கெடா எம்பி: சட்டத்தை மீறும்படி தூண்டினால், ம.இ.கா.வைத் தடை செய்ய வேண்டும்

ம.இ.கா. தேசிய முன்னணியின் உறுப்புக்கட்சியாக இருந்தாலும், “சட்டத்தை மீறுவதற்கு மக்களைத் தூண்டுகிறது” என்று கண்டறியப்பட்டால், அக்கட்சி சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்கக்கூடாது என்று கெடா மந்திரி பெசார், முஹம்மது சனுசி மொஹாட் நோர் தெரிவித்துள்ளார்.

ஒரு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக, சட்டத்தை மீறும் நபர்களையோ அல்லது கட்சிகளையோ இந்த அமைப்பு பாதுகாக்கக் கூடாது என்று சனுசி ம.இ.கா.வுக்கு ஆலோசனை கூறினார்.

“எடுத்துக்காட்டாக, கோயில்கள் பிரச்சினையில், அங்கீகரிக்கப்படாத இடத்தில் ஒரு கோயில் கட்டப்படும் போது, ​​அது சட்டத்தை மீறுகிறது.

“சட்டத்தை மீற மக்களைத் தூண்டுவதற்காகதான், ம.இ.கா. ஓர் அரசியல் கட்சியாக நிறுவப்பட்டதா?

“அப்படியானால், இந்த நாட்டில் ம.இ.கா.-வைத் தடை செய்ய வேண்டும், சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கக்கூடாது,” என்று அவர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

கெடா மாநிலம் இனி பல இன சமூகம் வாழ பாதுகாப்பானதாக இல்லை என்று கருதும் கெடா ம.இ.கா.வின் விமர்சனம் குறித்து கருத்து கேட்டபோது சனுசி இவ்வாறு கூறினார்.

இதற்கிடையில், ம.இ.கா. தேசியத் தலைவர் எஸ் ஏ விக்னேஸ்வரன், பாஸ்-ஐ அவதூறாகப் பேசியதுடன், அது சர்வதேச முறைசாரா அமைப்புகளுக்கு ஆதரவளித்து வருவதால், அக்கட்சியை தடை செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

அரசாங்கமாக மாறுவதற்கு முன் நட்பு

“சமூகம் மற்றும் அந்தந்த மதங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதைத் ‘தூண்டுதல்’ என்று பொருள் கொள்ளப்பட்டால், (பின்னர்) பாஸ் கட்சியைத்தான் முதலில் தடை செய்திருக்க வேண்டும்.

“ஏனென்றால், அவர்கள் எதிர்க்கட்சியில் இருந்தபோது, அவர்களுக்கு எதிராக பல புகார்கள் இருந்ததை நாங்கள் கேள்விப்பட்டுள்ளோம், (எடுத்துக்காட்டாக) எப்போதும் சர்வதேசப் பிரச்சினைகளில் ஆர்ப்பாட்டங்கள் செய்வது.

தொடக்கத்தில் இருந்து, பயங்கரவாதம் தொடர்பான சர்வதேச அமைப்புகளைப் பாஸ் ஆதரிப்பதாகப் பலர் கருதுகின்றனர்.

“மற்ற நாடுகளின் இறையாண்மையில் நாம் தலையிடக்கூடாது என்ற மலேசியாவின் நிலைப்பாட்டிற்கு முரணாக, பிற நாடுகளின் பிரச்சினைகளில் தலையிடுவதையும் பாஸ் விரும்புகிறது,” என்று மலேசியாகினி தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.

அதுமட்டுமின்றி, தேசியக் கூட்டணி அரசாங்கத்தில், ம.இ.கா. பாஸ் கட்சியைச் சார்ந்து இல்லை என்றும் விக்னேஸ்வரன் வலியுறுத்தினார்.

“ஆறு மாதங்களுக்கு முன்பு, உங்கள் நிலைமையை மறந்துவிடாதீர்கள். இதுவே பாஸ்-இன் உண்மையான முகம், அரசாங்கமாக மாறுவதற்கு முன்பு நட்பு பாராட்டியது.

“முன்பு அம்னோவுடன் இருந்தது, இப்போது அது பெர்சத்துவுக்கு மாறிவிட்டது. வெளிப்படையாக, பாஸ் பக்காத்தான் ரக்யாட்டை விட்டு வெளியேறியதற்கு நாம் டிஏபி-யைக் குற்றம் சாட்ட முடியாது, ஏனெனில் பாஸ்-இன் நடவடிக்கைகளை நாம் இப்போது நேரிடையாகக் காண முடிகிறது,” என்று அவர் கூறினார்.

