அமெரிக்கத் துணைத் தலைவர் கமலா தேவி ஹாரிஸை, “இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாகக் குடியேறியவரின் மகள் ” என்று கூறியதற்காக டிவி 3 மன்னிப்பு கேட்டுக்கொண்டது.
டிவி 3-ன் செய்தி வாசிப்பாளர் ஒருவர் படித்த அந்த மன்னிப்புச் செய்தி கீச்சகத்திலும் பதிவேற்றப்பட்டது.
“நேற்று ‘புலட்டின் 1.30’ செய்தி அறிக்கையில், அமெரிக்காவின் புதிய துணைத் தலைவர் கமலா ஹாரிஸ் தொடர்பான தவற்றுக்கு மன்னிப்பு கேட்க விரும்புகிறோம்,” என்று டிவி 3 தொலைக்காட்சி நிலையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, ம.இ.கா. மேலவைத் தலைவர் எஸ் வேல்பாரி, இந்த விஷயத்தை முன்னிலைப்படுத்த முன்வந்தவர்களில் ஒருவர்.
கமலாவின் தாயார், ஷியாமலா கோபாலன், தனது 19-வது வயதில் இந்தியாவின் சென்னையில் இருந்து, கலிபோர்னியா பல்கலைக்கழகத்திற்குப் படிப்பதற்காக வந்தவர். அங்கு அவர், கமலாவின் தந்தையைச் சந்தித்து திருமணம் செய்து கொண்டார் என அவர் கூறினார்.
“அவரது தாயார் புற்றுநோயியல் துறையில் ஈடுபட்டிருந்த ஒரு விஞ்ஞானி. விக்கிபீடியாவைப் பாருங்கள்.
“பெண்டத்தாங்” (புலம்பெயர்ந்தோர்) என்ற வார்த்தையை சொல்ல, நீங்கள் ஏன் விரும்புகிறீர்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. இது ஒரு தற்செயலான தவறு என்று நான் நம்புகிறேன்,” என்றார் வேல்பாரி.