போலிஸ் சோதனையைப் பதிவு செய்வது குற்றமல்ல – வழக்கறிஞர் மன்றம்

காவல்துறையினர் சோதனையிடுவதைப் பதிவு செய்வது ஒரு குற்றச்செயல் அல்ல என்று மலேசிய வழக்கறிஞர் மன்றத் தலைவர் சலீம் பஷீர் கூறினார்.

நேற்று, பெட்டாலிங் ஜெயாவைச் சேர்ந்த ஆர்வலர் ராபின் யாப் வென் குயிங்கின் வீட்டில், காவல்துறையினர் சோதனை நடத்தியதைப் பதிவு செய்த மாணவ ஆர்வலர் வோங் யான் கே கைது செய்யப்பட்டமை குறித்து அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

யுஎம் (உமானி) புதிய இளைஞர் சங்கத்தின் அறிக்கையை, தேசத் துரோகச் சட்டம் மற்றும் தகவல் தொடர்பு & பல்லூடகச் சட்டத்தின் கீழ் போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

யாப் உமானியின் தலைவராகவும், வோங் மலாயா பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவராகவும் உள்ளார்.

“இந்தச் சம்பவத்தில் சட்ட நிறுவனம் கவனம் செலுத்துகிறது. காவல்துறையினரின் சோதனையைப் பதிவு செய்வது குற்றமல்ல என்று நாங்கள் முடிவெடுத்துள்ளோம்.

“காவல்துறை அதிகாரி தனது கடமைகளைச் சட்டத்தின்படி நிறைவேற்றும் வரை, அவர்களின் நடவடிக்கையைப் பதிவு செய்வதை எதிர்க்க எந்தக் காரணமும் இல்லை.

“உடல் கேமராக்கள் மற்றும் டாஷ்போர்டுகள் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போன்ற பிற நாடுகளில் உள்ள அமலாக்க அதிகாரிகளால் பயன்படுத்தப்படுகின்றன, இது கடமையில் இருக்கும்போது பொதுமக்களுடனான தொடர்புகளைப் பதிவுசெய்வதற்கான ஒரு முறையாகும், காவல்துறையினரின் தவறான நடத்தைகளை இது தடுக்கிறது,” என்று சலீம் கூறினார்.

அதுமட்டுமின்றி, தேசியக் காவல்துறை தலைவர், அப்துல் ஹமிட் பாடோர், தனது உறுப்பினர்கள் மீதான அவதூறுகளைத் தடுப்பதற்கும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கும் உடல் கேமராக்கள் பயன்படுத்தப்படுவதை வரவேற்றார் என்றும் சலீம் கூறினார்.

சோதனையைப் பதிவு செய்ய வேண்டாம் என்ற போலிஸ் ஆலோசனையைப் பின்பற்றாததால், தண்டனைச் சட்டப்பிரிவு 186-ன் கீழ் வோங் கைது செய்யப்பட்டார்.

பிரிவு 186, அரசு ஊழியர்கள் தங்கள் கடமைகளைச் செய்வதில் இருந்து தடுப்பதைக் குறிக்கிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது RM10,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

முன்னதாக, நேற்று மதியம் 3 மணி முதல், காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்ட வோங், இன்று மதியம் 12.20 மணியளவில் விடுவிக்கப்பட்டார்

முத்தியாரா டாமான்சாரா காவல் நிலையம் முன், ஊடகங்களுடன் பேசிய அவரது வழக்கறிஞர் ராஜ்சூரியன் பிள்ளை, அவர் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார், ஆனால் அவரது தொலைபேசி போலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றார்.

விசாரணை ஒரு மணி நேரத்திற்கும் குறைவாகவெ நடந்தது என்றாலும், 15 மணி நேரத்திற்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டதால் தான் “மனச் சோர்வுடன்” இருப்பதாக வோங் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.