மலேசியக் கல்வி அமைச்சினால் நிர்வகிக்கப்படும் அனைத்து பள்ளிகளும் – நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு (பி.கே.பி.பி) உட்படாத மாநிலங்கள் உட்பட – நாளை முதல் பள்ளியின் கடைசி நாள் வரை மூடப்படும்.
இதனைக் கல்வி அமைச்சர் டாக்டர் ராட்ஸி ஜிடின் இன்று காலை அறிவித்தார்.
நாளை முதல் பி.கே.பி.பி. அமல்படுத்தப்படவுள்ளதால், கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் 74 விழுக்காடு பள்ளிகள் மூடப்படவுள்ளன என்றார் அவர்.
இதில் கிளந்தான், பெர்லிஸ், பஹாங் மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களில் உள்ள பள்ளிகள் மட்டுமே பாதிக்கப்படவில்லை.
ஆகையால், அவர்களின் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் அனைத்து பள்ளிகளையும் முன்பு நிர்ணயிக்கப்பட்ட பள்ளி அட்டவணையின் கடைசி நாள் வரை 17 டிசம்பர் (வெள்ளி மற்றும் சனிக்கிழமை விடுமுறை நாட்களில் உள்ள மாநிலங்களுக்கு) அல்லது 18 டிசம்பர் (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை நாட்களில் உள்ள மாநிலங்களுக்கு) மூட முடிவு செய்ததாக ராட்ஸி கூறினார்.
இருப்பினும், மாணவர்களின் வசதிக்கு ஏற்ப இயங்கலை முறையில் அல்லது இல்லமிருந்து கற்றல் (home-based learning ) மூலம் கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்முறை தொடரும் என்றார் அவர்.
“கோவிட் -19 பாதிப்புகளைக் குறைப்பதில், அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு உதவும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,” என்று சற்றுமுன் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.
பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் போது, அனைத்து ஆசிரியர்களும் தங்கள் பணியிடங்களில் இருக்க வேண்டும் என்று ராட்ஸி கூறினார்.
பள்ளி விடுதிகளில் வசிக்கும் மாணவர்களைப் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் அவர் சொன்னார்.
“இருப்பினும், பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் அழைத்துச் செல்லக் காத்திருக்கும் மாணவர்கள் தொடர்ந்து விடுதியில் தங்கலாம்.
“அந்தக் காலகட்டத்தில், மாணவர்கள் விடுதிக் காப்பாளர் மேற்பார்வையில் இருப்பார்கள். மாணவர்களுக்கான உணவைப் பள்ளி நிர்வாகம் ஏற்பாடு செய்துதரும்,” என்று அவர் கூறினார்.
“முன்னர் அறிவிக்கப்பட்ட 2021 பள்ளி கால மற்றும் விடுமுறை நாட்காட்டியைப் போலவே, பள்ளி 20 ஜனவரி 2021-ல் தொடங்கும்.
“அனைத்துத் தொடக்கப்பள்ளி மாணவர்களும் அந்தத் தேதியில் பள்ளி அமர்வை நேருக்கு நேர் கற்றல் முறையில் தொடங்குவார்கள்.
“இடைநிலைப் பள்ளிகளும், படிவம் 1, 4, 5, மற்றும் 6 மாணவர்கள் உட்பட, அனைத்துத் தொழிற்கல்வி கல்லூரி மாணவர்களும் அதேத் தேதியில் பள்ளி செல்ல தொடங்குவார்கள்,” என்று அவர் கூறினார்.
ராட்ஸியின் கூற்றுப்படி, படிவம் 2 மற்றும் 3 மாணவர்கள், அந்தத் தேதியில் பள்ளி அமர்வைத் தொடங்குவார்கள், ஆனால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வசதிக்கு ஏற்ப இல்லமிருந்து கற்றல் நடைபெறும்.
“அவர்கள் மார்ச் 8, 2021 அன்று, நேருக்கு நேர் கற்றல் அமர்வுக்காகப் பள்ளிக்குத் திரும்புவார்கள்,” என்று அவர் கூறினார்.