அதை ஏன் இரகசியமாக வைத்திருக்க வேண்டும்?

விமர்சனம் | இந்தக் கோவிட் -19 காலகட்டத்தில் அனைத்தும் மோசமான மற்றும் சோகமான செய்திகள் அல்ல.

தொற்றுநோயின் விளைவாக நூறாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களையும், மில்லியன் கணக்கான மக்கள் துன்பத்தில் இருக்கும் நேரத்தில், கிளாந்தான் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களுக்குச் சம்பள உயர்வு கிடைத்தது.

கிளாந்தானின் 45 சட்டமன்ற உறுப்பினர்கள் – 37 பாஸ், 7 அம்னோ மற்றும் 1 பெர்சத்து ஆகிய கட்சி உறுப்பினர்கள் அவர்கள்.

2020-க்கான ஊதிய மசோதா திருத்தம், நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் ஏகமனதான நிறைவேற்றப்பட்டது.

மொத்த அதிகரிப்பு மற்றும் செலவினங்கள் குறிப்பிடப்படவில்லை என்று ஊடக அறிக்கைகள் கூறுகின்றன, ஆனால் முன்னதாக, ஒரு நபருக்கு, மாதம் RM3,000 முதல் RM5,000 வரை என்று மலேசியாகினி செய்திகள் குறிப்பிட்டது.

அதை ஏன் இரகசியமாக வைத்திருக்க வேண்டும்? இது மக்களின் வரி பணம் மற்றும் கிளாந்தான் மாநிலத்தின் வருவாய்.

தேசியப் புள்ளிவிவரத் துறையின் கூற்றுப்படி, சபாவுக்குப் பிறகு, மலேசியாவின் இரண்டாவது ஏழ்மையான மாநிலமாக கிளாந்தான் உள்ளது.

ஆனால், கிளாந்தான் பாஸ் தலைவர்களுக்கு ஒரு போக்கு, திருப்தி உள்ளது. கடந்த ஜனவரியில், பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்திடமிருந்து RM400 மில்லியன் “ஒன் ஆஃப்” உதவி கிடைத்தவுடன் – ஆம், டிஏபியிலிருந்த நிதியமைச்சர் – அவர்கள் தொடர்ந்து 14 சொகுசு மெர்சிடிஸ் பென்ஸ் கார்களை மந்திரி பெசார் மற்றும் ஆட்சிக்குழுவினருக்காக வாங்கினர்.

அதற்காக அவர்கள் RM3.5 மில்லியன் செலவிட்டதாகக் கூறப்படுகிறது. சிலாங்கூர், பினாங்கு போன்ற பணக்கார மாநிலங்கள் தொயோத்தா கேம்ரி கார்களைத்தான் பயன்படுத்துகின்றன.

கடந்த செப்டம்பர் 19 அன்று, கிளாந்தான் மாநிலத்தின் பெருமைமிக்க மகன் – முஸ்தபா முகமது – கோத்தா கினபாலுவில் உரையாற்றிய போது, கிளாந்தானில் வறுமை விகிதம் 12.4 விழுக்காடு அல்லது 42,671 குடும்பங்களுக்குச் சமம் என்றார்.

கிளாந்தான் நீண்ட காலமாக பாஸ் கையில் இருக்கிறது என்று கூறலாம். ஆனால் எப்போதுமே தீபகற்பத்தில் மிக வறிய மாநிலம் என்றால் அது கிளாந்தாந்தான்.

அதனால்தான் நான் சொல்கிறேன், மதம், இனம் மற்றும் நாடு பற்றி கூச்சலிட்டு பேசும் மக்களை நாம் அதிகம் நம்பக்கூடாது.

ஏ காடிர் ஜாசின், தி நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பத்திரிக்கை குழுவின் முன்னாள் தலைமை ஆசிரியர் மற்றும் டாக்டர் மகாதீர் முகமதுவின் ஊடக ஆலோசகர்.