2021 வரவுசெலவுத் திட்டம் ‘சிக்கலில் இருக்கும் மக்களை ஏமாற்றியது’ – தொழிற்சங்கங்கள், ஆர்வலர்கள்

பட்ஜெட் 2021 | நிதியமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அஜீஸ் தாக்கல் செய்த 2021 வரவுசெலவுத் திட்டம், பி40 சமூகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறிவிட்டதாகப் பல தொழிற்சங்கங்களும் தன்னார்வத்தொண்டு ஆர்வலர்களும் தங்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினர்.

“இது மிகவும் ஏமாற்றமளிக்கிறது, பயமுறுத்தும் ஒரு பட்ஜெட் மற்றும் பெரும்பாலான கொள்கைகள் மறுசுழற்சி செய்யப்பட்டுள்ளன,” என்று சரவாக் தொழிற்சங்கக் காங்கிரஸ் செயலாளர் ஆண்ட்ரூ லோ கூறினார்.

“தேசிய அனுதாப நிவாரணம்  (Bantuan Prihatin Nasional – பிபிஎன்) மூன்றாம் கட்ட உதவியைத் தவிர, மாத வருமானம் RM2,500-க்கும் குறைவாக உள்ள குடும்பங்களுக்கு RM1,000 உதவி கிடைக்கும், இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ள குடும்பங்கள் RM1,800 பெறுகின்றன, மீதமுள்ளவை அனைத்தும் புறக்கணிக்கப்பட்டுள்ளன,” என்று லோ கூறினார்.

“1 விழுக்காடு வரி குறைப்பு என்பது வெறும் RM300, பல்வேறு தள்ளுபடியைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, ஈபிஎஃப் பங்களிப்பில் 9 விழுக்காட்டைக் குறைத்து,  பணத்தை வெளியெடுக்க அனுமதிப்பது, ஊழியர்களின் ஓய்வூதிய சேமிப்பைத் தியாகம் செய்து, எதிர்காலத்தில் பிரச்சினைகளுக்கு வித்திடும்,” என்று அவர் மேலும் கூறினார்

 பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் இல்லை

மறுபுறம், இந்தப் பட்ஜெட் தொழிலாளர்களுக்கு, குறிப்பாக பெண் தொழிலாளர்களுக்குப் போதுமான பாதுகாப்பை வழங்கத் தவறிவிட்டது என்று, ‘எம்பவர் மலேசியா’ (மலேசியாவை மேம்படுத்துவோம்) தன்னார்வத் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த டோரதி பெஞ்சமின் கருதுகிறார்.

“அடிப்படையில், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (எம்சிஓ) அமல்படுத்தப்பட்டபோது, குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களைக் கவனித்துக்கொள்வதில் பெண்களின் வேலைப்பளு அதிகரித்தது, பள்ளிகள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு நிலையங்களும் அக்காலகட்டத்தில் மூடப்பட்டிருந்தன. இந்த நெருக்கடிகள் பட்ஜெட்டில் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படவில்லை,” என்று அவர் கூறினார்.

பெண் தொழில்முனைவோரை மேம்படுத்துவதற்காக, RM95 மில்லியன் சிறப்பு நுண்நிதி (mikro kredit) உதவி ஒதுக்கீடு செய்வதாக தெங்கு ஜஃப்ருல் அறிவித்துள்ளார்.

மைக்ரோ தொழில்முனைவோர் வணிக மேம்பாட்டுத் திட்டம் (Bizme) மூலம், 2,000-க்கும் மேற்பட்ட பெண் தொழில்முனைவோருக்கு, வழிகாட்டல் திட்டங்கள், குறிப்பாக பேக்கேஜிங் & லேபிளிங், சந்தைப்படுத்தல் உத்திகள் மற்றும் வணிகத் தொழில்நுட்ப வழிகாட்டுதல்கள் போன்றவை வழங்கப்படும்.

இதுதவிர, பெர்சத்துவான் சஹாபாட் வனித்தா சிலாங்கூர், ஐரீன் சேவியர் குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிக்கும் அம்சத்தையும் ஆராயுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

“முக்கிய விஷயம் என்னவென்றால், பெரும்பான்மையான பெண்கள் மிகக் குறைந்த ஊதியத்தில் – குறைந்தபட்ச ஊதியத்தில்- வேலை செய்கிறார்கள். அரசாங்கம் உண்மையில் பெண்களுக்கு உதவ விரும்புகிறது என்றால், அவர்கள் அதில் தோல்வியடைந்துள்ளனர் என்றே சொல்ல வேண்டும்.

“இந்தப் பிரச்சினைக்கு நீண்டகாலமாகத் தீர்வு இல்லை. மைக்ரோ கிரெடிட் திட்டம் மிகவும் சிறியது, அது பெரும்பாலான பிரச்சினைகளைத் தீர்க்கவில்லை என்பதே உண்மை,” என்று ஐரீன் கூறினார்.

