கோம்பாக் வாக்காளர்கள் அஸ்மின் அலி மீது வழக்கு தொடர்ந்தனர்

கடந்த பிப்ரவரி மாதம், பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) அரசாங்கம் வீழ்ச்சிக்குக் காரணமான ‘ஷெரட்டன் நடவடிக்கை’ மூலம் மோசடி செய்ததாகவும்,  நம்பகத்தன்மையை மீறியதாகவும் கூறி, கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைச் சேர்ந்த, வாக்காளர்கள் 10 பேர், தங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் அஸ்மின் அலி மீது வழக்குத் தாக்கல் செய்தனர்.

36 முதல் 64 வயதுக்குட்பட்ட அவர்கள் அனைவரும், நவம்பர் 27-ம் தேதி, யோஹேந்திர நடராஜன் சட்ட நிறுவனத்தின் மூலம் இங்குள்ள உயர்நீதிமன்றத்தில் வழக்கைத் தாக்கல் செய்தனர்.

நீதிமன்ற மறுஆய்வு மூலம், இவ்வழக்கு வெள்ளிக்கிழமை, துணைப் பதிவாளர் மஸ்லிண்டா செலாமாட் முன் வைக்கப்பட்டது.

அனைத்து வாதிகளும் தாங்கள் அஸ்மினின் பிரதிநிதித்துவத்தை நம்பியிருந்ததாகவும் அதனால், 14-வது பொதுத் தேர்தலில், பிரதிவாதிக்கு வாக்களித்ததாகவும் கூறினர்.

“பொதுத் தேர்தலின் (ஜிஇ) போது, பிரதிவாதி பி.எச். அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த வாக்குறுதிகளுக்குக் கட்டுப்பட்டவர். எனவே, ஜிஇ-யின் போது, கடுமையாக கண்டனம் செய்த தேசியக் கூட்டணி உறுப்பினர்களுடன், (தற்போதைய) அரசாங்கத்தில் சேருவதன் மூலம், அவர் முழுமையாக மாற முடியாது.

“கொடுத்த வாக்குறுதிகளை மறுப்பதன் மூலம், பிரதிவாதி அரசியலமைப்பு உரிமைகளை மீறியுள்ளார். குறிப்பாக, அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பின் ஒரு பகுதியான நாடாளுமன்ற ஜனநாயகம் மற்றும் பிரதிநிதித்துவ ஜனநாயகம் ஆகியவற்றின் கொள்கைகளை அவர் மீறியுள்ளார்,” என்று அவர்கள் ஓர் அறிக்கையில் தெரிவித்தனர்.

ஆகையால், பிரதிவாதி தனது நம்பகத் தன்மையையும், வாதிகளுக்கு ஆற்ற வேண்டியக் கடமைகளையும் மீறியுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.

  • பெர்னாமா