‘கெடா பாஸ் முஸ்லிம் அல்லாதவர்களுக்குத் துயரத்தை ஏற்படுத்துகிறது’

பி இராமசாமி | கெடாவில் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மாநிலப் பாஸ் அரசு துன்பத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்து கோயில் உடைப்புகள் தொடர்பாக மக்களைத் தூண்ட முயற்சித்ததாகவும், கெடா பாஸ் அரசு இந்து கோயில்களுக்கு நிதி ஒதுக்கத் தவறியதைச் சுட்டிக் காட்டியதற்காகவும் ம.இ.கா. தடை செய்யப்பட வேண்டும் என்றால், பாஸ்-க்கு என்ன தண்டனை வழங்கப்பட வேண்டும்?

பாஸ் ஒரு மதக் கட்சி மட்டுமல்ல, ஓர் இனவாதக் கட்சியும் கூட.

பெரும்பாலும், உயர்ந்தத் தத்துவப் பேச்சுகள் இருந்தபோதிலும், இனத்திலிருந்து மதத்தைப் பிரிப்பதில் கட்சித் தலைவர்கள் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.

பாஸ், தன்னை ஒரு பக்தியுள்ள இஸ்லாமியக் கட்சியாக சித்தரிப்பதன் மூலம், மலேசியாவில் இஸ்லாத்தை வென்றெடுப்பதோடு, மலாய் இனத்தையும் வென்றெடுப்பதாகக் கருதுகின்றது.

ஓர் இனம் அல்லது மதத்தின் உரிமைகளை வென்றெடுப்பதில் தவறில்லை என்றாலும், மலாய்க்காரர் அல்லாதவர்கள் அல்லது முஸ்லிமல்லாதவர்களின் அடிப்படை அரசியலமைப்பு உரிமைகளைப் பாஸ் பாசாங்குத்தனமாக மறுக்க முடியாது.

உண்மையில், கெடா மந்திரி பெசார் முஹம்மது சனுசி தவறான மரத்தைப் பார்த்து குரைக்கக்கூடாது.

இந்தியர்களைப் பொருத்தவரை, ம.இ.கா. இறக்கவுமில்லை, உயிருடனும் இல்லை.

எந்தவொரு கட்சியும், இந்தியர்களைத் தூண்டிவிட்டு புகழடையச் செய்யவில்லை.

கெடாவில், ஒரு பயனற்ற தலைவர் என்று தன்னை நிரூபித்துள்ள சனுசியின் கவனக்குறைவான கற்பனை இது.

காலராவுக்கும் கோவிட் -19 தொற்றுக்கும் இடையிலான வித்தியாசத்தைக் கூட சனுசியால் சொல்ல முடியாது.

முந்தைய தேசிய முன்னணி மற்றும் பின்னர் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கங்களுடன் ஒப்பிடுகையில், தற்போது மாநிலத்தில் அதிகமான கோயில்கள் இடிக்கப்பட்டதால் இந்தியர்கள் வருத்தமும் கோபமும் அடைந்துள்ளனர்.

நூறு ஆண்டுகளுக்கும் மேலான கோயில்களை அதிகாரிகள் உடைப்பதைப் பார்த்துகொண்டு, இந்தியர்கள் வெறுமனே இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா?

மன்னிக்கவும், இந்தியர்கள் மகாத்மா காந்தியின் மறுபிறவி அல்ல.

சில மாதங்களுக்கு முன்பு, கெடா இரயில் நிலையத்தைவிடப் பழமையான, ஓர் இந்து கோயில் சாலை விரிவாக்கத்திற்காக, சட்டவிரோதமாகக் நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்ற அடிப்படையில் இடிக்கப்பட்டது.

இந்துக்களால் புனிதமாகக் கருதப்பட்ட, நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு பிரம்மாண்டமான, கம்பீரமான மரமும் வெட்டப்பட்டது.

சாலை விரிவாக்கம் என்ன ஆயிற்று? சாலை விரிவாக்கம் எதுவும் அங்கு நடைபெறவில்லை, ஆனால் கோயில் அமைந்திருந்த இடம் மோட்டார் சைக்கிள் பூங்காவாக மாற்றப்பட்டுள்ளது.

கெடா பாஸ் தலைவரும் மந்திரி பெசாருமான சனுசியின் நேர்மையும் நம்பகத்தன்மையும் கேள்விகுறியானது.

