கோவில் இடிக்கப்பட்டதைக் கேட்ட ம.இ.கா.வைத் தடை செய்ய சொன்ன கெடா மாநில முதல்வருக்குக் கண்டனம்

தமிழர் மரபு வழிபாட்டுத் தளத்தை இடித்ததைக் கேட்ட ம.இ.கா.வைக் குறை சொல்லி, தடை செய்ய சொன்ன கெடா மாநில முதல்வருக்கு, மலேசியத் தமிழ்ச் சமயப் பேரவை கண்டனம் தெரிவித்துள்ளது.

காலனித்துவ ஆட்சியில் கட்டப்பட்டதாக நம்பப்படும் பழமை வாய்ந்த மரபுசார் வழிபாட்டு முனீசுவரர் திருக்கோவிலை இடித்து தள்ளியதுடன், அதற்கு நீதி கேட்ட ம.இ.கா.வைத் தடை செய்ய வேண்டும் எனக் கூறும் மாநில முதல்வர் சனுசி முகமட் நோரின் பேச்சு அதிகார அத்துமீறல் கொண்டது என அதன் தலைமைப் பொறுப்பாளர்களின் ஒருவரான பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார்

பாஸ் கட்சியின் ஆட்சியில் இருக்கும் கெடா மாநிலத்தில், இத்தொடர் கோவில் உடைப்பை நியாப்படுத்துவதுடன், தன் தவற்றை மறைக்க ம.இ.கா. ஒரு சட்டவிரோத கட்சி என முத்திரை குத்துவது வேடிக்கையாக இருக்கிறது.

கோவில் உடைப்பது மட்டுமே தீர்வைத் தராது. உண்மையிலேத் தவிர்க்க முடியாத காரணங்களாக இருந்தால், மாற்று நிலம், தேவையான நிதி உதவி, போதுமான கால அவகாசம் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள், சமூதாயப் பிரதிநிதிகள் ஆகியோருடன் முறையாகக் கலந்தாலோசிப்பது போன்ற சுமுகமான முறையில் கையாளப்பட்டிருக்க வேண்டும். அதை விடுத்து, சகட்டுமேனிக்குப் பிற இனச் சமயத் தளங்களில் கைவைப்பதோ, அதற்கு நீதி கேட்பவர்களைக் கலங்கப்படுத்துவதோ முறையல்ல.

“கெடா மாநில முதல்வருக்கு ஒன்றை நினைவுறுத்துகிறோம். நாடு விடுதலை அடைவதற்கு முன்பே, ஏன் உங்கள் பிறப்புக்கு முன்பே ம.இ.கா. எனும் அரசியல் கட்சி இந்த மண்ணின் வளர்ச்சிக்கும், நாட்டு மக்கள் நல்லிண மேன்மைக்கும் அளப்பரியப் பங்காற்றி வருகிறது என்பதை, அண்மையில் பதவியேற்ற நீங்கள் உணர வேண்டும்,” என்ற பாலமுருகன் ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.

“ஏற்கனவே தமிழ்ப்பள்ளிகள், கோவில்கள் எனத் தமிழ் சமூகத்திற்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தை நிறுத்தியதுடன்; முன்பு இதுபோல் வழங்கப்படவில்லை என இவர் பொய்யுரைத்தார்.

“அவரின் அந்தக் கூற்று தவறானது என்று கூறியதுடன், முன்புள்ள அரசு வழங்கியதைத் தக்க ஆதாரத்துடன் மாநில ம.இ.கா. நிறுவியுள்ளது குறிப்பிடத்தக்கது,” என்றார் அவர்.

பல இனம் வாழும் இத்திருநாட்டில் அவரவர் இன, மொழி, சமயம், போன்ற அரசியல் உரிமையைப் புறக்கணிப்பதும், கேவலப்படுத்துவதும், நல்லிணக்கத்தை உருவாக்காது.

மூவின தேசிய ஒருமைப்பாட்டை முன்னிறுத்தி நிர்வாகம் நடத்துவதே நல்ல மாநில முதல்வருக்கு அழகாகும். மாறாக, தன்னின முதன்மை மட்டுமே பெரிதென இயங்குவது முதிர்ச்சியற்ற செயலாகும் என்றும் அவ்வறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

ஆணவமாகவும், தன்முனைப்பாகவும், குறுகியச் சிந்தனையுடனும், பிற இன உரிமையை மதிக்காது செயல்படும் கெடா மாநில முதல்வர், அந்த மாநில மூவின மக்களைப் பிரதிநிக்க தகுதியும் மற்ற கட்சிகளை பற்றி பேச உரிமையும் அற்றவர் என மலேசியத் தமிழ்ச் சமயப் பேரவை தெரிவித்துள்ளது.