பி.எச். ஜொகூர் : முஹைதீனின் இரு தரப்பு ஒத்துழைப்பு யோசனை, மாநிலத்திற்கும் விரிவுபடுத்த வேண்டும்

தேசியப் பொருளாதார நடவடிக்கை மன்றம் மற்றும் கோவிட் -19 பிரச்சினையில், முஹைதீன் யாசின் முன்மொழிந்த கட்சிக்கு அப்பாற்பட்ட ஒத்துழைப்பு மாநில மட்டத்திற்கும் நீட்டிக்கப்பட வேண்டும் என்று ஜொகூர் பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) கூறியுள்ளது.

இன்று வெளியிடப்பட்ட ஒரு கூட்டு அறிக்கையில், சமீபத்தில் பிரதமர் முன்மொழிந்த அந்தத் திட்டத்தை அவர்கள் வரவேற்பதாக பி.எச். தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில், ஜொகூர் அமானாத் தலைவர் அமினோல்ஹுடா ஹாசன், சையத் இப்ராஹிம் சையத் நோ (மாநிலப் பி.கே.ஆர். தலைவர்) மற்றும் லீயு சின் தோங் (மாநில டிஏபி தலைவர்) ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

தொற்றுநோயைக் கையாள்வதற்கும் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கும் விரிவான பயனுள்ள தகவல்தொடர்பு, ஆலோசனை மற்றும் கலந்துரையாடல் தேவை, அனைத்து தரப்பினரும் இந்தப் பிரச்சினையில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று பி.எச் கூறியுள்ளது.

நவம்பர் 7-ம் தேதி, 2021 வரவுசெலவுத் திட்டத்திற்கு அப்பால் எதிர்க்கட்சிகளுடன் இரு தரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான சாத்தியத்தை அரசாங்கம் பரிசீலித்து வருவதாக முஹைதீன் கூறினார்.

அதே நேரத்தில், பல்வேறு வகையான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைகளால் (பி.கே.பி) நாட்டு மக்கள் களைப்படைந்துள்ளதாகவும் ஜொகூர் பி.எச். தெரிவித்தது.

அது, கோவிட் -19 தொற்றுநோயின் விளைவால் ஏற்பட்ட பொருளாதார சிக்கல்களால் உண்டானது என்று அவர்கள் கூறினர்.

எனவே, நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.பி.) ஒரு மாநிலத்தில் விரிவாக இல்லாமல், மாவட்ட அல்லது நகராட்சி பகுதிகளின் தேவைகளுக்கு ஏற்ப மட்டுமே அமல்படுத்தப்பட வேண்டும் என்று அவர்கள் பரிந்துரைக்கின்றனர்.