இன்றுவரை, பல முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தளங்கள் இடிக்கப்பட்டுள்ளன, மேலும் இடிக்கப்படுவதற்கு அதிகமான தளங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

சட்டம் ஒழுங்கு அல்லது முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தளங்களின் சட்டவிரோதத்தைப் பற்றி பேசும் கடைசி நபராக சனுசி இருக்க வேண்டும்.

ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள், முஸ்லிமல்லாதவர்களுக்குப் பாகுபாடு காட்டவில்லை என்றால், அரசு அல்லது தனியார் நிலங்களில் கோயில்களைக் கட்ட வேண்டிய அவசியம் அவர்களுக்கு ஏன்?

முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தளங்களுக்கு, அரசு நிலம் மற்றும் நிதி ஒதுக்கீட்டை முறையாக வழங்கியிருந்தால், தற்போதைய நிலைமை எழுந்திருக்காது.

அரசு அல்லது தனியார் நிலத்தில் சட்டவிரோதமாக வழிபாட்டுத் தளங்களைக் கட்டுவதை விட, முஸ்லிமல்லாதவர்களுக்கு வேறு வழியில்லை என்று நான் நினைக்கவில்லை.

நாட்டில் உள்ள முஸ்லிமல்லாதவர்களை ஓரங்கட்டியதில் முக்கியமாக பொறுப்பு தேசிய முன்னணி அரசாங்கத்திற்குத்தான், அவர்களுடைய இடங்கள் இடிக்கப்படுவதைப் பற்றி கவலைப்படாமல், கடவுளை ஜெபிக்கவோ வணங்கவோ கூட முடியாது.

கோயில்கள் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்தவை என்றால், நாடு சுதந்திரமடைவதற்கு முன்பே, பாஸ் கட்சி பிறப்பதற்கு முன்பே அவை இருந்திருக்க வேண்டும், பிறகு அவை ஏன் திடீரென்று சட்டவிரோதமாகக் கருதப்பட்டு, இடிக்கப்பட வேண்டியவை என்று குறிக்கப்படுகின்றன?

சனுசி மிகைப்படுத்தி பேசக்கூடாது, மாறாக முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தளங்களின் வரலாற்றைக் கவனமாக ஆராய வேண்டும்.

உள்ளூர் அதிகாரிகளின் அனுமதியுடன், மசூதிகளையும் சூராவ்-வையும் கட்டுவதில் முஸ்லிம்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்றால், இந்துக்களால் இதனை எப்படி செய்ய முடியாமல் போகிறது என்று அவர் ஒரு கேள்வி கேட்டுள்ளார்.

சனுசி மோசமான மறதி நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம், முஸ்லிம்கள் பூமிபுத்ராக்களாக இருப்பதால், அரசியல், பொருளாதாரம் மற்றும் கலாச்சார ரீதியாக நாட்டில் ஒரு முக்கிய, முதன்மையான நிலையை அனுபவிக்கிறார்கள் என்பதை அவர் மறந்துவிட்டு பேசுகிறார்.

ஆனால், கடந்த 60 ஆண்டுகளில் அல்லது அதற்கும் மேலாக, ஆக்கிரமிப்பு இன மற்றும் மத தீவிரவாதத்தை மேற்கொண்ட அரசாங்கங்களால் முஸ்லிமல்லாதவர்களின் உரிமைகள் படிப்படியாக குறைந்துவிட்டன.

முஸ்லிமல்லாதவர்கள் வழிபாட்டுத் தளங்களை நிறுவுவதற்கான நிலத்தையும் ஒப்புதல்களையும் மறுத்துவிட்டு, அவற்றை நிறுவுவதற்கான உரிமைகளை மட்டும் நீங்கள் வழங்குவது விந்தையானது.

இறுதியாக, கெடாவில் உள்ள கோயில்கள் தொடர்பான தற்போதைய விவகாரத்தில், இந்தியர்கள் மற்றும் ம.இ.கா. மீது எந்தவொரு தவறும் இல்லை.

கெடா மாநில முஸ்லிம் அல்லாதவர்களின் துயரத்திற்குத் தற்போதையக் காரணம், பாஸ் கட்சி தலைமையிலான மாநில அரசின் மனநிலைதான்.


பி இராமசாமி பிறை சட்டமன்ற உறுப்பினர், பினாங்கு துணை முதலமைச்சர் (II)