எஸ்.பி.எம்., எஸ்.டி.பி.எம்., மற்றும் எஸ்.டி.ஏ.எம். தேர்வுகள் தேதி மாற்றம்

மலேசியக் கல்வி சான்றிதழ் (எஸ்.பி.எம்.), மலேசியத் தொழிற்கல்வி சான்றிதழ் (எஸ்.வி.எம்.), மலேசிய உயர்நிலைக்கல்வி சான்றிதழ் (எஸ்.டி.பி.எம்) மற்றும் மலேசிய உயர்நிலைக்கல்வி (மதம்) சான்றிதழ் (எஸ்.டி.ஏ.எம்) ஆகியப் பொதுத் தேர்வுகளின் தேதிகள், கோவிட் -19 பிரச்சினை காரணமாக மாற்றியமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளன.

கல்வி அமைச்சர், டாக்டர் ராட்ஸி ஜிடின், நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு, மலேசியக் கல்வி அமைச்சு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்.

“எஸ்.பி.எம்., எஸ்.வி.எம்., மற்றும் எஸ்.டி.ஏ.எம். தேர்வுகள் 22 பிப்ரவரி 2021 அன்று தொடங்கும், எஸ்.டி.பி.எம். தேர்வு 20 மார்ச் 2021-ல் தொடங்கும்.

“இந்தப் பொதுத் தேர்வுகள் பற்றிய விவரங்கள், விரைவில் அறிவிக்கப்படும்,” என்று அவர் இன்று புத்ராஜெயாவில் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்

இந்த ஆண்டு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்கள், தேர்வில் அமரும் முன் போதுமான அளவு தங்களைத் தயார்படுத்திகொள்ள உதவும் வகையில், 20 ஜனவரி 2021 முதல் நேருக்கு நேர் பள்ளியைத் தொடர முடிவு செய்துள்ளதாக ராட்ஸி கூறினார்.

“பள்ளிகள் மூடப்படுவதால் பாதிக்கப்படும் மாணவர்களுக்கு இது பயனளிக்கும் என்று கல்வியமைச்சு நம்புகிறது,” என்று அவர் கூறினார்.

விடுதிப் பள்ளிகள், மத தேசிய இடைநிலைப் பள்ளிகள், தொழில்நுட்ப இடைநிலைப் பள்ளிகள், தொழிற்கல்வி கல்லூரிகள் மற்றும் அரச இராணுவக் கல்லூரிகள் போன்ற சிறப்புப் பள்ளிகளில் மாணவர்களின் நுழைவு அனுமதி குறித்து ராட்ஸி கூறுகையில், படிவம் 1 மற்றும் 4-ம் படிவத்திற்கான சிறப்பு பள்ளி சேர்க்கை மதிப்பீட்டை (பி.கே.எஸ்.கே) அமல்படுத்த, ஒரு தேதியைக் கல்வியமைச்சு விரைவில் அறிவிக்கும் என்றார்.