விமர்சனம் | இது, இரண்டு முக்கிய அறிவிப்புகளான, ஜனவரி 2021 வரை பள்ளிகளை மூடுவதுடன், எஸ்.பி.எம்., எஸ்.டி.பி.எம், எஸ்.வி.எம் மற்றும் எஸ்.டி.எ.எம். போன்ற தேர்வுத் தேதிகளில் திருத்தங்கள் தொடர்பானது.
இந்த முக்கிய அறிவிப்புக்கு, கல்வி அமைச்சர் மொஹமட் ராட்ஸி ஜிடின் மற்றும் மலேசியக் கல்வி அமைச்சின் அனைத்து ஊழியர்களுக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, பல்வேறு தரப்பினரின் பல்வேறு எதிர்வினை கருத்துகள் எனக்கு வந்து சேர்ந்தன. கல்வி அமைச்சு பதில் கொடுக்க வேண்டும் என்று நான் கருதும் சில கேள்விகள் என்னிடம் உள்ளன.
இந்தக் கேள்விகள் மக்களின் அன்றாட வாழ்க்கையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துபவை. பொருளாதாரச் சிக்கல்களை எதிர்கொண்டிருக்கும் மக்களுக்குக் கல்வி அமைச்சின் தெளிவற்ற செயல்பாடுகள் மேலும் சுமையாக இருக்கக்கூடாது என்று நான் விரும்புகிறேன்.
முதலாவதாக, பள்ளிகள் மூடப்படும் எனும் கடைசி நிமிட அறிவிப்பு பற்றியது, நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டுக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.பி.) அமல்படுத்தப்பட்ட பிறகு, விடுதிகளில் இருக்கும் பிள்ளைகளை அழைத்துவர, மாநிலங்களைக் கடக்க வேண்டிய பெற்றோர்களுக்கு இது சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற முக்கியமான அறிவிப்பு ஏன் திடீரென வெளியிடப்படுகிறது என்பதுதான் கேள்வி. 2.4 மில்லியன் ஏழைக் குடும்பங்கள் மற்றும் B40 பிரிவினர், பயணச்சீட்டு மற்றும் பயணச் செலவுகளுக்கு உடனடியாகப் பணத்தை எங்குத் தேடுவார்கள்?
இரண்டாவது, நீண்ட காலமாக தங்கள் மனைவி அல்லது கணவரிடமிருந்து விலகி இருக்கும் ஓர் ஆசிரியரின் நிலை என்ன? மூத்த அமைச்சரின் இறுதிகட்ட அறிவிப்பால், அவர்கள் பல முறை பயணச்சீட்டு வாங்க நேர்ந்துள்ளது, இது அவர்களுக்குச் சுமையை ஏற்படுத்தியுள்ளது.
பல மாதங்களாக, தனது துணையைச் சந்திக்காத அவர்கள், தங்கள் ஊர்களுக்குத் திரும்ப அனுமதிக்கப்படுகிறார்களா, குறிப்பாக சபா, சரவாக் மற்றும் தீபகற்பத்திற்கு இடையில் பயணம் செய்ய வேண்டியவர்களுக்கு அனுமதி உண்டா?
36.9 விழுக்காடு மாணவர்கள் வீட்டில் வசதி இல்லை
மூன்றாவதாக, இன்று பள்ளிக்குச் செல்ல முடியாத துணை உணவுத் திட்டத்தை (ஆர்எம்டி) பெற்ற 600,000-க்கும் மேற்பட்ட மாணவர்களின் கதி என்ன?
அரை மில்லியனுக்கும் அதிகமான ஏழை குழந்தைகளுக்கும், ஆர்எம்டி உணவை முழுமையாக நம்பியுள்ள இந்த பி40 சமூகத்தினருக்கும் உதவி செய்ய மூத்த அமைச்சருக்குச் சிறப்பு திட்டங்கள் ஏதும் உள்ளனவா?
நான்காவதாக, பள்ளி மூடப்பட்டதால் இன்று தினசரி சம்பளம் பெறாத 70,000-க்கும் மேற்பட்ட சிற்றுண்டிச்சாலை தொழிலாளர்களுக்கானத் திட்டங்கள் என்ன?
அவர்களில் பெரும்பாலோர் ஏழைகள் அல்லது பி 40 சமூகத்தைச் சேர்ந்தவர்கள், எனவே அவர்களில் பெரும்பாலோருக்கு அரசாங்கத்தின் கவனம் அதிகம் தேவை என்று நான் நம்புகிறேன்.
ஐந்தாவது, இல்லமிருந்து கற்றலுக்கு, வீட்டில் சாதன வசதியில்லாத 36.9 விழுக்காடு மாணவர்களுக்கு கல்வி அமைச்சரின் திட்டம் என்ன? ஆசிரியர்கள் இயங்கலையில் வகுப்புகளை நடத்தும்போது, இம்மாணவர்கள் பின்தங்கிவிட மாட்டார்கள் என்பதை உறுதி செய்வதற்கான மாற்றுத் திட்டங்கள் யாவை?
