குழந்தைகளைத் தடுப்பு மையங்களிலிருந்து விடுவியுங்கள், என்.ஜி.ஓ. அரசாங்கத்திற்கு வலியுறுத்து

மனித உரிமைகள் குழுவான, லோயர்ஸ் ஃபார் லிபர்ட்டி (Lawyers For Liberty-எல்.எஃப்.எல்) தேசியக் குடிநுழைவு தடுப்பு மையத்தில் உள்ள மொத்த குழந்தைகளின் எண்ணிக்கையில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

கோவிட் -19 நோயால் பாதிக்கப்படுவதற்கான அபாயம் அதிகம் உள்ளதால், மனித உரிமைகளின் அடிப்படையில் அக்குழந்தைகளை விடுவிக்க வேண்டுமென அந்தத் தன்னார்வத் தொண்டு நிறுவனம் அரசுக்கு அழைப்பு விடுத்தது.

ஏனென்றால், சில குடிநுழைவு தடுப்பு மையங்கள் குறுகிய இடங்களாக இருக்கும் பட்சத்தில் கோவிட் -19 தொற்றுகள் அதிகம் பரவ வாய்ப்புள்ளது.

அக்டோபர் 26 வரையில், 756 புலம்பெயர்ந்த குழந்தைகள் குடிநுழைவுத் தடுப்பு மையங்களில் உள்ளதாக, சமீபத்தில் உள்துறை அமைச்சு வெளியிட்ட அறிக்கையை, எல்எஃப்எல் ஒருங்கிணைப்பாளர் ஜைட் மாலெக், இன்று ஓர் அறிக்கையில் மேற்கோள் காட்டியுள்ளார்.

அந்த எண்ணிக்கையில், 405 குழந்தைகள் பாதுகாவலர்கள் இல்லாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் (326 குழந்தைகள்) மியான்மரைச் சேர்ந்தவர்கள்.

இது “மனிதாபிமானமற்றது” என்று கருதும் ஜைட், தடுத்து வைக்கப்பட்டுள்ள மியான்மர் குழந்தைகள் ரோஹிங்கியா அகதிகளா என்று கேள்வி எழுப்பினர்.

“நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்த மற்றும் அகதிக் குழந்தைகளைத் தடுத்து வைப்பது ஒரு நியாயமான முடிவாக அதிகாரிகள் கருதுவது ஏன் என்பது புரிந்துகொள்ள முடியவில்லை, அவற்றில் பெரும்பாலானவர்கள் பாதுகாவலர்கள் இல்லாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

“அரசாங்கம் வேண்டுமென்றே இந்தக் குழந்தைகளைக் (பாதிக்கப்படக்கூடிய) கோவிட் -19 நோய்த்தொற்றுக்கு ஆளாக்குகிறது… இந்தக் குழந்தைகளைக் குற்றவாளிகளாகக் கருதக்கூடாது, ஏனெனில் அவர்கள் தங்கள் விருப்பப்படி நாட்டிற்குள் நுழையவில்லை, இந்நிலைமைக்கு பலியானவர்கள் மட்டுமே,” என்று அவர் கூறினார்.

குழந்தைகளின் உரிமைகள் தொடர்பான ஐ.நா. மாநாட்டை மேற்கோளிட்டு, மலேசியாவிற்கும் குழந்தைகள் நலன்களுக்காகச் செயல்பட வேண்டிய கடமை உள்ளது என்றார் ஜைட்.

“எனவே, இந்தக் குழந்தைகளை உடனடியாக தடுப்புக்காவலில் இருந்து விடுவிக்கவும், பெற்றோர்கள், பாதுகாவலர்கள் அல்லது பொருத்தமான அதிகாரிகளிடம் ஒப்படைக்கவும் நாங்கள் அரசாங்கத்தை வற்புறுத்துகிறோம்,” என்று அவர் கூறினார்.

மலேசியாகினி இதுகுறித்து விபரம் பெற, உள்துறை அமைச்சு மற்றும் குடிநுழைவுத் துறையைத் தொடர்பு கொண்டுள்ளது.