தேசிய வகைப் பள்ளிகளுக்கான சிறப்பு மானியங்கள் எங்கே?

பட்ஜெட் 2021 | எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 2021 வரவுசெலவுத் திட்டத்தில் தேசிய வகைப் பள்ளிகள் ஓரங்கட்டப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர்.

இன்று பிற்பகல், மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட 2021 வரவுசெலவுத் திட்டத்தில் சீனத் தனியார் மேல்நிலைப் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்று தேசியக் கூட்டணி அரசாங்கத்தை டிஏபி எம்.பி.க்கள் விமர்சித்தனர்.

கோத்தா மலாக்கா எம்.பி. கூ போய் தியோங், நம்பிக்கை கூட்டணி காலத்தில், சீனத் தனியார் மேல்நிலைப் பள்ளிகளுக்கு 2019-ம் ஆண்டில் RM12 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டது, 2020 பட்ஜெட்டில் இந்த நிதி RM15 மில்லியனாக அதிகரித்தது என ஓர் அறிக்கையில் கூறினார்.

இருப்பினும், இன்று 2021 வரவுசெலவுத் திட்டத்தில், நாட்டின் 60 சீனத் தனியார் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஒரு சென் கூட ஒதுக்கப்படவில்லை, இது தேசியக் கூட்டணி அரசாங்கம் தேசிய வகைப் பள்ளிகளை மதிக்கவில்லை என்பதனைத் தெளிவாகக் காட்டுகிறது என்று கூ கூறினார்.

இந்தச் சம்பவம் குறித்து தனது வருத்தத்தைத் தெரிவித்த கூ, ம.சீ.ச.-வை விமர்சித்ததோடு, அதன் தலைவர் வீ கா சியோங், கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்ட அப்பள்ளிகள், பொருளாதார வீழ்ச்சியின் போது எவ்வாறு தங்களைத் தற்காத்து கொள்ளும் என்பதைச் சீனச் சமூகத்திற்கு விளக்குமாறு கேட்டுக் கொண்டார்.

“நம்பிக்கை கூட்டணியின் முயற்சிகள் மீண்டும் வீணாகின்றன. சீனக் கல்வி மற்றும் சீனத் தனியார் மேல்நிலைப் பள்ளிகளைப் பாதுகாக்க மசீச-வின் செயல் எங்கே?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கிடையில், முன்னாள் கல்வி அமைச்சர் தியோ நீ சிங் சமூக ஊடகங்களில் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார்.

நிதியமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அஸீஸ் தனது வரவு செலவு திட்ட உரையில், தமிழ்ப் பள்ளிகளுக்குச் சிறப்பு ஒதுக்கீடு எதுவும் குறிப்பிடாததைத் தொடர்ந்து, சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர், வி கணபதிராவ் தேசிய வகைப் பள்ளிகளுக்கான சிறப்பு ஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்யுமாறு தேசியக் கூட்டணி அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டார்.

இதற்கு முன், 2013 முதல், ஒவ்வொரு ஆண்டும் தேசிய வகைப் பள்ளிகள் RM50 மில்லியன் சிறப்பு ஒதுக்கீட்டைப் பெற்று வந்தன.

“இந்த முறை, தேசியக் கூட்டணி அரசாங்கம் பொதுவாக அனைத்து பள்ளிகளுக்கும் RM800 மில்லியனை அறிவித்துள்ளது. எனவே, தேசிய வகைப் பள்ளிகளுக்கு முன்னுரிமை இருக்காது.

“இந்த RM800 மில்லியனில், சிறப்பு ஒதுக்கீட்டை தேசியக் கூட்டணி அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்,” என்று மலேசியாகினி தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.

வரவு செலவு திட்டத்தில் 15.6 விழுக்காட்டை, அதாவது RM50.4 பில்லியனை தேசியக் கூட்டணி அரசு கல்வி அமைச்சுக்கு ஒதுக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.