அதிகரித்து வரும் செலவுகள் காரணமாக, சிங்கப்பூரில் பணிபுரியும் சில மலேசியர்கள் வீடற்றவர்களாக இருக்க வேண்டியக் கட்டாயத்தில் உள்ளனர் என்ற பத்திரிக்கைச் செய்தியைத் தொடர்ந்து, கிள்ளான் எம்.பி. சார்லஸ் சாண்டியாகோ அரசாங்கத்தை விமர்சித்துள்ளார்.
“இது ஒரு தேசிய அவமானம்.
“சிங்கப்பூரில் உள்ள தனது ‘பொருளாதார அகதிகளை’, மலேசியா கவனித்துக் கொள்ள வேண்டும். தூதரகங்களுக்கு அனுப்பப்படும் கடிதங்களுக்கும் தொலைபேசி அழைப்புகளுக்கும் எந்தவொரு பதிலும் கிடைப்பதில்லை என்று கேள்விப்பட்டேன்,” என்று அவர் கூறினார்.
இந்த விஷயத்தில் தலையிட்டு, உடனடி நடவடிக்கை எடுக்க வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுதீன் உசேனுக்கு அறிவுறுத்த வேண்டுமென, பிரதமர் முஹைதீன் யாசினை சார்லஸ் கேட்டுக்கொண்டார்.
சிங்கப்பூரில் பணிபுரியும், ஏறக்குறைய 100 மலேசியர்கள், ஓர் அறையை அல்லது படுக்கையை வாடகைக்கு எடுக்க முடியாமல், வீடற்றவர்களாக இருக்கின்றனர் என, நேற்று நியூ ஸ்ட்ரெய்ட் டைம்ஸ் வெளியிட்ட அறிக்கைக்குச் சார்லஸ் பதிலளித்தார்.
சராசரி மாத வருமானம் S$ 800 (RM2,441) -லிருந்து S$ 1,400 (RM4,271) வரையில் எனும்போது, மாதத்திற்கு S$ 300-500 இடையில் ஒரு படுக்கை அல்லது S$700-1,200 இடையில் ஓர் அறையை வாடகைக்கு எடுப்பது பலரால் முடியாது என்று, சிங்கப்பூரில் பணிபுரியும் ஷாருதீன் ஹேல் ஹெல்மி மொஹமட் நோஹ் கூறினார்.
மலேசியர்கள் தங்கள் வாழ்வாதாரத்தைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டியதன் காரணமாக சிங்கப்பூரில் சிக்கியுள்ளதாகவும், மலேசியாவுக்குத் திரும்புவதற்கான பயண ஏற்பாடு வசதிகள் (பிசிஏ) இருந்தபோதிலும், சிங்கப்பூரில் தங்கும்படியான கட்டாய விதிமுறைகளை சில முதலாளிகள் வகுத்துள்ளதாகத் தெரிகிறது.
குறுகிய விடுப்பு எடுக்க மட்டுமே அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், மலேசியாவுக்குத் திரும்பும்போது 14 நாள் கட்டாய தனிமைப்படுத்தல் மற்றும் சிங்கப்பூருக்குத் திரும்பும்போது மற்றொரு சுற்று தனிமைப்படுத்தல் ஆகியவற்றால் அவர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கும் என்ற பயத்தால் பலர் பல மாதங்களாக வீடு திரும்பாமல் இருக்கின்றனர்.
இப்படிபட்ட சூழ்நிலைகள் காரணமாக, சில மலேசியர்கள் சாலையோரத்திலோ அல்லது பொது பெஞ்சுகளிலோ தூங்கி, பொதுக் கழிப்பறைகளில் குளிப்பதோடு, அன்றாட உணவைக்கூட பெரும்பாலும் தவிர்த்து வருகின்றனர்.