‘சபாவுக்கு உடனடி உதவி தேவைபடுகிறது, அடுத்த ஆண்டு அல்ல’

மக்களவை l முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், சபா மக்களுக்கு, குறிப்பாக தேசியப் பராமரிப்பு உதவி (பிபிஎன்) பெறுபவர்களுக்கு, RM1,000 கூடுதல் ரொக்க நிதி வழங்குவதை விரைவுபடுத்துமாறு அரசாங்கத்திற்குத் தனது கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினார்.

அடுத்த ஆண்டு, அம்மாநிலத்திற்கு RM1.25 பில்லியன் பெட்ரோலிய வரி செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் அவர்களில் பெரும்பான்மையினருக்கு உடனடி உதவி தேவை.

“சபாவுக்கு இப்போது உதவி தேவை, அடுத்த ஆண்டு அல்ல,” என்று பெக்கான் எம்.பி.யுமான அவர், இன்று மக்களவையில் 2021 வரவுசெலவு மசோதா குறித்த விவாத அமர்வின் போது கூறினார்.

இன்றுவரை, சபாவில் பி 40 மற்றும் எம் 40 சமூகத்தினரில், 737,797 பிபிஎன் பெறுநர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடையில் குறுக்கிட்ட அஹ்மட் மஸ்லான் (பி.என்- பொந்தியான்), சரவாக், கிளாந்தான் மற்றும் திரெங்கானு மாநிலங்களின் பிபிஎன் பெறுநர்களுக்கும் RM1,000 உதவி வழங்க முடியும் என்று கருதுவதாகத் தெரிவித்தார்.

ஏனெனில், இந்த மாநிலங்களுக்கும் பெட்ரோனாஸில் இருந்து பெட்ரோலிய வரி செலுத்தப்படுகிறது என்று அவர் மேலும் கூறினார்.