தனித்து வாழும் தாய்மார்களுக்கும் இந்தப் பட்ஜெட்டில் ஒதுக்கீடுகள் இருக்க வேண்டுமென ஐரீன் தெளிவுபடுத்தினார்.

பாதிக்கப்பட்ட தொழில்துறைகளுக்கு எந்தவிதமான மானியமும் இல்லை

மலேசிய விமானப் பணியாளர்கள் தேசிய ஒன்றியத்தின் (நுஃபாம்) செயலவைத் தலைவர், இஸ்மாயில் நசருதீன், 8,000 விமான ஊழியர்களுக்குப் பயிற்சிகள் வழங்கவும், மீண்டும் அவர்களைப் பணியமர்த்தவும் வழங்கப்பட்ட RM50 மில்லியன் ஒதுக்கீடு அறிவிப்பு குறித்து தனது கோபத்தை வெளிபடுத்தினார்.

“இது மிகவும் குறைவு. விமானத் தொழில்துறை மிகவும் பலவீனமாக உள்ளது, வணிகத்தைத் தொடர்ந்து பராமறிக்க அதற்கு அவசர உதவி தேவைப்படுகிறது,” என்ற இஸ்மாயில், கடந்த மாதம் பணிநீக்கம் செய்யப்பட்ட ஏர் ஏசியா மற்றும் மலிண்டோ ஏர்வேஸ் ஊழியர்களின் நிலைமையையும் குறிப்பிட்டார்.

இந்தப் பயிற்சி, பாதிப்புகளை மீட்டெடுப்பதற்காக மட்டுமே, ஆனால் தொழில்துறைக்கு அது புனர்வாழ்வளிக்காது என்று அவர் கூறினார்.

“பாதிக்கப்பட்ட தொழில்துறைகளுக்குச் சிறப்பு உதவி தேவை, குறிப்பாக சுற்றுலா, விமான நிறுவனங்கள் மற்றும் தங்கும் விடுதிகள்.

“இந்தப் பயிற்சிகள், இதுபோன்ற முக்கியமான சூழ்நிலைகளுக்கு உதவாது, மேலும் வேலை இழந்தவர்களுக்கு இதனால் பயன் இல்லை, பயிற்சி நிறுவனங்களுக்கு மட்டுமே அதிக வருமானத்தை வழங்கும்,” என்று அவர் மேலும் கூறினார்.

புதிய சட்ட சீர்திருத்த கூட்டணியின் தலைவர், கோபால் கிஷனும் இஸ்மாயிலின் கூற்றை ஆமோதித்தார்.

“தொழிலாளர்களுக்கும் பி40 குழுவினருக்கும் விரைவான தீர்வை நான் இதில் காணவில்லை. கோவிட் -19 தொற்றினால் தொடக்கத்தில் இருந்து அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள்தான், இப்போதும் துன்புறுத்தப்படுவது அவர்கள்தான்,” என்று அவர் கூறினார்.

பூர்வக் குடியினருக்கான உதவிகள் தெளிவாக இல்லை

ஒராங் அஸ்லி ஆர்வலர் பாஹ் டோனி, அச்சமூகத்திற்கான ஒதுக்கீடுகள் தெளிவாக இல்லை, ஏனெனில் இந்த உதவிகள் ஒராங் அஸ்லி நலத்துறை இலாகாவுக்கு (ஜாகோவா) மட்டுமே அனுப்பப்படுகிறது.

“வேலை வாய்ப்புகளை வழங்கும் நிறுவனங்கள் மீது, நாம் கவனம் செலுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இதன்வழி அவர்கள் ஒராங் அஸ்லிகளுக்கு உதவ முடியும்.

பூர்வக்குடியினருக்குச் சுற்றுலா வழிகாட்டிகளாக 500 வேலை வாய்ப்புகளை வழங்க விரும்பிய அரசாங்கத்தின் முந்தையத் திட்டம் குறித்தும் பாஹ் டோனி கேள்வி எழுப்பினார்.

மாற்றுத்திறனாளிகளுக்குப் போதுமானதாக இல்லை

மாற்றுத்திறனாளிகள் செயற்பாட்டாளர், அந்தோணி தனசயன் தனது குழுவினருக்கு அரசாங்கம் வழங்கிய உதவிகள் போதுமானதாக இல்லை என்று விவரித்தார்.

RM450 உதவிநிதி பெறும் மாற்றுத்திறனாளிகளுக்கு RM50 அதிகரிக்கவும், பணிபுரிபவர்களுக்கு RM300 உதவிநிதியும் வழங்க அரசாங்கம் முடிவு செய்ததைத் தொடர்ந்து அவர் இதனைத் தெரிவித்தார்.

“அரசாங்கம் வழங்கும் உதவியில் எங்களுக்கு மகிழ்ச்சி, ஆனால் உணவு மற்றும் மருத்துவச் செலவுகளுக்கு இந்த உதவி உண்மையில் போதாது,” என்று அவர் மேலும் கூறினார்.