அன்வர் : பலவீனமான பட்ஜெட், பொருளாதாரத்தை எவ்வாறு மீட்டெடுக்கும் என்று தெரியவில்லை

பட்ஜெட் 2021 | மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட 2021 வரவுசெலவுத் திட்டத்தில் மிக முக்கியமான பலவீனம் என்னவென்றால், பொருளாதார வளர்ச்சியை எவ்வாறு மீட்டெடுப்பது என்பது குறித்த விவரங்களை அது தரவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

நேற்று நாடாளுமன்றத்தில், பட்ஜெட் தாக்கல் முடிந்தவுடன், அவரது முகநூல் பக்கத்தில், அன்வர் இதனைத் தெரிவித்தார்.

“மிகவும் வெளிப்படையான பலவீனம் என்னவென்றால், பொருளாதாரத்தை நாம் எவ்வாறு புதுப்பிக்கப் போகிறோம் என்பது பற்றி அதில் குறிப்பிடப்படவில்லை. அது எனக்கு ஒரு பெரிய பலவீனமாகத் தெரிகிறது,” என்று அந்தப் போர்ட்டிக்சன் எம்.பி. தெரிவித்தார்.

முன்னதாக, நிதியமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அப்துல் அஜீஸ், RM322.54 பில்லியன் கொண்ட 2021 வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்தார், இது அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட மிகப்பெரிய பட்ஜெட்டாகும்.

அதில், மேலாண்மை செலவினங்களுக்காக RM236.54 பில்லியன் (இந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 1.9 விழுக்காடு குறைந்துள்ளது) மற்றும் வளர்ச்சி செலவினங்களுக்காக RM69 பில்லியன் (இந்த ஆண்டை விட 23.21 விழுக்காடு அதிகரித்துள்ளது) ஒதுக்கப்பட்டுள்ளது.

கோவிட் -19 நிதியாக RM17.9 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் கருத்து தெரிவித்த அன்வர், சில திட்டங்களை விவாதிக்க வேண்டிய அவசியம் இருப்பதாகக் கூறினார், இது “கவலை அளிக்கிறது” என்று கூறிய அவர், அவற்றில் நிறுவன வரி RM4 பில்லியன் மட்டுமே குறைக்கப்பட்டதும் அடங்கும் என்றார்.

மத்திய அரசின் 2021 நிதி கணக்கெடுப்பு மற்றும் வருவாய் மதிப்பீடுகள், நிதி அமைச்சின் அடிப்படையில், 2021-ம் ஆண்டுக்கான பெருநிறுவன வரி கணிப்பு RM59.4 பில்லியன் ஆகும், 2019-ம் ஆண்டில் இது RM63.7 பில்லியன்.

“அதை ஏற்றுக்கொள்வது கடினம், ஏனென்றால் பல வணிகங்கள் கிட்டத்தட்ட திவாலாகிவிட்டன அல்லது வருமானத்தை இழந்துவிட்டன அல்லது சிறு வருமானமே பெறுகின்றன.

“ஆக, இதில் இன்னும் வெளிப்படையான அணுகுமுறை இருக்க வேண்டும், இது நமது கொள்கைகளைப் பாதிக்கும் என்பதால் உண்மைகளைக் கூற வேண்டும்,” என்று அவர் கூறினார்.

சிறப்பு விவகாரத் துறை இலாகாவின் (சேவைகள்) ஒதுக்கீட்டையும் அன்வர் விமர்சித்தார் – RM85.5 மில்லியன் ஒதுக்கீடு – மாற்றுத்திறனாளிகள் போன்ற சில குழுக்களுக்கான ஒதுக்கீடுகளும் அவரைப் பொறுத்தவரை, மிகச் சிறியதே.

“எனவே, எங்கள் விவாதத்தின்போது, நான் திங்களன்று தொடங்கவுள்ளேன், இந்த புள்ளிவிவரங்களைக் காண்பிப்பேன், நாம் அதனைப் பார்க்கும்போது தெரியும்.

“இல்லையெனில், மக்கள் பார்ப்பார்கள், ‘எனக்கு RM500 கிடைக்கிறது, RM300 கிடைக்கிறது’ என்று, ஆனால் எப்படி என்பதை அவர்கள் முழுமையாகப் பார்க்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

அன்வர் கருத்துப்படி, தேவைப்படுபவர்களுக்குப் பண உதவி வழங்குவது நல்லதுதான், ஆனால் பொருளாதார மீட்சிக்கான திட்டம் அது அல்ல.

“நமக்கு (தேவை என்னவென்றால்) ஓர் ஒழுங்கான கட்டமைப்பு (பொருளாதாரத்தைப் புதுப்பிக்க),” என்று அவர் கூறினார்.

அனைத்து வங்கிக் கடனாளிகளுக்கும் கடனைத் திருப்பிச் செலுத்தும் தடை விரிவாக இல்லாதது மற்றும் அனைத்து பங்களிப்பாளர்களுக்கும் ஈபிஎஃப் பணத்தைத் திரும்பப் பெற விரிவான அனுமதி இல்லாதது ஆகியவைத் தொட்டும் அன்வர் பேசினார்.

“இந்த நிதி அமைச்சர் வங்கி நலன்களைப் பாதுகாப்பதிலேயே அதிகக் கவனம் செலுத்துகிறார் என நான் நினைக்கிறேன், கடன் வாங்கியவர்கள் மற்றும் பொருளாதாரத்திற்கு அவர் முக்கியத்துவம் வழங்கவில்லை,” என்றார் அன்வர்.

“அடுத்தது, ஈபிஎஃப் கடனைப் பற்றியது, எதிர்கால (பங்களிப்பாளர்களின்) நலன்களைப் பாதுகாப்பதற்கே ஈபிஎஃப் என்ற ஒரு வாதம் உள்ள போதிலும், தற்போது அந்த நபர் ஓர் இறுக்கமான சூழ்நிலையில் இருக்கும்போது, ஈபிஎஃப் கடனைப் பெறுவதில் சற்று விரிவாக்கம் செய்யலாம்,” என்று அவர் கூறினார்.

பட்ஜெட் தாக்கலின் அடிப்படையில் பார்க்கும்போது, ஒட்டுமொத்த கடன் தடையை அரசாங்கம் நீட்டிக்காது என்று தெரிகிறது.

இருப்பினும், கடனைத் திருப்பிச் செலுத்துவதில் சிக்கல் உள்ள பி40 கடனாளிகளுக்கு வங்கி இரண்டு தேர்வுகளை அளிக்கிறது, அதாவது மூன்று மாதத் தடை, அல்லது மாதத் தவணையை ஆறு மாதங்களுக்குப் பாதியாகக் குறைத்தல்.

கடன் வாங்கிய எம்40 குழுவினர், வருமானக் குறைவு இருந்தால், தங்கள் நிதிச்சுமையை மறுசீரமைக்க வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம்.

இந்த வசதி 2020 டிசம்பரில் தொடங்கும்.

கணக்கு 1-லிருந்து, ஈபிஎஃப் சேமிப்பைப் பெறும் வசதியும் அனுமதிக்கப்படுகிறது, இது வேலை இழந்தோருக்கும், பாதிக்கப்பட்ட 600,000 பங்களிப்பாளர்களின் நிதிச் சுமையை எளிதாக்குவதற்கும் உதவும்.

மாதத்திற்கு மொத்தம் RM500 என, மொத்தம் RM6,000 வரை 12 மாதங்களுக்கு இதனைப் பெறலாம்.