‘உலகளாவிய ஆசிரியர் 2020’ விருதை வென்றவரான இந்தியாவைச் சேர்ந்த ஆசிரியர், ரஞ்சிட்சின் டிசாலே, தான் வென்ற 1 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசை, தனது சகப் போட்டியாளர்களுடன் பகிர்ந்துகொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார்.
அத்தொகையை, மலேசியக் கல்வி திட்டங்களுக்குப் பயன்படுத்தலாம் என்று மலேசியாவைப் பிரதிநித்து இப்போட்டியின் இறுதிசுற்று வரை தேர்வான போட்டியாளர் சாமுவேல் ஏசாயா கூறினார்.
இருப்பினும், இந்தியாவின் பரிதேவாடி கிராமத்தைச் சேர்ந்த அந்த வெற்றியாளர், 50 விழுக்காடு பரிசுத் தொகையை, அவர் உட்பட மற்ற ஒன்பது இறுதிப் போட்டியாளர்களுடன் பகிர்ந்துகொள்வதாக தனிப்பட்ட வாக்குறுதியை மட்டுமே அளித்துள்ளார் என மலேசியாகினி தொடர்பு கொண்டபோது சாமுவேல் தெரிவிதார்.
“நாங்கள் எப்படி, எப்போது அப்பணத்தைப் பெறுவோம் என்று எங்களுக்குத் தெரியவில்லை, ஏனென்றால் இதுவரை அதுதொடர்பான எந்தவொரு எழுத்துப்பூர்வமான ஆவணமும் இல்லை.
“அப்படி அது நடந்தால், நிச்சயமாக என் வேலைக்கு அது உதவும்,” என்று அவர் கூறினார்.
‘செக்கு சேம்’ என அழைக்கப்படும் சாமுவேல், பெறப்படும் அத்தொகை பஹாங் ஓராங் அஸ்லி குழந்தைகளுக்காகச் செயல்படுத்தப்பட்டத் திட்டங்களைத் தொடர பயன்படுத்தப்படும் என்று தெரிவித்தார்..
இந்தியச் செய்தி பிரிவான ‘இந்துஸ்தான் டைம்ஸ்’, டிசாலே மற்ற ஒன்பது இறுதிப் போட்டிகளுக்கும் தலா 55,000 அமெரிக்க டாலர்களைக் கொடுக்க விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறியுள்ளது.
கோவிட் -19 தொற்றுநோய் காலத்தில், அனைத்து ஆசிரியர்களும் எதிர்கொண்டுவரும் சவால்களைத் தொடர்ந்து, தான் இதனை செய்ய முடிவெடுத்ததாக டிசாலே விளக்கினார்.
முன்னதாக, ஓர் ஆங்கில ஆசிரியரான செக்கு சாம் , ஓராங் அஸ்லி சமூகத்திற்கு அவர் ஆற்றியச் சேவைகளைத் தொடர்ந்து, அவ்விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட பின்னர் மலேசியர்களின் கவனத்தை ஈர்த்தார்.