கோவிட் 19 : இன்று 1,009 புதியத் தொற்றுகள், 6 இறப்புகள் பதிவு

கடந்த 24 மணி நேரத்தில், நாட்டில் 1,009 கோவிட் -19 புதியத் தொற்றுகளும் 6 மரணங்களும் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

சபாவில் 6 மரணங்களும் சிலாங்கூரில் ஒரு மரணமும் பதிவாகியுள்ளதாக சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, புத்ராஜெயாவில் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

ஆக, நாட்டில் இதுவரை 277 பேர் இந்தக் கொடு நோய்க்குப் பலியாகியுள்ளனர், அவர்களுள் 143 பேர் சபா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

அவசரப் பிரிவில் 78 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 28 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

இன்று 839 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியதாகவும் டாக்டர் நூர் ஹிஷாம் சொன்னார்.

564 புதிய சம்பவங்களுடன், சபா தொடர்ந்து அத்தொற்றுக்கு அதிகம் பாதிப்புக்குள்ளான மாநிலமாகத் திகழ்கிறது

சபாவை அடுத்து, மாநிலம் வாரியாகப் புதியத் தொற்றுகளின் எண்ணிக்கை :-

சிலாங்கூரில் 177, லாபுவானில் 92, நெகிரி செம்பிலானில் 90, பினாங்கில் 36, கோலாலம்பூரில் 14, கெடாவில் 7, பேராக் மற்றும் சரவாக்கில் 6, மலாக்காவில் 5, ஜொகூரில் 2, புத்ராஜெயாவில் 1.

நாட்டில், இன்று மேலும் 5 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்தார்.

அவை, சுத்ரா திரளை – சபா, கோத்தா கினபாலு மாவட்டம், ரியா-30 திரளை – சபா, துவாரான் மாவட்டம், தாமார் திரளை – சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டம், இந்தான் திரளை – பினாங்கு, நோர்தீஸ்ட் மாவட்டம் மற்றும் தித்திவங்சா திரளை – கோலாலம்பூர் ஆகியவையாகும்.