திபிஎம் வேட்பாளர் யார்? விவாதிக்க அம்னோ கூட்டம் இன்றிரவு நடைபெறலாம்

துணைப் பிரதமர் (திபிஎம்) வேட்பாளர் மற்றும் பிரதமர் முஹைதீன் யாசினுக்குக் கட்சி சமர்ப்பிக்கவுள்ள நிபந்தனைகள் குறித்து விவாதிக்க, அம்னோ இன்று இரவு சந்திப்புக் கூட்டம் நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கட்சி வட்டாரத் தகவலின்படி, அம்னோ துணைத் தலைவர் முகமது ஹசான், மூத்த அமைச்சர் (தற்காப்பு) இஸ்மாயில் சப்ரி யாகோப் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுதீன் ஹுசைன் ஆகிய மூன்று பெயர்கள் இந்தப் பதவிக்குப் பரிந்துரைக்கப்படலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், கோரம் போதுமானதாக இல்லாவிட்டால் சிறப்புக் கூட்டம் ஒத்திவைக்கப்படும் என்றும் அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.

அம்னோவின் திபிஎம் வேட்பாளர் பெயரைக் கட்சி ஒப்படைக்க, புத்ராஜெயா காத்திருப்பதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, துணைப் பிரதமர் வேட்பாளர் குறித்த ஊகங்கள் கட்சிக்குள் நேற்று வெடித்தன.

முகமது நாடாளுமன்ற உறுப்பினர் அல்லாததால், அவர் துணைப் பிரதமராக நியமிக்கப்படுவதற்கு முன்பு செனட்டராகப் பதவியேற்க வேண்டும்.

சமூக வலைத்தளம் ஒன்று, பி.என். பொதுச்செயலாளர் அன்னுவார் மூசாவின் பெயரையும் வேட்பாளர் பட்டியலில் இணைத்துள்ளது.

இதற்கிடையே, ஹிஷாமுதீனின் பெயர் பரிந்துரைக்கப்படும் வாய்ப்பு மிகக் குறைவாக உள்ளதாக அம்னோ வட்டாரங்கள் தெரிவித்தன.

“ஹிஷாமுதீனின் பெயர் பரிந்துரைக்கப்படுவதற்கு வாய்ப்பு மிகக் குறைவாகவே இருக்கிறது, ஏனெனில் பல அம்னோ தலைவர்களுக்கு அதில் விருப்பம் இல்லாமல் இருக்கலாம்.

“இந்தப் பதவிக்கு அம்னோவைப் பிரதிநிதித்துவப்படுத்த முகமது மற்றும் இஸ்மாயில் ஆகியோர் மட்டுமே பரிசீலிக்கப்படுவார்கள்,” என்று அவர் மேலும் கூறினார்.

இன்று, முகநூல் பதிவு ஒன்றில், அரசாங்கத்தின் அந்த இரண்டாவது உயர்பதவிக்கு, தனது தரப்பில் இருந்து முயற்சிகள் எடுக்கப்படுவதாகக் கூறப்படுவதை ஹிஷாமுதீன் மறுத்தார்.

“அப்பதவிக்கு நான் ஒருபோதும் முயற்சி செய்யவில்லை என்று நான் கூற விரும்புகிறேன். உண்மையில், அம்னோவைப் பிரதிநிதித்து, இன்று அரசாங்கத்தில் ஓர் அமைச்சராக இருக்க எனக்கு ஆதரவளித்த கட்சிக்கு நான் நன்றி கூறுகிறேன்.

“இப்போது அரசாங்கம் மற்றும் அம்னோவின் மிக முக்கியமான கவனம் நாடாளுமன்றக் கூட்டத்தொடர், பட்ஜெட் 2021 மற்றும் கோவிட் -19 நெருக்கடியை நிர்வகிப்பது, பதவி போட்டி தற்போது முக்கியமல்ல என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், அம்னோவின் உச்சமன்ற உறுப்பினர்கள் பலர், இன்று இரவு ஒரு சிறப்பு கூட்டம் நடைப்பெறவுள்ளதை உறுதிப்படுத்தினர்.