அவசரகாலப் பிரகடனத்திற்கான பிரதமர் முஹைதீன் யாசின் முன்மொழிவை, மாட்சிமை தங்கியப் பேரரசர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷா ஏற்காததால், அவருக்கு எதிராக வழக்கறிஞர் ஒருவர் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
இன்று காலை, வாதியான சையத் இஸ்கந்தர் சையத் ஜாபர், கெங்காதரன் & கோ சட்ட நிறுவனத்தின் மூலம், கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தின் பதிவாளர் அலுவலகத்தில், பூர்வாங்க அழைப்பாணையைத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் மலேசிய அரசாங்கம் ஒரே பிரதிவாதியாக பட்டியலிடப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, மன்னர், பிரதமரின் முன்மொழிவை நிராகரித்தார், தற்போதைக்கு அவசரநிலை அறிவிப்பு தேவையில்லை என்று கூறியதோடு, தேசியக் கூட்டணி (பிஎன்) அரசாங்கம், கோவிட் -19 தொற்றுநோயைத் திறம்பட கையாள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
பிரதமர் கேட்டுக்கொண்ட போதிலும், அவசரகால நிலையை அறிவிக்க வேண்டாம் என்று சுயேட்சையாக முடிவெடுக்க, மன்னருக்கு முழு அதிகாரம் உள்ளதா என்பதைத் தீர்மானிக்குமாறு சையத் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.
மத்திய அரசியலமைப்பின் 40 மற்றும் 150-வது பிரிவுகளின் அடிப்படையில், இந்த விஷயத்தைத் தீர்மானிக்குமாறு வாதி நீதிமன்றத்திடம் விண்ணப்பித்துள்ளார்.
40-வது சட்டப்பிரிவு, பொதுவாக, மன்னர் அமைச்சரவையின் ஆலோசனைபடி செயல்பட வேண்டும் அல்லது அமைச்சரவையின் பொது அதிகாரத்தின் கீழ் அமைச்சர்கள் செய்லபட வேண்டியத் தேவையைப் பற்றி விவாதிக்கிறது.
பிரிவு 150, மற்றவற்றுடன், அவசரகால அறிவிப்பை வெளியிடுவதற்கான மன்னரின் அதிகாரம் பற்றி விவாதிக்கிறது. அதில், கூட்டமைப்பு அல்லது அதன் எந்தப் பகுதியும் பாதுகாப்பு, பொருளாதாரம் அல்லது பொது ஒழுங்கு அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் சூழ்நிலைகள் இருப்பின், மன்னர் அவசரகாலத்தை அறிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
“இது கூட்டாட்சி அரசியலமைப்பை ஆதரிக்கும், பொது நலனுக்கான வழக்கு,” என்று வாதி தனது வழக்குக்கான காரணக் கடிதத்தில் கூறியுள்ளார்.
பிரமாணப் பத்திரத்தின் நகலின்படி, பிரதமரின் ஆலோசனையின் பேரில் மன்னர் செயல்பட மறுத்ததன் விளைவாக, மன்னர் தனது செயல்பாடுகளை மத்திய அரசியலமைப்பின் 40 மற்றும் 150-வது பிரிவுகளுக்கு முரணாகச் செயல்பட்டுள்ளார் என்று சையத் இஸ்கந்தர் கூறினார்.
“நீதிமன்றம் மேற்கண்ட கேள்விகளுக்கானப் பதில்களை நிர்ணயிப்பது, சட்டத்தின் ஆட்சியையும் மத்திய அரசியலமைப்பையும் நிலைநிறுத்த முக்கியமானது என்று நான் உண்மையிலேயே நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.