மஇகாவைத் தடை செய்ய, விக்னேஸ்வரன் சனுசிக்குச் சவால் விடுத்தார், வெற்றி பெற்றால் நிலைமையை ஏற்றுக்கொள்வதாகவும் அவர் உறுதியளித்தார்.

மேலும், அப்படி செய்யத் தவறினால், மந்திரி பெசார் பதவியை இராஜினாமா செய்ய அவர் தயாரா என்றும், அந்தப் பாஸ் மத்தியச் செயலவை உறுப்பினரை விக்னேஸ்வரன் கேட்டார்.

மத்திய மற்றும் மாநில அரசுகள் கோயில்களுக்கு மானியம் வழங்கவில்லை என்று கூறியது, சனுசி ஒரு “பொய்யர்” என்பதைக் காட்டுகிறது என்று அவர் கூறினார்.

“நீங்கள் எந்த இழப்பீடும் கொடுக்காமல் ஒரு கோவிலை இடிக்கும்போது, ​​அதை நாங்கள் (ம.இ.கா.) கேள்வி கேட்கக்கூடாதா?

“கெடா மந்திரி பெசார் எங்கள் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும் அல்லது வழிபாட்டுத் தளத்திற்கு மாற்று தளத்தை வழங்க வேண்டும். கெடா மந்திரி பெசார் இன்னும் முதிர்ச்சியடையவிலை, முதிர்ச்சியடையாத ஒருவர் மந்திரி பெசார் ஆனால் இதுதான் நடக்கும்.

“தேசியக் கூட்டணியுடன் இணைந்து, பாஸ் (கூட்டு) அரசாங்கம் அமைத்தால், நாட்டில் கோயில்களை இடிக்க மாட்டோம் என்று உறுதியளித்த பாஸ் தலைவரின் (அப்துல் ஹாடி அவாங்) வாக்குறுதி என்ன ஆனது என்று அவரைக் கேளுங்கள்,” என்றும் அவர் கூறினார்.

நேற்று, அலோர் ஸ்டார் மாநகர் மன்றம் (எம்.பி.ஏ.எஸ்.), கோல கெடா, தாமான் பெர்சத்துவில், ஓர் இந்துக் கோயிலை இடித்தது.

மாநில அரசுக்குச் சொந்தமான நிலத்தில் வீற்றிருக்கும், 30 ஆண்டுகால வரலாறு கொண்ட ஶ்ரீ இராஜ முனீஸ்வரன் கோயில், மேம்பாட்டுத் திட்டங்களுக்காக உடைக்கப்பட்டது.

அந்தக் கோயிலைத் தவிர்த்து, ஒரு ‘சீலாட்’ மண்டபம் மற்றும் 5 கார் நிறுத்துமிடங்களும், ஒரு ‘ஃபுட்சால்’ அரங்கு கட்டுவதற்காக உடைக்கப்பட்டன.

இதன் விளைவாக, ம.இ.கா. தேசிய இளைஞர் பொது புகார்கள் பணியகத் தலைவர் சசிதரன் சமூகம் பிள்ளை, மதச் சுதந்திரத்தைக் கடைபிடிப்பது இனி கெடாவில் இயலாது என்று கூறினார்.

எம்.பி.ஏ.எஸ். அலுவலகத்தில் கேட்டபோது, ​​இது மந்திரி பெசார் அலுவலகத்தின் உத்தரவு என்று அவர்கள் கூறினர். இதுகுறித்து எம்பி அலுவலகத்தில் கேட்டபோது, அந்த உத்தரவை ஒத்திவைக்க சொல்லியும், அமலாக்க அதிகாரிகள் பிடிவாதமாக இந்தச் செயலைச் செய்துள்ளதாக எம்பி அலுவலகம் கூறியுள்ளது.

“இது கதையைத் திசைதிருப்பும் ஒரு தந்திரமாகும், இறுதியில் பாதிக்கப்பட்டது இந்துக்கள்.

இவ்வாண்டு தொடக்கத்தில், அலோர்ஸ்டார் இரயில் நிலையத்தில் இருந்த ஒரு கோயில் இடிக்கப்பட்ட பின்னர், மாநில ம.இ.கா.-உடனான கெடா எம்பியின் உறவு மோசமடையத் தொடங்கியது.

கெடா மாநில 2021 வரவுசெலவு திட்டத்தில், முஸ்லிம் அல்லாதக் கோயில்கள் மற்றும் வழிபாட்டுத் தளங்களுக்கு எந்தவிதமான மானியமும் வழங்கப்படாது என்று சனுசி கூறியபோது நிலைமை இன்னும் சிக்கலாக மாறியது.