`அரசாங்கத்தைக் கைப்பற்ற அம்னோ-பாஸ் ஒத்துழைப்பு மட்டும் போதாது’ – அரசியல் ஆய்வாளர்கள்

அரசாங்கத்தை மீட்டெடுக்க பாஸ் ஒத்துழைப்பு மட்டும் போதுமானது என்று அம்னோ நம்பிக்கை காட்டியிருந்தாலும், அரசியல் ஆய்வாளர்கள் இந்த அனுமானத்தில் இன்னும் எச்சரிக்கையாக இருக்கிறார்கள்.

அந்த இலக்கை அடைய அம்னோவுக்கு மற்ற கட்சிகளின் உதவி தேவை என்று சிலர் நம்புகிறார்கள், குறிப்பாக கலப்பு வாக்காளர்களைக் கொண்ட தொகுதிகளில் வெல்வதற்கு.

நேற்று, அம்னோ துணைத் தலைவர் மொஹமட் கலீத் நோர்டின் வெளியிட்ட அறிக்கை குறித்து கருத்து தெரிவித்த இல்ஹாம் சென்டரின் ஆய்வாளர், பேராசிரியர் டாக்டர் ஹமீடின் அப்துல் ஹமீத், சபா மற்றும் சரவாக் மாநிலங்களில், பாஸ் மற்றும் அம்னோ ஒத்துழைப்பை ஏற்றுக்கொள்வது இன்னும் கேள்விக்குறியாக உள்ளது என்றார்.

“கலப்பு வாக்காளர்கள் கொண்ட இடங்கள் மற்றும் நகர்ப்புறங்களில், குறிப்பாக சபா மற்றும் சரவாக்கில் வெற்றிபெற வேண்டுமானால், அவர்கள் கலவையான ஒரு கூட்டணியின் ஒத்துழைப்பைப் பெற வேண்டும்,” என்று மலேசியாகினி தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.

அரசாங்கத்தை மீண்டும் கைப்பற்றுவதே அம்னோவின் தற்போதைய குறிக்கோள் என்றும், பாஸ் உடனான ஒத்துழைப்பால் மட்டுமே அதை அடைய முடியும் என்றும் நேற்று கலீத் வெளிப்படையாகக் கூறினார்.

பெர்சத்து உடனான உறவு சங்கடமளிக்கிறது

தேசியக் கூட்டணி அரசாங்கத்தில், அம்னோ அதிக எண்ணிக்கையிலான (38) இடங்களைக் கொண்டுள்ளது.

பெர்சத்து, பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தில் இருந்தபோது, கையெழுத்திடப்பட்ட முவாஃபாக்கட் நேஷனல் உருவாக்கத்தின் அடிப்படையில் பாஸ்-உடன் பணிபுரிவது மிகவும் வசதியானது என்று அம்னோ உணரக்கூடும் என்று ஹமீட்டின் கூறினார்.

எவ்வாறாயினும், மலாய் பெரும்பான்மை கொண்ட இடங்களில் பாஸ்-உடன் அம்னோ போராட வேண்டிவரும் என்று அவர் கூறினார்.

ஏனென்றால், ஹமீடினின் கூற்றுப்படி, பாஸ் இப்போது இருப்பதைப் போல மூன்று மாநிலங்களை மட்டும் – கிளந்தான், திரெங்கானு, கெடா – தனது கட்டுப்பாட்டில் வைத்துகொள்வதை நிச்சயமாக விரும்பாது.

அம்னோ போட்டியிடும் பகுதிகளிலும், தங்களுக்கு இடங்களை வழங்குமாறு பாஸ் கோரவும் அதிக வாய்ப்பு உள்ளது என்றார் அவர்.

“ஆகவே, கலீத் நோர்டின் மற்றும் அம்னோவில் உள்ள சில தரப்பினர், ஏன் முவாஃபாக்கட் நேஷனலில் பெர்சத்து இருப்பதை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை என்று நான் பார்க்கிறேன்,” என்று அவர் கூறினார்.

முவாஃபாக்கட் நேஷனலின் ஒத்துழைப்பு இன்று வலுவாகக் காணப்படுவதை மறுப்பதற்கில்லை, ஆனால் அந்த வலிமை எதிர்காலத்திலும் தொடர்ந்து இருக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை என்று வட மலேசியப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஓமார் ருஸ்டி கருத்து தெரிவித்தார்.

தேசியக் கூட்டணியின் நிலையைக் காப்பாற்ற, பெர்சத்து இன்று இருக்கும் அமைச்சரவையை அமைப்பதில் சமரசம் செய்ய வேண்டியிருக்கும். எடுத்துக்காட்டாக, அதிக எண்ணிக்கையிலான இடங்களைக் கொண்ட பிற கட்சிகளைப் பாதுகாக்க அமைச்சரவையில் மறுசீரமைப்பு செய்ய வேண்டும்.

இதற்கிடையில், மலேசியத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் அஸ்மி ஹசான் கூறுகையில், பெர்சத்து தலைமையிலான பி.என். தொடர்ந்து உயிர்வாழும் வழிகளைப் பற்றி சிந்திக்க வேண்டும், முவாஃபாக்கட் கூட்டணியின் ஆதிக்கத்தின் கீழ் போகாமல்.

“தற்போது, ​​பி.என்.-இல் பெர்சத்துவின் நிலை வலுவானது, அம்னோ உறுப்பினராக இல்லாவிட்டால் பி.என்.னின் வலு குறைந்துபோகும்.

“அதனால், பி.என். கூட்டணியில் அம்னோவின் பங்களிப்பை உறுதிசெய்வது முக்கியமானது,” என்று அஸ்மி கூறினார்.

தற்போதைய சூழ்நிலையில், பி.என்-ஐ விட முவாஃபாக்கட் நேஷனல் மீது அம்னோ அதிக விருப்பம் கொண்டுள்ளது.

“இது தற்போதைய சூழ்நிலை, ஆனால் மலாய்க்காரக் கட்சிகளின் முதுகெலும்பாக இருக்கப்போவது முவாஃபாக்காட் நேஷனலா அல்லது பி.என்.ஆ என்பதை முடிவு செய்வது பாஸ் கட்சியைப் பொறுத்தது, அம்னோவோ அல்லது பெர்சத்துவோ அல்ல,” என்று அவர் கூறினார்.