கோவிட் -19 பரவலைத் தொடர்ந்து சரவாக் கூச்சிங்கில், சிவப்பு மண்டலப் பகுதியில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் நாளை முதல் நவம்பர் 13 வரை மூடப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது
இதன் மூலம், கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் அனைத்து ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிகள், ஆசிரியர் கல்வி நிறுவனங்கள், மெட்ரிகுலேஷன் கல்லூரிகள் மற்றும் கல்வி அமைச்சில் பதிவுசெய்யப்பட்ட தனியார் பள்ளிகள் உள்ளிட்ட 209 கல்வி நிறுவனங்கள் மூடப்படும்.
நேற்றைய நிலவரப்படி, கூச்சிங்கில் 80 கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளன, கடந்த 14 நாட்களில் மட்டும் 69 பதிவுகள்.
விடுதிபள்ளிகளில் உள்ள மாணவர்களைப் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம். பெற்றோருக்காகக் காத்திருக்கும் பிள்ளைகள், அவர்கள் வரும்வரையில், பள்ளி விடுதிகளிலேயே இருக்கலாம், அவர்களை விடுதியின் வார்டன் கவனித்துகொள்வார். மாணவர்களுக்குத் தேவையான உணவை, பள்ளி நிர்வாகம் ஏற்பாடு செய்து தரும்.
எவ்வாறாயினும், பள்ளிகள் மூடப்பட்ட காலக்கட்டத்தில், வார்டன்களின் பராமரிப்பின் கீழ், மாணவர்கள் விடுதிகளிலும் தங்கலாம் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இக்காலகட்டத்தில் திட்டமிடப்பட்டபடி சர்வதேச தேர்வுகளுக்கு அமர வேண்டிய மாணவர்கள், அந்தந்தப் பள்ளிகளிடமிருந்து தேர்வில் கலந்துகொள்ள ஓர் அனுமதி கடிதத்தைப் பெற வேண்டும் என்றும் அது கூறியுள்ளது.