பி.கே.பி.ஐ.எம். கிளாந்தான் : மாநிலப் பிரதிநிதிகளின் சம்பள உயர்வு நியாயமற்றது

கோவிட் -19 தொற்றுநோய் மக்களின் வாழ்க்கையைப் பாதித்தது மட்டுமல்லாமல், கல்வி உலகிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்று மலேசிய இஸ்லாமிய மாணவர்களின் தேசியச் சங்கம் (பி.கே.பி.ஐ.எம்) கிளாந்தான் தெரிவித்துள்ளது.

எனவே, கல்விச் செலவைச் சமாளிக்க முடியாத குடும்பங்களின் சிரமத்திற்கு மாநில அரசு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று அந்த அமைப்பு கூறியது.

இதுதவிர, வளர்ந்து வரும் வேலையில்லாத் திண்டாட்டத்திற்குத் தீர்வுகாண மாநில அரசு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் கிளாந்தான் பி.கே.பி.ஐ.எம். தலைவர் முஹம்மது அகில் இக்பால் மொஹட் சுல்கிஃப்லி கூறினார்.

எனவே, கிளாந்தான் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்களின் சம்பளத்தை அதிகரிக்கும் மாநில அரசின் நடவடிக்கை ஏற்கத்தக்கது அல்ல என்றார் அவர்.

“பிற மாநிலப் பிரதிநிதிகளுடனான சம்பள இடைவெளியைக் குறைக்க, கிளாந்தான் மாநிலப் பிரதிநிதிகளின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் நியாயமற்றது என்று பி.கே.பி.ஐ.எம் கிளாந்தான் கருதுகிறது.

“மாநில வரவு செலவு திட்டத்தில், மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மாநில அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும், குறிப்பாக கோவிட் -19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட பி40 குழுவிற்கும், மக்களைக் கவனித்துக்கொள்வதில் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருக்கும் முன்னணி ஊழியர்களுக்கும் கூடுதல் சலுகைகளை வழங்க வேண்டும்,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

நேற்று, கிளாந்தான் சட்டமன்றம் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்கள், அடிப்படைச் சம்பளமாக RM3,000 முதல் RM5,000 வரை உயர்த்தப்படும் என்று செய்தி வெளியிடப்பட்டது.

கிளாந்தான் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பிற மாநிலப் பிரதிநிதிகள் இடையிலான சம்பள இடைவெளியைக் குறைக்க, இந்த அதிகரிப்பு தேவை என்று கிளாந்தன் துணை மந்திரி பெசார், மொஹமட் அமர் அப்துல்லா கூறியிருந்தார்.

அடுத்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில், அனைத்து மட்டங்களிலும் கல்வி உதவிக்கு முன்னுரிமை அளிக்குமாறு பி.கே.பி.ஐ.எம். கிளாந்தான் மாநில அரசை வலியுறுத்துவதாக அகில் இக்பால் தெரிவித்தார்.

“தலைவர்கள் மக்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக இருக்க வேண்டும், குறிப்பாக மக்களை மேம்படுத்துவதற்கான திட்டங்களை மேற்கொள்ளும்போது,” என்று அவர் மேலும் சொன்னார்.