2021 வரவுசெலவுத் திட்டத்தில் மக்களின் கருத்துகளையும் தேவைகளையும் புறக்கணிப்பதன் மூலம் அதற்கு முழுமையான அதிகாரம் இல்லை என்பதை தேசியக் கூட்டணி அரசு (பிஎன்) அறிந்துகொள்ள வேண்டும் என்று டிஏபி மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங் கூறினார்.
2021 வரவுசெலவுத் திட்டத்தை, நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கும் வகையில், “நம்பிக்கை மற்றும் வழங்கல்” குறித்த உடன்பாட்டை எட்டுவதற்கு, பி.என். நம்பிக்கை கூட்டணியுடன் (பி.எச்.) கலந்துபேச வேண்டும் என்று லிம் மீண்டும் வலியுறுத்தினார்.
“கோவிட் -19 தொற்றுக்கு எதிராக ஒன்றுபட, இனம், மதம், இடம், வர்க்கம், அல்லது அரசியல் பின்னணி ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், ஒருமைப்பாட்டை அரசாங்கத்தில் உள்ள கட்சிகள் முன்வைக்க முடிந்தால், எதிர்க்கட்சிகள் சாதகமான பதிலை அளிக்கத் தயாராக உள்ளன,” என்று அந்த இஸ்கந்தார் புத்ரி எம்.பி. ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
நவம்பர் 6-ம் தேதி தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ள 2021 வரவுசெலவுத் திட்டம் தொடர்பில், உடனடியாக எதிர்க்கட்சிகளுடன் கலந்துரையாடலைத் தொடங்குமாறு பிரதமர் முஹைதீன் யாசினுக்குப் பி.எச். தலைமை மன்றம் நேற்று அழைப்பு விடுத்தது.
இன மற்றும் மத அரசியலுக்கு அப்பாற்பட்ட பி.என்.னின் உறுதிப்பாட்டையும் லிம் கேள்வி எழுப்பினார்.
“நாட்டின் நலன்களைக் கட்சி அரசியல் நலன்களுக்கு மேலாக வைக்க வேண்டிய நேரம் இது, அரசியல் நிலைகள் மற்றும் நலன்களைப் பெறுவதற்கான நேரம் இதுவல்ல,” என்று அவர் கூறினார்.