய் சந்தையை உறுதிபடுத்துவதில் மத்தியஸ்தராக இருக்க ஒபெக் தவறிவிட்டது.

பெட்ரோனாஸை மலேசியா அதிகம் நம்பியிருக்கிறது, ஆனால்  எண்ணெய் ஆதிக்க நாடுகளான அமெரிக்கா, இரஷ்யா, சவுதி அரேபியா மற்றும் இப்போது சீன எண்ணெய் நிறுவனம் (China Oil Company) ஆகியவற்றின் ஏகபோக உலக எண்ணெய் விலை விளையாட்டால் பெட்ரோனாஸ் பாதிக்கப்படுகிறது.

அன்வரை மிகவும் விமர்சித்த என் பழைய நண்பர்கள், அன்வரால் அதைச் செய்ய முடியுமா என்று கேட்கின்றனர். அவர்களுக்கு என் பதில், அன்வர் இன்னும் பிரதமராகவில்லை! ஒருவேளை பிரதமரானால், அன்வரால் மலேசியாவை ஒபெக்’கிற்குள் கொண்டு வர முடியலாம்.

முடிவுரை

நஜிப் பிரதமராக இருந்தபோது அன்வாருக்கு என்னால் முடிந்ததைச் செய்தேன் என்று நினைக்கிறேன். அவற்றில் அண்டை நாடுகளின் துணை அதிபர்களோடான ஒருங்கிணைப்பு திட்டங்கள் கிட்டத்தட்ட வெற்றி பெற்றன.

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, பக்கத்து நாட்டின் துணை அதிபர் ஒருவர் என்னை அழைத்து, சம்பவம் நடந்த நேரத்தில் நான் ஒரு சிறிய தவறு செய்துவிட்டேன் என்று கூறினார்.

இன்று நான் அந்த உண்மையை ஒப்புக்கொள்கிறேன், நான் வருத்தப்படுவது ஒரே ஒரு விஷயம்தான், அன்வர் துணைப் பிரதமராக ஆகாமால், பிரதமராக பதவி ஏற்றிருக்கலாம் மிக எளிதாக.

புத்ராஜெயாவில் எனக்கு அற்புதமான நினைவாக இது ஆனது. இருப்பினும், இன்று நான் இதை ஒரு விவாதத்திற்குத் திறந்துவிட விரும்புகிறேன், அன்வர் பிரதமரானால், மலேசியர்கள் என்ன அனுபவிப்பார்கள்? அன்வர் “அபா”-வை விட சிறந்தவராக இருக்க முடியுமா?


டாக்டர் அல்-அஸ்ஹரி சித்திக் கமுன்ரி அரசியல் மற்றும் அரசாங்கத்துறையில் நிபுணர். தேசபக்தி, தேசியப் பாதுகாப்பு மற்றும் நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதில் ஆழ்ந்த அக்கறை கொண்டவர்.