டாக்டர் எம் – கு லீ சந்திப்பு : ஒற்றுமை அரசாங்கம் பற்றி விவாதம்

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது பல அரசியல் தலைவர்களுடன் ஒற்றுமை அரசாங்கத்தை அமைப்பதற்கான திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

கடந்த திங்களன்று குவா மூசாங் நாடாளுமன்ற உறுப்பினர் தெங்கு ரஸாலீ ஹம்சா (கு லீ), செவ்வாய் அன்று பிரதமர் துறை அமைச்சர் (மத விவகாரங்கள்) சுல்கிஃப்லி மொஹமட் மற்றும் நேற்று, அமானா தலைவர் மொஹமட் சாபு ஆகியோரை மகாதீர் சந்தித்ததை, அவரின் அலுவலக வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.

“ஓர் ஒற்றுமை அரசாங்கத்தை அமைப்பது பற்றி கலந்துரையாடவே இந்த சந்திப்புகள்,” என்று அந்த ஆதாரம் இன்று மலேசியாகினியிடம் தெரிவித்துள்ளது.

இந்த மூன்று சந்திப்புகளும் சிலாங்கூர், ஶ்ரீ கெம்பாங்கானில் உள்ள மகாதீரின் இல்லத்தில் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

கூட்டத்தில் டிஏபி தலைவர்கள் இல்லாதது குறித்து கேட்கப்பட்டதற்கு, “இதுவரை படத்தில் இருப்பவர்கள் வந்திருக்கிறார்கள்,” என்று பதிலளித்தார்.

மகாதீருடன் இந்த விஷயத்தைப் பற்றி விவாதிக்க விரும்பும் எந்தவொரு தரப்பினருக்கும் ‘எங்களின் கதவு இன்னும் திறந்திருக்கும்’ என்று அந்த வட்டாரம் மேலும் கூறியுள்ளது.

இன்று, பக்காத்தான் ஹராப்பான் தலைமை மன்றக் கூட்டத்திற்குப் பிறகு, மகாதீர் உடனான சந்திப்பு குறித்து கேட்டபோது, மொஹமட் சாபு, கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

“இல்லை, கருத்து இல்லை, கருத்து இல்லை,” என்று அவர் கூறினார்.

முன்னதாக, மகாதீரின் ஆதரவாளர்கள் மன்றமான சே டெட் கிளப் முகநூல் பக்கத்தில் அந்தச் சந்திப்புகள் தொடர்பான மூன்று படங்களை வெளியிடப்பட்டிருந்தன.

“நாடு சோதனைக்குட்பட்டு இருக்கும்போது, ​​ஒற்றுமை அரசாங்கமே சிறந்த வழி. அரசியல் கட்சிகளை இப்போதைக்கு ஒதுக்கி வைத்து, நாட்டின் நலன்களுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்க வேண்டும். மாமன்னரும் இதனையே விரும்புகிறார்..

“ஓர் ஒற்றுமை அரசாங்கம் உருவானால், அது பல்வேறு இனங்களைச் சேர்ந்த மலேசியர்களின் நலன்களைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், கோவிட் -19 தொற்றுநோய், அரசியல் அமைதியின்மை மற்றும் நிச்சயமற்ற உலகளாவிய பொருளாதார நிலைப்பாட்டின் விளைவால், இன்று சவாலாக இருக்கும் நாட்டின் பொருளாதார மீட்பு முயற்சிகளிலும் கவனம் செலுத்த முடியும்,” என்று அப்படங்களுடன் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கை கூறியது.