பிரதமர் முஹைதீன் யாசினுக்கு ஆதரவாக, இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கை தீர்மானம் தாக்கல் செய்துள்ளனர்.
இதற்கிடையில், நவம்பர் 2 நாடாளுமன்ற கூட்டத்தொடரின், கூட்ட வரைவு விதிகளின் அடிப்படையில் 25 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பிரதமருக்கு எதிராக தீர்மானம் தாக்கல் செய்துள்ளனர்.
இது மாற்றத்திற்கு உட்பட்டது என்று லெம்பா பந்தாய் எம்.பி. பாஹ்மி ஃபட்ஸில் விளக்கினார்.
முஹைதீனை, ஷாஹிடான் காசிம் (பி.என்.-அராவ்) மற்றும் நிக் முஹம்மது சவாவி சாலே (பாஸ்-பாசிர் புத்தே) இருவரும் ஆதரிக்கின்றனர்.
இதற்கிடையில், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை டாக்டர் மகாதிர் முஹமட் (சுயேட்சை-லங்காவி) மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்த நான்கு எம்.பி.க்கள், வாரிசான் (7), அமானா (11), பி.கே.ஆர். (1) மற்றும் டிஏபி (1) ஆகிய 25 எம்.பி.க்கள் சமர்ப்பித்தனர்.
கூட்ட விதிகளின்படி, முதல் நம்பிக்கையில்லாத் தீர்மானம் மகாதீரின் கூட்டாளியான அமிருதீன் ஹம்சாவிடம் (சுயேட்சை-குபாங் பாசு) இருந்து வந்தது.
தற்போதைய வரைவின் படி, மக்களவையில் கூட்டுறவுச் சட்டத்தில் திருத்தங்கள் குறித்து முதலில் விவாதிக்க உள்ளனர். அதன்பிறகு, போலீஸ் நடத்தை மீதான சுயாதீன விசாரணை ஆணையம் (ஐபிசிசி) அமைக்கும் மசோதா மற்றும் விஷச் சட்டத்தில் திருத்தங்கள் குறித்து விவாதிக்க உள்ளனர்.
2021 வரவுசெலவுத் திட்டத்தை விவாதித்து, நிறைவேற்றுவதற்கான மசோதா பின்னர் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனையடுத்து, அரசாங்கம் மற்ற மசோதாக்களையும் சேர்க்கலாம் அல்லது திரும்பப் பெறலாம்.
2021 வரவுசெலவுத் திட்ட விவாதம் நவம்பர் 9 முதல் டிசம்பர் 10 வரை நடைபெற உள்ளது.
நம்பிக்கையில்லாத் தீர்மான மசோதாவை நிராகரிக்கும் திட்டங்களும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முஹைதீனின் அவசரநிலை அறிவிப்பு கோரிக்கைக்கு இதுவே காரணம் என்று விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
எனினும், மாட்சிமை தங்கிய மாமன்னர் அவசரகாலக் கோரிக்கையை நிராகரித்ததோடு, 2021 வரவுசெலவுத் திட்டத்தை ஆதரிக்கவும், அது தடையின்றி நிறைவேற்றப்படுவதை உறுதிப்படுத்தவும் எம்.பி.க்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.