நாடாளுமன்றம் | மக்களவையில் இன்றைய தொகுதி வாக்களிப்பிற்கு வாரிசான் எம்.பி.க்கள் வருகை தராதது, எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் மீதான அவர்களது விரக்தியைக் காட்ட வேண்டுமென்றே எடுக்கப்பட்ட முடிவாகும்.
கடந்த வாரம், 2021 பட்ஜெட்டிற்கான கொள்கை வாக்கெடுப்பில், எதிர்க்கட்சியின் செயல்பாட்டைத் தொடர்ந்து, வாரிசான் ஒரு “புதிய தலைமைத்துவம்” அக்கூட்டணிக்குத் தலைமை தாங்க வேன்டுமென விரும்புகிறது.
முன்னதாக இன்று, பிரதமர் துறை மற்றும் நிதி அமைச்சுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு குறித்த வாக்குகள், அவைக்குழு மட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
இன்று வாரிசானின் 8 எம்.பி.க்களும் மக்களைவையில் இல்லை.
மலேசியாகினியுடன் பேசிய அக்கட்சியின் எம்.பி. ரோஸ்மான் இஸ்லி, அவரும் அவரது சகாக்களும் கோலாலம்பூரில் இருந்தபோதிலும், பக்காத்தான் ஹராப்பானுக்கு “ஒரு சமிக்ஞை அனுப்ப” வேண்டுமெனக் கருதியதால், வாக்களிப்பு அமர்வுகளைத் தவிர்க்க முடிவு செய்துள்ளதாகக் கூறினார்.
“எதிர்க்கட்சியில் நடப்பதைப் பார்த்து நாங்கள் சோர்வடைந்து இருக்கிறோம்.
“எனவே, இப்போதைக்கு, நாங்கள் தொகுதி வாக்களிப்பில் சேர வேண்டாமென்று முடிவெடுத்துள்ளோம்,” என்று லாபுவான் எம்.பி. கூறினார்.
கடந்த வியாழக்கிழமை பட்ஜெட் 2021 கொள்கை-நிலை வாக்கெடுப்பின் போது, எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு அன்வரிடமிருந்து வந்த “கடைசி நிமிட அறிவுறுத்தல்கள்” குறித்து அவர்கள் விரக்தியடைந்துள்ளதாக ரொஸ்மான் சொன்னார்.
“நாங்கள் இன்னும் எதிர்க்கட்சி முகாமில்தான் இருக்கிறோம், ஆனால் நாங்கள் எதிர்க்கும் தலைமைக்கு ஒரு சமிக்ஞையை அனுப்ப விரும்புகிறோம், நாங்கள் அங்கும் இங்கும் தள்ளப்படுவதை விரும்பவில்லை, அவர்கள் சரியான நகர்வுகளைச் செய்கிறார்கள் என்று நான் நினைக்கவில்லை,” என்றார் அவர்.
‘ஒரு புதியத் தலைமை தேவை’
கடந்த அக்டோபர் 2018-ல், அம்னோவில் இருந்து வெளியேறி, வாரிசானில் இணைந்த ரொஸ்மான், ஒரு “புதிய தலைமை” தேவை குறித்து அழுத்தம் கொடுக்க கட்சி விரும்புகிறது என்றார்.
“தெளிவான நிலைப்பாடு மற்றும் ஒற்றுமை இல்லாமல், அடுத்த பொதுத் தேர்தலில் நாங்கள் போட்டியிட முடியும் என்று நான் நினைக்கவில்லை.
“எனவே, உண்மையான போரை எதிர்கொள்வதற்கு முன், நாங்கள் சில சமிக்ஞைகளைக் கொடுக்க வேண்டும், எதிர்க்கட்சிக்கு ஒரு வலுவான தலைமை தேவை என்பதை அக்கூட்டணியில் உள்ள அனைவரும் உணரும் வகையில் சில நகர்வுகளைச் செய்ய வேண்டும்,” என்று அவர் கூறினார்.
வாரிசானின் 8 எம்.பி.க்கள் தவிர்த்து, இன்று வருகை தராத மற்ற எதிர்க்கட்சி எம்.பி.க்கள் :- சோவ் கோன் இயோ (தஞ்சோங்), கிறிஸ்தினா லியூ (தாவாவ்), மாசீர் கூஜாட் (ஶ்ரீ அமான்) மற்றும் ஆவாங் ஹுசாய்னி சஹாரி (புத்தான்).
மேலும் இன்று, நஜிப் ரசாக் (பெக்கான்), ஜாஹிட் ஹைடி (பாகான் டத்தோ), தெங்கு ராஸாலி ஹம்ஷா (குவா மூசாங்), ரிச்சர்ட் ரியோட் (செரியான்) மற்றும் வில்லி மோங்கின் (புஞ்சாக் போர்னியோ) ஆகிய 5 அரசாங்கத் தரப்பு எம்.பி.க்களும்கூட மக்களவைக்கு வரவில்லை.