ம.இ.கா. : தேசிய வகைப் பள்ளிகளுக்குச் சிறப்பு மானியம் தேவை

தேசிய வகைப் பள்ளிகளை ஓரங்கட்டியதாகக் கூறப்படும் 2021 வரவுசெலவுத் திட்டத்தில் அதிருப்தி அடைந்த ம.இ.கா. தலைவர் ஒருவர் , உடனடியாக சிறப்பு ஒதுக்கீடுகளை அறிவிக்குமாறு தேசியக் கூட்டணி அரசாங்கத்தை (பி.என்) வலியுறுத்தியுள்ளார்.

கெடா ம.இ.கா. தலைவர் எஸ் ஆனந்தன், அனைத்து பள்ளிகளுக்கும் அறிவிக்கப்பட்ட RM800 மில்லியன் ஒதுக்கீட்டை விநியோகிப்பதில் குழப்பம் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக இது அவசியம் என்று கூறினார்.

“நஜிப் (அப்துல் ரசாக்) காலத்திலிருந்து, ஒவ்வொரு வரவு செலவு திட்டத்திலும் தேசிய வகைப் பள்ளிகளுக்கான சிறப்பு ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் போதும் தொடர்ந்த ஒரு நடைமுறை.

“ஆனால், நேற்றைய வரவுசெலவுத் திட்டம் அனைத்து பள்ளிகளுக்கும் RM800 மில்லியனை அறிவித்திருந்தாலும், அதில் தேசிய வகைப் பள்ளிகளுக்குச் சிறப்பு ஒதுக்கீடு இல்லை என்று கருதப்படுகிறது. குழப்பத்தைத் தவிர்க்க, உடனடியாக இது தீர்க்கப்பட வேண்டும்.

“எனவே, தேசிய வகைப் பள்ளிகளுக்குச் சிறப்பு ஒதுக்கீட்டை உடனடியாக அறிவிக்குமாறு பி.என். அரசாங்கத்தை நாங்கள், ம.இ.கா.வினர், கேட்டுக்கொள்கிறோம்,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்

மக்களவை மேலவை உறுப்பினருமான ஆனந்தன், சிறப்பு ஒதுக்கீட்டை அறிவிப்பதன் மூலம், சமூகத் தலைவர்களுக்கு அதனை விநியோகிப்பது எளிதாக இருக்கும் என்று கூறினார்.

“இல்லையெனில், அது ஒரு சங்கடமான சூழ்நிலையை உருவாக்கும், மானிய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டப் பள்ளிகள், வேண்டுமென்றே அவை ஓரங்கட்டப்பட்டதாக நினைப்பார்கள்.

“எடுத்துக்காட்டாக, 2018 வரவுசெலவுத் திட்டத்தில், பள்ளி முன்னேற்றம் மற்றும் பராமரிப்புக்காக நஜிப் RM550 மில்லியன் ஒதுக்கீடு செய்தார்.

இது தேசியப் பள்ளிகள் RM250 மில்லியன், தேசிய வகை சீனப் பள்ளிகள் (RM50 மில்லியன்), தேசிய வகை தமிழ்ப்பள்ளிகள் (RM50 மில்லியன்), முபாலிக் (மத) பள்ளிகள் (RM50 மில்லியன்), விடுதிப் பள்ளிகள் (RM50 மில்லியன்), மாரா அறிவியல் கல்லூரி (RM50 மில்லியன்) மற்றும் அரசு உதவி பெறும் மதப் பள்ளிகள் (RM50 மில்லியன்).

அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு பணிகளுக்காக, மொத்தம் RM800 மில்லியன் வழங்கப்படுவதாக அரசாங்கம் நேற்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இது தவிர, மோசமான நிலையில் இருக்கும் 50 பள்ளிகளின் கட்டிடங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த RM725 மில்லியன் கூடுதலாக ஒதுக்கப்படும்.

2021 வரவுசெலவுத் திட்டத்தை முன்வைத்த நிதியமைச்சர் ஜஃப்ருல், பள்ளி மேம்பாடு மற்றும் பராமரிப்புக்கான சிறப்பு நிதிக்கு அரசாங்கம் எப்போதும் முன்னுரிமை அளிக்கும் என்று கூறினார்.

சிறப்பு ஒதுக்கீட்டை அறிவிக்காத அரசாங்கத்தின் நடவடிக்கை செல்வாக்கற்ற முடிவாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.