சாதனங்கள் இல்லை, ஆனால் வீட்டில் இணைய இணைப்புகள் கூட இல்லாத ஏழைக் குடும்பங்கள் மற்றும் பி40 சமூகத்தினரின் நிலை என்ன?
ஆறாவது, பள்ளி திறக்கப்பட்ட பிறகு, இடையில் படிப்பைக் கைவிட்ட மாணவர்களுக்கு மூத்த அமைச்சரின் திட்டங்கள் என்ன?
படிவம் 2 மற்றும் 3 மாணவர்கள், மார்ச் 2021-ல் தான் பள்ளிக்குத் திரும்புவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதன் பொருள் அவர்கள் சுமார் 3 மாதங்கள் வீட்டில் இருப்பார்கள்.
14 வாரங்களுக்கு மாணவர்கள் பள்ளிக்கு வராமல் இருப்பது, 2 வருடங்கள் குழந்தைகள் கற்றலை இழந்ததற்கு சமம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்குப் (பி.கே.பி.) பிந்தைய மாணவர்களின் தரவை கல்வி அமைச்சு பொதுமக்களுக்கு வெளியிடுமா?
கல்வியமைச்சு உளவியல் பரிசோதனையை செயல்படுத்துமா
ஏழாவது, எஸ்.பி.எம். மற்றும் எஸ்.டி.பி.எம். போன்ற முக்கியமான தேர்வுகளுக்கு அமரும் குழந்தைகளுக்கு கே.பி.எம் உளவியல் மற்றும் மன ரீதியிலான சோதனைகளை செயல்படுத்துமா?
பலமுறை, தேர்வு ஒத்திவைப்பு அறிவிப்புகளின் விளைவாக அவர்கள்தான் மிகவும் பாதிக்கப்பட்ட குழு என்று நான் நம்புகிறேன்.
அவர்கள் அமரவிருக்கும் தேர்வுகள் அவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில் முக்கியமானவை. எனது பரிந்துரை என்னவென்றால், கல்வியமைச்சு உடனடியாக, அவர்களுக்கு உளவியல் பரிசோதனையைச் செயல்படுத்த வேண்டும், மேலும் அவர்களுக்கான சிறந்த திட்டங்களை ஆலோசிக்க வேண்டும். நாம் அவர்களுக்கான திட்டங்களை வடிவமைக்கத் தவறியதால் அவர்களின் உந்துசக்தி வீழ்ச்சி அடைந்துவிடக்கூடாது.
இந்தக் கேள்விகள் அனைத்தும், மக்களின் மனக் குமுறல்களாகும் – பொருளாதாரச் சிக்கல்களுடன் போராடும் பெற்றோரிடமிருந்தும், பள்ளியில் படிக்கும் மாணவர்களிடமிருந்தும், இல்லமிருந்து கற்றலுக்கு வசதி இல்லாதவர்களிடமிருந்தும், தேர்வுகளுக்கு உட்கார உந்துசக்தியை இழந்தவர்களிடமிருந்தும், கணவன், மனைவியரிடமிருந்தும் வெகு தொலைவில் உள்ள ஆசிரியர்களிடமிருந்தும், அத்துடன் பள்ளி மூடலால் பாதிக்கப்படும் பள்ளி ஊழியர்களிடமிருந்தும் எழுந்தக் கேள்விகள் இவை.
அவர்களின் ஒட்டுமொத்த திட்டங்கள் என்ன என்பதைக் கல்வியமைச்சர் மக்களுக்கு விளக்க வேண்டும். தகவல்தொடர்பு செயலிழப்பு அல்லது அவர்களுக்கு நல்ல திட்டமிடல் இல்லாததால் குடிமக்களை அமைதியற்ற நிலையில் விடக்கூடாது.
தேசிய ஆசிரியர் சங்கம் (என்.யு.டி.பி), மேற்கு மலேசியா ஆசிரியர் சங்கம் மற்றும் கல்வி தொடர்பான தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் கல்வியமைச்சர் கலந்துரையாட வேண்டும், மலேசியாவில் பெரும்பான்மை ஆசிரியர்களின் குரலைப் பிரதிநிதித்துவப்படுத்துவதால் அவர்களிடம் உள்ள பயனுள்ள உள்ளீடுகளை ஆராய வேண்டும்.
இந்தக் கேள்விகளுக்கு விரைவில் பதிலளிக்குமாறு நான் அமைச்சரிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன். எந்தவொரு திட்டமிடலுக்கும் கல்வியமைச்சுடன் இணைந்து பணியாற்ற நான் தயாராக இருக்கிறேன். மேலும், குழந்தைகளின் உயிரை மட்டுமல்லாமல், அவர்களின் எதிர்காலத்திற்கான கல்வியையும் காப்பாற்ற உறுதிசெய்கிறேன்.
டாக்டர் மஸ்லீ மாலிக், சிம்பாங் ரெங்காம் நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் கல்வி அமைச்சர்