2021 வரவு செலவு திட்டம் பற்றி விவாதிக்க பி.எச். தலைவர்கள் தெங்கு ஜஃப்ருலைச் சந்திக்கிறார்கள்

இன்று, பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) தலைவர்கள், நிதியமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அப்துல் அஜீஸ்-உடன், 2021 வரவுசெலவுத் திட்டம் குறித்து விவாதிக்க, புத்ராஜெயாவில் உள்ள நிதி அமைச்சிற்கு வந்துள்ளனர்.

பி.கே.ஆரின் பிரதிநிதிகள் – பொதுச்செயலாளர் சைபுதீன் நாசுதியோன் இஸ்மாயில்; சுபாங் எம்.பி., வோங் சென்; இளைஞர் பிரிவு தலைவர் அக்மல் நசீர் மற்றும் செத்தியவங்சா எம்பி நிக் நஸ்மி நிக் அகமது ஆகியோரை அங்கு காணமுடிந்தது.

பட்ஜெட் தொடர்பாக பி.கே.ஆர். ஆறு பரிந்துரைகளைத் தெங்கு ஜஃப்ருலிடம் சமர்ப்பிக்கும் என்று வோங் சென் விளக்கினார்.

இதற்கிடையில், அமானாவின் பிரதிநிதிகள், அதன் தலைவர் மொஹமட் சாபு மற்றும் கோலா சிலாங்கூர் எம்.பி. டாக்டர் சுல்கிப்ளி அஹ்மத் ஆகியோரும் அங்கு வந்து சேர்ந்தனர்.

டிஏபி பிரதிநிதிகளாக, பொதுச்செயலாளர் லிம் குவான் எங், டோனி புவா மற்றும் பாங்கி எம்.பி. ஓங் கியான் மிங் ஆகியோரும் சந்திப்பில் கலந்துகொள்ள வந்திருந்தனர்.

இன்று மதியம் 3 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை கூட்டம் நடைபெறும் என்று நேற்று தெரிவிக்கப்பட்டிருந்தது.