தேசியக் கூட்டணி அரசாங்கத்தில் (பி.என்.) நம்பிக்கைக் கூட்டணியை (பி.எச்.) ஈடுபடுத்த வேண்டுமென்ற பிரதமர் முஹைதீன் யாசினின் முன்மொழிவு நாட்டிற்குப் பேரழிவை ஏற்படுத்தும் என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர் ரஸ்லான் ரஃபி கூறினார்.
முஹைதீன் அரசாங்கத்தை நிர்வகிக்க, எதிர்க்கட்சியின் உள்ளீடு இல்லாமல், அரசாங்கத்தின் மக்களவை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சரவையால் தேவையான ஒத்துழைப்பைத் தரமுடியுமென ரஸ்லான் சொன்னார்.
“நான் பி.என். அரசாங்கத்தை எதிர்க்க விரும்பவில்லை, ஆனால் பிரதமரின் இந்த முன்மொழிவு மீண்டும் நாட்டுக்கு ஒரு பேரழிவை உருவாக்கும்,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு, ஆஸ்ட்ரோ அவானிக்கு அளித்த பேட்டியில், 2021 வரவுசெலவுத் திட்டத்திற்கு அப்பால், எதிர்க்கட்சியுடன் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான சாத்தியத்தைப் பரிசீலிக்கலாம் எனப் பிரதமர் கூறியிருந்தார்.
அரசாங்கத்தின் சில கூட்டங்களில் கலந்துகொள்ள எதிர்க்கட்சியை அழைப்பதும் இதில் அடங்கும் என்று அவர் கூறினார்.
“என்னைப் பொறுத்தவரை, இது ஒரு முதல் படியாகும், ஒவ்வொரு வாரமும் நான் தலைமை தாங்கும் பொருளாதார நடவடிக்கைக் குழு அமர்வில் இணைய எதிர்க்கட்சியை அழைக்கலாம் என்று நினைக்கிறேன்.
“அல்லது நான் ஒவ்வொரு நாளும் தலைமை தாங்கும் கோவிட் -19 சிக்கலைச் சமாளிக்க நடைபெறும் கூட்டங்களுக்கு,” என்று அவர் பேட்டியில் கூறினார்.
இதற்கிடையில், பி.எச். ஆட்சி செய்த 22 மாதங்களில், ஏராளமான சேதங்கள் ஏற்பட்டன என்றும், அவை மக்களைப் பாதித்தன என்றும் ரஸ்லான் கூறினார்.
பி.எச். ஆளும் கட்சியாக இருந்தபோது, அதன் தலைவர்கள் வெளியிட்ட பல திட்டங்கள் மற்றும் முன்மொழிவுகளை ரஸ்லான் மேற்கோள் காட்டினார், இதில் கிரிப்டோ நாணயங்கள், RM30 இ-டொம்பெட் நன்கொடைகள் மற்றும் “பறக்கும் கார்கள்” ஆகியவையும் அடங்கும்.
“பி.எச்.-ஐ மீண்டும் அரசாங்கத்திற்குள் கொண்டுவர முஹைடின் வலியுறுத்தினால், பிரதமர் பதவியை அவர் மாட்சிமை தங்கியப் பேரரசரிடம் திருப்பித் தருவது நல்லது,” என்று அவர் மேலும் கூறினார்.