கிட் சியாங் : பி.கே.பி.பி. பகுதிகளை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்

இஸ்கண்டார் புத்ரி நாடாளுமன்ற உறுப்பினர் லிம் கிட் சியாங், நாளை முதல் பல மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களில், நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை (பி.கே.பி.பி.) அமல்படுத்துவதற்கான முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென மத்திய அரசிடம் வலியுறுத்தினார்.

உயிரைக் காப்பாற்றுவதற்கும் மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றுவதற்கும் இடையில் ஒரு சமநிலை இருக்க வேண்டும் என்று கருதுவதாகக் கூறிய லிம், பி.கே.பி.பி. அமல்படுத்தப்படவுள்ள சில இடங்களில் கோவிட் -19 பாதிப்புகள் குறைவாக உள்ளன அல்லது எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது என்றார்.

எடுத்துக்காட்டாக, ஜொகூரில், மெர்சிங், சிகாமாட் மற்றும் பத்து பாஹாட் ஆகிய மூன்று மாவட்டங்களும் “பசுமை மண்டலங்கள்” (கடந்த 14 நாட்களில் கோவிட் -19 நேர்வுகள் எதுவும் பதிவாகவில்லை)என்று சுகாதார அமைச்சினால் கூறப்பட்டுள்ளதாக லிம் கூறினார்.

அதேசமயம், 40-க்கும் மேற்பட்ட தொற்றுகள் பதிவுடன் அல்லது “சிவப்பு மண்டலம்” என வகைப்படுத்தப்பட்டுள்ளது ஒரு மாவட்டம் மட்டுமே என்றார் அவர்.

“பி.கே.பி.பி. விதிக்கும் முடிவை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்…. கோவிட் -19 தொற்றுநோயைச் சிறந்த நெகிழ்வுத்தன்மையுடன் எதிர்த்துப் போராடிய கடந்த பத்து மாதங்களின் படிப்பினைகளைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

“(நோக்கம்) இந்த நோய்க்கிருமி தவிர, மலேசியர்கள் அவர்களின் வாழ்வாதாரங்களையும் பொருளாதார மீட்சிக்கான நம்பிக்கையையும் சேதப்படுத்தாமல் உயிர்வாழ இது உதவும்,” என்று அவர் கூறினார்.

கோவிட் -19 பரவலைத் தடுக்கவும் மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும் ஜொகூர், மலாக்கா, நெகிரி செம்பிலான், புத்ராஜெயா, பேராக், கெடா மற்றும் திரெங்கானு ஆகிய மாநிலங்களில் பி.கே.பி.பி.யை மீண்டும் அமல்படுத்த அரசாங்கம் நேற்று முடிவு செய்தது.

நேற்று நண்பகல் நிலவரப்படி, செயலில் இருக்கும் கோவிட் -19 நேர்வுகளின் எண்ணிக்கை, நெகிரி செம்பிலான் (389), பினாங்கு (127), கெடா (106), பேராக் (87), திரெங்கானு மற்றும் ஜொகூர் (50), புத்ராஜெயா (32) மற்றும் மலாக்காவில் 12.