`வருமான வரி வசூலிப்பதன் மூலம், அரசாங்கம் எப்படி வருமானம் ஈட்டும்’

பட்ஜெட் 2021 | டாமான்சாரா நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா, 2021 வரவுசெலவுத் திட்டம் எவ்வாறு தனிநபர் வருமான வரியின் வருவாயை 18 விழுக்காடு உயர்த்தும் என்று ஆச்சரியப்பட்டார்.

ஏனென்றால், ஆண்டுக்கு RM50,001 முதல் RM70,000 வரை வரி செலுத்தக்கூடிய வருமானம் உள்ள நபர்களுக்கு, வருமான வரி விகிதம் ஒரு விழுக்காடு குறைக்கப்படவுள்ளது என்று புவா கூறினார்.

“2020-ஆம் ஆண்டில், RM153 பில்லியனாக இருந்த வருவாயை, 2021-ஆம் ஆண்டில் RM172 பில்லியனாக உயர்த்த அரசாங்கம் எண்ணம் கொண்டுள்ளது, என்னைப் பொறுத்தவரை அதில் தவறில்லை.

என்னை ஆச்சரியப்படுத்தியது என்னவென்றால், திட்டமிடப்பட்ட அந்த அதிகரிப்பு தனிநபர் வருமான வரியிலிருந்து ஈட்டப்படும் என்பதுதான், RM35.9 பில்லியனிலிருந்து (2020) RM42.4 பில்லியனாக (2021 ஆம் ஆண்டில்), இது 18 விழுக்காடு அதிகரிப்பு ஆகும்

“ஒரு குறிப்பிட்ட குழுவிற்கு ஒரு விழுக்காடு குறைப்பை அறிவித்துவிட்டு, தனிநபர் வருமான வரியை 18 விழுக்காடு அதிகரிப்பது… அவர்கள் இதை எவ்வாறு அடைவார்கள் என்று எனக்குத் தெரியவில்லை,” என்று அவர் இன்று கினிடிவிக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

கோவிட் -19 பாதிப்பின் சுமையைக் குறைப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளில் ஒரு பகுதியாக, இந்த வரி குறைப்பு நடவடிக்கைகள் உள்ளன.

2020-ல், RM59 பில்லியனாக இருந்த நிறுவன வரி வசூலை, அடுத்த ஆண்டு RM64.5 பில்லியனாக உயர்த்த அரசாங்கம் நோக்கம் கொண்டுள்ளதால், வணிக சமூகம் இதை எவ்வாறு கையாளும் என்றும் புவா கேள்வி எழுப்பினார்.

“நிறுவனங்களைப் பொறுத்தவரை, (அதன் வருமான வரி) உயர்ந்து கொண்டிருக்கிறது. அடுத்த ஆண்டு (தற்போதைய) வணிகச் சூழலில் நிறுவனங்களால் அதைச் செலுத்த முடியுமா என்பது கேள்விக்குறியே,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், பக்காத்தான் ஹராப்பான் கொண்டு வந்த ஆறு திட்டங்களில் ஒன்று மட்டுமே, 2021 வரவுசெலவுத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது என்றும் அந்த டிஏபி தலைவர் கூறினார், குறிப்பாக நலன் மற்றும் பாதுகாப்பு உதவிகளை  RM1,000-ஆக செயல்படுத்துவது குறித்தது.

இருப்பினும், அடுத்த வாரம் மக்களவையில் நடைபெறும் பட்ஜெட் விவாதத்தின்போது, எதிர்க்கட்சியின் பரிந்துரைகளைத் தேசியக் கூட்டணி பரிசீலிக்கும் என்று தான் நம்புவதாகப் புவா தெரிவித்தார்.

ஆளும் கட்சி கூட்டணியால், அவர்களின் திட்டங்கள் எதுவும் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டாலும், வாக்களிப்பதைப் பக்காத்தான் ஹராப்பான் தவிர்க்காது என்றும் அவர் சொன்னார்.